Last Updated : 14 Apr, 2018 10:26 AM

 

Published : 14 Apr 2018 10:26 AM
Last Updated : 14 Apr 2018 10:26 AM

கடன் வீட்டை வாரிசுகளுக்கு மாற்றலாமா?

ல்லோரும் ஆசை ஆசையாக எதற்காக வீடு கட்டுகிறார்கள்? வாழும்போது நமக்கென சொந்தமாக ஒரு இடம்; வாழ்ந்தபின் வாரிசுகளுக்கு விட்டுச் செல்ல ஒரு சொத்து என்ற எண்ணம்தானே? பெற்றோர் கட்டிய வீடு, மனை என எந்தச் சொத்தாக இருந்தாலும், அது வாரிசுகளுக்கே சொந்தம் என்பது அறிந்த விஷயம்தான். ஆனால். இந்தக் காலத்தில் வீட்டுக் கடன் வாங்கிதான் பலரும் வீடு கட்டுகிறார்கள். 15 முதல் 25 ஆண்டுகள் வரை தவணைத் தொகையைச் செலுத்துகிறார்கள். அதுவரை அந்த வீடு அடமான வீடுதான். வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட வீட்டை தவணைத் தொகை நிலுவையில் இருக்கும்போது வாரிசுகளுக்கு மாற்ற முடியுமா?

இதை வங்கியில் தெரிவித்தால், நிச்சயமாக முடியாது; நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றே பதில் வரும். ஆனால், சட்டப்படி வாரிசுகளுக்கு மாற்ற வழிகள் இல்லாமல் இல்லை. வீட்டுக் கடன் தொகை நிலுவையில் இருக்குபோது விருப்பப்படி வாரிசுகளுக்கு நிச்சயம் எழுதி வைக்க முடியும் என்று கூறுகிறார்கள் வங்கியில் பணியாற்றி நீண்ட அனுபவம் பெற்றவர்கள்.

ஒரு வேளை உங்களுக்கு இப்படி ஒரு விருப்பம் இருந்தால், அதை முதலில் வங்கியில் எழுத்துப்பூர்வமாக எழுதித் தர வேண்டும். அந்த எழுத்துப்பூர்வமான கோரிக்கையில், ‘வீட்டை வாரிசுகளுக்கு எழுதித் தருவதால் வங்கிக்கு எந்தப் பாதிப்பும், இழப்பும் ஏற்படாது’ என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும். இதன்பின் வங்கியிடமிருந்து ஆட்சேபனை இல்லா கடிதத்தைப் பெற வேண்டும். எந்த வாரிசுக்கு வீட்டை எழுதித் தருகிறோமே அவர் எஞ்சிய வீட்டுக் கடனுக்கான ஜாமீன்தாரர் ஆகிவிடுவார். அந்த சமயம் வீட்டை தருபவர் இணை கடனாளியாக மாறிவிடுவார். இதை சட்ட நடைமுறையாக்கினாலே போதும், வீடு வாரிசுகளின் பெயரில் வந்துவிடும்.

ஆனால், இந்த நடைமுறையைப் பின்பற்ற பெரும்பாலும் எந்த வங்கிகளுமே முன்வருவதில்லை. வீட்டுக் கடன் தொகை நிலுவையில் இருக்கும்போது, அந்த வீட்டை வாரிசுகளுக்கு மாற்றி எழுதித் தர வங்கிகள் மறுப்பதேன்? அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் ஒருவர் பெயரில் வீட்டுக் கடன் வாங்கி, அந்த வீட்டை வாரிசுகளுக்கு எழுதித் தரும் இந்த நடைமுறை மிகவும் நீண்டது. சொத்தை வாரிசுகளுக்கு மாற்றித் தருவதால், இதுவரை வீட்டுக் கடன் தவணைத் தொகையைச் செலுத்தியவர் அதற்கு பொறுப்பாக மாட்டார் என்ற நிலை ஏற்பட்டுவிடுவதால் வங்கிகள் தீவிரமாக யோசிக்கும். அதுமட்டுமல்ல, இடையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், வீட்டுக் கடன் பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம் என்ற கோணத்திலும் வங்கிகள் யோசிப்பதால் தொடக்கத்திலேயே பெரும்பாலான வங்கிகள் இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிடுகின்றன.

ஒரு வேளை வீட்டுக் கடனை வாங்கி வீடு கட்டியவர் கடன் தொகை நிலுவையில் இருக்கும் போதே இறந்துவிட்டால் வங்கிகள் என்ன செய்யும்? எஞ்சிய பணத்தை வாரிசுகளிடமிருந்து வசூலிப்பார்கள் தானே? கிட்டத்தட்ட அதே நடைமுறைதான் வீட்டை வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்வதும்கூட. இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஒருவருக்கு 2 வாரிசுகள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். வீட்டுக் கடன் வாங்கியவர் இடையில் இறந்தால், இருவருமே அந்தக் கடனை அடைக்க வேண்டிய பொறுப்புக்கு ஆளாவார்கள். ஆனால், உயிரோடு இருக்கும்போதே குறிப்பிட்ட ஒரு வாரிசுக்கு சொத்தை பெயர் மாற்றம் செய்வதால், அந்தக் குறிப்பிட்ட நபர் மட்டுமே கடனுக்கு பொறுப்பாளியாகிவிடுவார். இவற்றையெல்லாம் கணக்கிட்டால், பெயர் மாற்றம் என்பதும் சாத்தியமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x