Last Updated : 09 Aug, 2014 12:00 AM

 

Published : 09 Aug 2014 12:00 AM
Last Updated : 09 Aug 2014 12:00 AM

ஜெய்சங்கரும் லட்சுமியும் அமர்ந்த இடம்

என் வாழ்வில் 1970-ம் வருஷத்தை மறக்க முடியாது. அரசு வங்கியில் கிளார்க்காக வேலை பார்த்த நான் 6 வருஷம் கடந்த பிறகு முதன், முதலாக பி.எஃப். கடன் வாங்கினேன்.

ஊழியர் நல நிதியிலும் உறுப்பினராகச் சேர்ந்தேன். சில மாதங்கள் கழித்துக் கடன் வாங்கலாம் என்பதற்காகத்தான் அதில் உறுப்பினரானேன். நாமும் ஒரு வீட்டு மனை வாங்கிப் போடலாமே என்ற ஆசைதான்!

கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தாயாருடன் தனியாக வசிக்க ஆரம்பித்த பிறகு ஆறு வருஷத்தில் நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், கோபாலபுரம் என மூன்று வீடுகள் மாறிவிட்டேன். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை.

சின்னச் சின்ன அசவுகர்யங்கள். தவிரவும் வீட்டுச் சாமன்களை மாற்றி வைப்பதும் மகா கஷ்டமாக இருந்தது.

மேலும் என் உறவினர்கள் எல்லோருக்கும் சொந்த வீடு அல்லது வசதியான ஆபிஸ் குவார்ட்டஸ் வீடாவது இருந்தது. அதனால் எப்படியாவது ஒரு வீட்டு மனை வாங்கி, வீடு கட்டிவிட வேண்டும் என்ற வெறி என்னை ஆக்கிரமித்திருந்தது, குறிப்பாக என் தாயாருக்கு.

அன்றைய நாளில் பிரபலமாக இருந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மூலம் வீட்டு மனை பார்க்கத் தொடங்கினேன். சூளைமேடு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம் என என் பயணம் நீண்டுகொண்டே போனது.

அந்தச் சமயத்தில் என்னுடன் வேலை பாருக்கும் நண்பர் ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு பெசண்ட் நகரில் ஐந்து கிரவுண்ட் மனை இருப்பதாகச் சொன்னார். அவரும் வேறொரு நண்பரும் சேர்ந்து வாங்க இருப்பதாகவும் அதில் ஒன்றரை கிரவுண்ட் இடம் எனக்குத் தருவதாகவும் அந்த நண்பர் சொன்னார்.

அப்போது ஒரு கிரவுண்ட் விலை 28 ஆயிரம். நல்லவேளையாக என் அக்கா கடன் கொடுக்க முன்வந்தார். சித்தி, அக்கா குடும்பத்தினர் என எல்லோரும் நிலத்தைப் பார்த்து ஒப்புதல் அளித்தனர். ஆனால் அவர்களிடம் பரவாயில்லை என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

“அடையாறிலிருந்து இங்கு பஸ்ஸே இல்லை” “ஸ்டேஷனுக்குப் போக ஒரு மணி நேரம் ஆகும்” “கடல் அருகில் இருப்பதால் கதவு, ஜன்னல் எல்லாம் உப்புக் காற்று பட்டு சீக்கிரத்தில் துருப்பிடித்துவிடும்” “மனைக்குப் பின்னால் ஒரு அழுக்குக் குட்டை வேறு இருக்கிறதே” இது போன்ற பல விமர்சனங்களும் உண்டு.

ஒரு வழியாக ஒரு நல்ல நாளில் மனையையும் வாங்கிப் பத்திரப் பதிவும் முடிந்தது. பிறகு பல்வேறு வகையில் வங்கிக் கடனுக்கும் மனுப் போட்டேன். இதற்கிடையில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உறவினர்களையும் அலுவலக நண்பர்களையும் அழைத்து வீட்டு மனையைக் காண்பிப்பேன். எல்லோரும்

ஒரே கருத்தைச் சொல்வார்கள், “கடல் பக்கத்தில் இருக்கிறதே” என்று.இதற்கிடையில் எனக்குப் பதவி உயர்வும் கிடைத்தது. வங்கியும் வீட்டுக் கடன் விதிகளைத் தளர்த்தியது. வங்கிக் கடன் கிடைப்பதால் நானும் வீடு கட்டும் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்தேன்.

புதிதாக ஒரு சாப்பாட்டு அறையையும் இரண்டு படுக்கையறைகளுக்கு நடுவில் ஒரு பாத்ரூமையும் சேர்த்தேன். “வீட்டுக்குள்ள எதுக்குடா பாத்ரூம்? சரி உன் இஷ்டம்” என்றார் சித்தப்பா.

கிணறு வெட்டி அஸ்திவாரம் போட்ட பிறகு கட்டிடப் பணிகளைத் தொடங்கினோம். அந்தச் சித்தப்பாதான் காசு வாங்காத காண்டிரக்டர் ஆனார். ஆனால் அசல் காண்டிரக்டர் ராஜீ என்பவர்தான்.

அந்தக் காலத்தில் சிமெண்ட் விற்பனையில் கட்டு பாடு இருந்தது. சிமெண்ட் வாங்குவதற்குத் தனியாக அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதிச் சீட்டைக் காண்பித்துதான் கடைகளில் சிமெண்ட் வாங்க முடியும். இதையெல்லாம் என் சித்தப்பா சரியாகக் கவனித்துக்கொண்டார்.

இதைச் சொல்லும்போது சுவாரஸ்யமான ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. என் மனையைப் பார்த்த ஒவ்வொருவரும் சொன்ன ஒரு வார்த்தை எனக்கு நினைவுக்கு வந்தது. அப்போது என் சித்தப்பாவிடம், “ பக்கத்தில்தான் கடற்கரையில் இவ்வளவு மண் இருக்கிறதே! நாம் எதற்கு வெளியிலிருந்து மண் வாங்க வேண்டும்?” எனக் கேட்டேன். அவர் என்னை உற்றுப் பார்த்து முறைத்தபடி , “உனக்குப் பாங்க் வேலையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது” என்றார். வேலைக்கு இருந்த சித்தாள்களும் காண்டிரக்டரும் சேர்ந்து சிரித்தார்கள்.

ஒரு வழியாகக் கட்டிட வேலைகள் எல்லாம் முடித்து புதுமனை புகு விழாவும் நடத்த ஆயத்தமானேன். அது ஒரு ஆகஸ்ட் மாத இறுதி. அன்று எங்கள் வீட்டிற்குப் பக்கத்து சாலை வழியாகச் சாரி சாரியாக வாகனங்கள் போய்க் கொண்டிருந்தன. வாகனங்களே வராது எனச் சொல்லப்பட்ட அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த விழாவிற்கு வந்திருந்த உறவினர்களும் நண்பர்களும் “என்னப்பா உன் வீடு அத்துவானக் காடிலிருக்கிறது எனச் சொன்னோம். இப்போது இவ்வளவு ட்ராபிக்?” என்றார்கள். அதற்குள் அந்த இடம் வளர்ச்சி அடைந்துவிட்டதா? எனக் கேட்காதீர்கள்.

அன்றைக்கு பெசண்ட் மாதா கோயிலில் ஏதோ விஷேசம் அதற்கு வந்த கூட்டம்தான் ட்ராபிக்கிற்குக் காரணம்.

இப்போது பல வருடங்கள் கடந்துவிட்டன. நகரமும் பெரிய வளர்ச்சியை அடைந்துவிட்டது. என் வீட்டைப் பொறுத்தவரை ஒரே ஒரு பிரச்சினை தேங்கிக் கிடக்கும் குட்டை மட்டும்தான்.

கடைசியாக ஒரு செய்தி, எங்கள் வீட்டு மனைக்கு ஒரு சினிமாவிலும் நடித்த பெருமை உண்டு. ‘வீட்டுக்கு வீடு’ (பெயரும் பொருத்தமாக இருக்கிறது) படத்தின் ஆரம்பக் காட்சியில் ஜெய்சங்கரும் லட்சுமியும் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார்கள். அந்தப் பின்னணியில் உள்ள இடம் எங்கள் மனைதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x