Published : 14 Apr 2018 10:34 AM
Last Updated : 14 Apr 2018 10:34 AM
செ
ன்னையின் பாரம்பரிய வரலாறு இன்னும் வடசென்னையில்தான் அணையாமல் உயிர்ப்போடு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையின் ஆரம்பக்காலங்களிலேயே மக்கள் விரும்பிக் குடியேறிய பகுதி அதுதான். அந்தக் காலகட்டத்தில் சென்னையின் அடையாளமே வடசென்னைதான்.
இன்று தமிழ் திரைப்படம் வட சென்னை பகுதியை வெட்டும் குத்தும் வன்முறையும் மிகுந்த பகுதியாகத் தொடர்ந்து சித்திரிக்கிறது. ஆனால், அந்த வன்முறை இன்று நேற்று நிகழவில்லை. சொல்லப்போனால் இன்று திரையில் காட்டப்படுவதை விடக் கொடூரமான வன்முறைகள் அங்கு 18-ம் நூற்றாண்டிலேயே அரங்கேறியுள்ளது.
மைசூர் நவாபாக இருந்த ஹைதர் அலிக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே ஓயாமல் போர் அங்குதான் நிகழ்ந்துள்ளது. அந்தப் போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு வெறும் ஆறுதலை மட்டும் அளிக்காமல், அந்த மக்களுக்கு வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி அடைக்கலம் அளித்த சத்திரம் ஒன்று அங்கு இருந்தது.
அந்தச் சத்திரம் இன்றும் நம்மிடையே அந்த நினைவுகளைச் சுமந்து கொண்டு நிற்கிறது. மோனிகர் சத்திரம் என்று அன்று அழைக்கப்பட்ட அதன் அன்றைய பெயரைச் சொன்னால் பலருக்குத் தெரியாது. ஆனால், அதன் இன்றைய பெயரான ஸ்டான்லி மருத்துமனையைச் சொன்னால் அதைத் தெரியாதவர்களே இருக்க வாய்ப்பில்லை.
மோனிகர் சத்திரம்
18-ம் நூற்றாண்டில் நடந்த அந்தப் போரின் பாதிப்புகள் மிகவும் துயர் மிகுந்ததாக இருந்துள்ளது. அது ஏற்படுத்திய உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் சொல்லிலும் எண்ணிலும் அடங்காதது. 1782-ல் மணியக்காரர் என்று அழைக்கப்பட்ட அந்தக் கிராமத்தின் தலைவர் ராயபுரத்திலிருந்த தன்னுடைய தோட்டத்தில் போரில் காயமடைந்தவர்களுக்கு கஞ்சி வழங்குவதற்காக ஒரு சத்திரத்தை நிர்மாணித்துள்ளார். மணியக்காரர் என்பது ஆங்கிலேயர்களால் மோனிகர் என்று உச்சரிக்கப்பட்டதால் அது மோனிகர் சத்திரம் என்று அப்போது அழைக்கப்பட்டது.
விரைவில் அந்தச் சத்திரம் போரில் காயமடைந்தவர்கள் மட்டுமன்றி, நோயாளிகளும் ஏழைகளும் அனாதைகளும் தங்கும் உறைவிடம் ஆயிற்று. போர் நடந்த சமயத்தில் பிளாக் டவுன் என்று அழைக்கப்பட்ட அந்தப் பகுதியில் இருந்த கட்டிடங்கள் அனைத்தையும் கிழக்கிந்திய நிர்வாகம் இடித்துத் தள்ளியது.
ஆனால், அந்தச் சமயத்தில் இந்தக் கட்டிடத்துக்கு மட்டும் அரசாங்கம் விதிவிலக்கு அளித்தது. 1799-ல் ஜான் அண்டர்வுட் எனும் மருத்துவர் அந்தச் சத்திரத்துக்குள் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். அது அப்போது கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று மக்களால் அறியப்பட்டது.
1807-ல் வெள்ளையர்களும் ஆற்காடு நவாபும் அதற்கு பெரும் நன்கொடையைத் தாராளமாக அளித்ததால், அந்த மருத்துவமனை தன் சேவையை நன்கு விரிவுபடுத்தியது. 1808-ல் அந்தச் சத்திரத்தின் நிர்வாகத்தையும் மருத்துவமனையின் நிர்வாகத்தையும் சென்னை அரசு ஏற்று நடத்தத் தொடங்கியது. 1910-ல் அந்த மருத்துவமனை அரசுடைமையானதால், அதன் பெயர் ராயபுரம் மருத்துவமனை என்றானது.
மருத்துவப் படிப்புகள் தொடக்கம்
1933-ல் ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி என்பவர் சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். 1933-ல் அங்கு முதன் முதலாக ஐந்து வருட மருத்துவ படிப்பு (டிப்ளமா இன் மெடிக்கல் & சர்ஜரி) அவரால் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த மருத்துவமனையின் பெயர் ஸ்டான்லி மருத்துவமனையாக 1936-ல் ஜூலை 2-ம் தேதி மாற்றப்பட்டது.
1938-ல் அங்கு 72 மாணவர்கள் மட்டுமே படித்தனர். அந்த எண்ணிக்கை 1963-ல் 150 ஆக உயர்ந்தது. இன்று ஆண்டுக்கு 250 மாணவர்கள் நீட் தேர்வின் அடிப்படையில் அங்கு மருத்துவம் படிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரியாக மட்டுமல்லாமல், தலைசிறந்த மருத்துவமனையாகவும் இன்று அது திகழ்கிறது.
இன்று நம் நாட்டில் மருத்துவத் துறையில் மிகப் பெரிய ஆளுமைகளாகத் திகழ்பவர்களில் பெரும்பாலானோர் இங்குப் படித்துத் தேறியவர்கள்தான்.
அரவிந்த் கண் மருத்துவமனையைத் தோற்றுவித்த கோவிந்தப்பா வெங்கடசாமி, பிளாஸ்டிக் சர்ஜரியில் ஜொலிக்கும் ராமசாமி வெங்கடசாமி, மனநல மருத்துவர் மாத்ருபூதம், அப்போலோ மருத்துவமனையின் பிரதாப் சி ரெட்டி, பத்மபூஷன் விருது பெற்ற நடேசன் ரங்கபாஷ்யம் என்று நீளும் அங்குப் படித்தவர்களின் பட்டியலின் நீளம் மிக அதிகம்.
அங்கு இருந்த சத்திரம் 1910-ல் அருகில் இருந்த வெங்கடகிரி ராஜாவினுடைய சத்திரத்துக்கு இடம் மாற்றப்பட்டது. அது இன்றும் அங்கு ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் உறைவிடமாகத் திகழ்கிறது. அந்தச் சத்திரத்தின் தலைமைப் பொறுப்பு இன்று மாவட்ட ஆட்சியாளரிடம் உள்ளது.
இந்தச் சத்திரத்தில் இருப்பவர்கள் இறந்தபின், அவர்களின் உடல் அவர்களின் உறவினர்வசம் ஒப்படைக்கப்படாது. அந்த உடல் ஸ்டான்லி மருத்துவமனையின் உடலமைப்பியல் துறைவசம் ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்படும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதைப் போல அன்றைய ஆளுநருக்கு மரியாதை செலுத்தும்விதமாகவோ அவருக்குப் பயந்தோ அவர் மனதைக் குளிரச் செய்யவோ அந்த மருத்துவமனையின் பெயர் ஸ்டான்லி என்றானது. அந்தப் பெயர்தான் இன்றும் நம்மிடையே நிலைத்து நிற்கிறது.
அந்த இடத்துக்கும் சத்திரத்துக்கும் மருத்துவமனைக்கும் உரிமையாளரான மணியக்காரரின் பெயர் அந்த மருத்துவமனையின் பெயரிலிருந்து மட்டும் அகற்றப்படவில்லை. அது வரலாற்றிலிருந்தும் மக்கள் மனதிலிருந்தும் சேர்த்தே அகற்றப்பட்டுவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT