Last Updated : 07 Apr, 2018 11:04 AM

 

Published : 07 Apr 2018 11:04 AM
Last Updated : 07 Apr 2018 11:04 AM

இளைஞர்களுக்கான புறநகர்ப் பகுதிகள்

 

செ

ன்னை ரியல் எஸ்டேட் கடுமையான நெருக்கடியில் இருந்து இப்போதுதான் மீண்டு வந்துகொண்டிருக்கிறது. ஆற்று மணல் தட்டுப்பாடு, ஜி.எஸ்.டி. அமல்படுத்தல் போன்ற பல அம்சங்கள் தமிழக ரியல் எஸ்டேட்டுக்கு கடந்தாண்டு நெருக்கடியைத் தந்தன. இந்தப் பாதிப்புகளிலிருந்து தமிழக ரியல் எஸ்டேட் இப்போது மீண்டுவரத் தொடங்கியிருப்பதை அத்துறை தொடர்பான பல தனியார் நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் நிரூபித்தன. இதற்கு முக்கியமான காரணம் மக்களின் வீடு வாங்கும் ஆர்வம்.

இந்த ஆர்வம் நடுத்தர வயதினரைவிட இளைஞர்களிடம் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு ஒன்றின் முடிவு கூறுகிறது. இதில் பெரும்பாலானவர்களின் தேர்வாக இருக்கும் பகுதிகள், சென்னையின் புறநகர்ப் பகுதிகள்தாம்.

சென்னையில் வீடு வாங்க நினைக்கும் இளைஞர்களில் பெரும்பாலானோர், ஐடி துறையில் பணியாற்றுபவர்கள்தாம். அதனால் அவர்களின் தேர்வு, அத்துறை இயங்கும் புறநகர்ப் பகுதிகள்தாம். மேலும் நகருக்குள் வீட்டு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட சூளைமேடு, கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம் போன்ற பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளின் விலை இன்று பல மடங்காக அதிகரித்துவிட்டது. இந்தப் பகுதி மட்டுமல்லாது அசோக் நகர், கே.கே. நகர், வடபழனி போன்ற பகுதிகளிலும் வீட்டு விலை ஏறுமுகமாகத்தான் இருக்கிறது.

இதற்கு மாறாக, சென்னையின் புறநகர்ப் பகுதியில் புதிய குடியிருப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக ‘ஐடி ஹைவே’ என அழைக்கப்படும் ராஜீவ் காந்தி சாலைப் பகுதியில் அதிகமான வீடுகள் கட்டப்பட்டன. அந்தப் பகுதி ஐடி நிறுவனங்களைச் சார்ந்த பணியாளர்களின் வீட்டுத் தேவையை இலக்காகக் கொண்டு புதிய குடியிருப்புத் திட்டங்கள் அங்கு தொடங்கப்பட்டன. பெருங்குடியில் தொடங்கி நாவலூர்வரை இந்தக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. இப்போது அது விரிவடைந்திருக்கிறது.

வேளச்சேரியை அடுத்துள்ள மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பள்ளிக்கரணை, சுண்ணாம்புக்கொளத்தூர் ஆகிய பகுதிகளிலும் கடந்த பத்தாண்டுகளில் மிக அதிகமாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் ஐடி துறையினர் மட்டுமல்லாது சென்னையின் மையப் பகுதியில் பணியாற்றும் பலரும் இங்கே வீடு வாங்கியுள்ளனர். வேளச்சேரி, ஆதம்பாக்கம் பகுதிகளில் வீடுகள் பெருகிவிட்டதால் புழுதிவாக்கம், மடிப்பாக்கம், ரேடியல் ரிங் ரோடு ஆகிய பகுதிகளில் புதிய வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் உருவாகிவருகின்றன.

சென்னையில் ரியல் எஸ்டேட் கொழிக்கும் பகுதியான ஜி.எஸ்.டி சாலையையும் ஓ.எம்.ஆர். சாலையையும் இணைக்கும் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் ரிங் ரோடு சாலையும் இப்போது வீடு வாங்கும் இளைஞர்களின் மையமாக உள்ளது. சென்னையின் அடுத்த வளர்ச்சி மிக்க பகுதி இதுதான் என RECS ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவன அறிக்கை கூறுகிறது. அதுபோல தாம்பரம் பகுதியிலும் புதிய திட்டங்கள் பல தொடங்கப்பட்டு வருகின்றன. படப்பை பகுதியில் ரூ.15 லட்சம் முதல் ஒரு படுக்கையறை வீடுகள் கிடைக்கின்றன எனச் சொல்லப்படுகிறது. தாம்பரத்தை அடுத்து வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரியையும் தாண்டி நீள்கின்றன புதிய குடியிருப்புத் திட்டங்கள்.

தென் சென்னைக்கு அடுத்தபடியாக மேற்குச் சென்னைப் பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் போன்றவை கடந்த சில ஆண்டுகளாகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றுவருகின்றன. அந்தப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மையமாகக்கொண்டே அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவருகின்றன. பெரும்பாலும் இந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழில்நுட்ப, கடைநிலை ஊழியர்கள் போன்ற குறைந்த வருமானம் உடையவர்களை இலக்காகக் கொண்டே ரியல் எஸ்டேட் வளர்ந்து வருகிறது. இது தவிர சென்னையின் மத்தியப் பகுதியில் பணியாற்றும் இளைஞர்களும் இந்தப் பகுதியில் வீடு வாங்குவதைத் தேர்வாகக் கொண்டுள்ளனர். ரூ.10 லட்சத்தில் இருந்து இந்தப் பகுதியில் வீடுகள் விற்பனைக்கு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. வாங்கத் தகுந்த விலை, நெருக்கடி இல்லாத தன்மை, ஆசுவாசமான வாழ்க்கை ஆகிய காரணங்களுக்காக இந்தப் பகுதிகளில் வீடு வாங்க இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x