Published : 21 Apr 2018 10:24 AM
Last Updated : 21 Apr 2018 10:24 AM
2020
-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஓர் ஆண்டில் 4 கோடி முதல் 4.5 கோடி சதுர அடி வரை வணிகப் பகுதிகள் புதிதாக உருவாக வாய்ப்புள்ளது. சமீபத்தில் துறையில் ஏற்பட்ட சீர்திருத்தங்களையும் மீறி நாட்டில் அலுவலகச் சந்தை வளர்ந்துவருகிறது.
பண மதிப்பிழப்பு, ‘ரெரா’, ஜிஎஸ்டி போன்ற முக்கிய சீர்திருத்தங்கள் நாட்டின் குடியிருப்புப் பிரிவுகளைக் கடந்த ஆண்டு கடுமையாகப் பாதித்திருந்தன. ஆனால், மைக்ரோ சந்தைகளில் வணிகப் பிரிவுகள் பெரிய அளவில் வளர்ச்சியடைந்திருக்கின்றன. ‘கோலியர்ஸ் இன்டர்நேஷனல்’ ஆய்வின்படி, 2017-ம் ஆண்டு, சென்னையில் 48 லட்சம் சதுர அடி இடத்தை வணிக அலுவலகங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன.
இந்த அலுவலகச் சந்தையில், பெங்களூரு 1.5 கோடி சதுர அடி பகுதிகளை அலுவலகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி, 36 சதவீத பங்குகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. டெல்லி என்சிஆர் 18 சதவீதம், ஹைதராபாத் 13 சதவீதம், மும்பை 12 சதவீதம், சென்னை 11 சதவீதம், புனே 8 சதவீதம், இறுதியில் கொல்கத்தா 2 சதவீதத்தை அலுவலகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தியிருக்கின்றன.
சென்னை சந்தை
2018-ம் ஆண்டில் ‘கிரேடு ஏ’ அலுவலக பகுதிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று ரியால்டி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, பொறியியல், வங்கி, நிதி போன்ற முக்கியத் துறைகளில் இந்தத் தேவை அதிகரிக்கும். 2018-ம் ஆண்டில் வாடகை தொடர்ந்து அதிகரிக்கும் என்று தெரிவிக்கும் நிபுணர்கள், அது அலுவலகப் பகுதிகளுக்கான விலையைப் பாதிக்காது என்று சொல்கின்றனர். புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் பற்றாக்குறை இருப்பதால் விலையேற்றம் இருக்காது என்று அவர்கள் கணிக்கிறார்கள்.
டைடல் பார்க் (ஓஎம்ஆர்) பகுதியில் ஏற்கெனவே வாடகை அதிகரித்திருக்கிறது. தற்போது ஒரு சதுர அடி ரூ. 100 குத்தகை வாடகைக்கு விடப்படுகிறது. அத்துடன், அண்ணா சாலை ஒரு சதுர அடி ரூ. 120-யைத் தொட்டிருக்கிறது. “மெட்ரொ திட்டங்களின் செயலாக்கம், விமான நிலைய உள்கட்டமைப்பு, புதிய இணைப்புப் புதுத் திட்டங்கள் போன்றவை இந்த ஆண்டு வணிகப் பிரிவு வளர்ச்சிக்கு வழிவகுத்திருக்கிறது” என்று சொல்கிறார் அக்ஷ்யா நிறுவனர் டி. சிட்டி பாபு.
“கடந்த ஆண்டின் வளர்ச்சியை இந்த ஆண்டும் சென்னை எட்டும். ஆனால், விரும்பப்படும் பகுதிகளில் இடமில்லாததால் 50 லட்சம் சதுர அடிக்கு மேல் விற்பனையாகாது. இந்தத் தரமான பகுதிகளுக்கான தேர்வில் சென்னையை ஹைதராபாத் மிஞ்சியிருக்கிறது. குறைவான விலை, செயலூக்கமுள்ள அரசியல் கொள்கைகள், தரமான இடம் போன்ற அம்சங்கள் ஹைதராபாத் முன்னணியில் இருப்பதற்குக் காரணங்களாக உள்ளன. அந்த அம்சங்கள் இங்கே குறைவாக இருக்கின்றன” என்று சொல்கிறார் ஒலிம்பியா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அஜித் குமார்.
பிரபலமான போக்குகள்
அலுவலகம் சார்ந்த பகுதிகளின் வளர்ச்சி 2018-ம் ஆண்டின் பிரபலமான போக்காக இருக்கும். “தானியங்கி, ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் இந்த பகுதிகளில் கவனம் செலுத்தும். மொத்தப் பரிவர்த்தனைகளில் சிறிய ஒப்பந்த அளவுகளின் தாக்கத்தைச் சந்தைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று சொல்கிறார் சென்னை நைட் ஃப்ராங்க் இந்தியாவின் இயக்குநர் காஞ்சனா கிருஷ்ணன். நடுத்தர, பெரிய அளவிலான அலுவலக பகுதிகளுக்கான தேவையும் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“சென்னை தொடர்ந்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஈர்க்கும். அத்துடன், பெரிய நிறுவனங்களின் நிர்வாக அலுவலகங்களை சென்னையில் அமைப்பதற்கான முதலீடுகள் செய்யப்படும். இவர்களின் தேவைகளை நிறைவேற்றப் போதுமான அலுவலக பகுதிகளைச் சென்னையில் உருவாக்க வேண்டியிருக்கும்” என்று சொல்கிறார் சிட்டிபாபு.
வளர்ந்துவரும் பகுதிகள்
பல்லாவரம் துரைப்பாக்கம் சாலை (பிடிஆர்) இதில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த இடம் ஒஎம்ஆர், விமான நிலையத்துக்கு அருகில் இருப்பது கூடுதல் வசதியாக இருக்கிறது. மவுண்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையும் (எம்பிஆர்), பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையுடன் போட்டிபோடுகிறது. “இரண்டு பகுதிகளிலுமே தற்போது சவால்கள் இருந்தாலும் அவை விரைவில் வளர்ச்சியடைவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன” என்று சொல்கிறார் ‘ஆஃபீஸ் சர்வீஸஸ் (சென்னை)’, ‘கோலியர்ஸ் இன்டர்நேஷனல் இந்தியா’
இயக்குநர் ஷாஜு தாமஸ். இதில் மற்ற மைக்ரோ சந்தைகளான சிபிடி, கிண்டி, ஒஎம்ஆர் போன்ற பகுதிகளும் வளர்ச்சி அடையும். ஆனால், ஜிஎஸ்டி சாலையில் எந்த முன்னேற்றமும் இன்னும் ஏற்படவில்லை.
அடுத்த என்ன?
அடுத்த ஐந்து ஆண்டுகளில் வணிகப் பிரிவு எப்படிச் செயல்படும் என்று ரியால்டி துறையினர் நினைக்கிறார்கள்?
2020-ம் ஆண்டுக்குள் இந்திய நகரங்கள் ஓர் ஆண்டில் 4 கோடி முதல் 4.5 கோடி சதுர அடி வரை வணிக பகுதிகளை உருவாக்கும் என்று ‘குஷ்மேன் அண்ட் வேக்ஃபீல்ட்’ அறிக்கை தெரிவிக்கிறது. ‘ஸ்மார்ட் நகரங்கள் திட்டம்’, ‘அனைவருக்கும் 2020க்குள் வீடு’ போன்றவை துறைக்குத் தேவைப்படும் வளர்ச்சியை வழங்கும்.
© தி இந்து ஆங்கிலம்
சுருக்கமாகத் தமிழில்: என். கௌரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT