Published : 24 Feb 2018 10:40 AM
Last Updated : 24 Feb 2018 10:40 AM
சொ
ந்த வீட்டுக்காரர்களுக்கு ஒரு வீடு; வாடகை வீட்டுக்காரர்களுக்கு ஊரெல்லாம் வீடு என்று பெருமை பேசும் வாடகை வீட்டுக்காரர்கள் நிறையப் பேர் உண்டு. சென்னை போன்ற பெருநகரங்களில் வீட்டு உரிமையாளரும், வாடகைதாரரும் வீட்டு ஒப்பந்தம் போட்டுக் கொள்வதைக் காண முடிகிறது. ஆனால், பிற மாவட்டங்களில் வீட்டு ஒப்பந்தம் செய்துகொள்வது மிகவும் குறைவே.
வீட்டு ஒப்பந்தம் என்பது வீட்டு உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும் பாதுகாப்பு அளிக்கக்கூடிய அம்சம். வாடகை வீட்டு ஒப்பந்தம் தயார் செய்வது எப்படி? அதில் என்னென்ன தகவல்கள் இடம் பெற வேண்டும், எப்போது வாடகை வீட்டுக்கு வருபவர்களும் வீட்டு உரிமையாளரும் ஒப்பந்தம்போட்டுக் கொள்வது அவசியம்?
வாடகைதாரருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு வீட்டைக் காலி செய்யும் நிலை ஏற்பட்டால், வாடகைக்கு இருப்பவர் ‘என்னிடம் இவ்வளவு ரூபாயை வீட்டு உரிமையாளர் அட்வான்ஸ் வாங்கிவிட்ட’தாகப் புகார் கூற வாய்ப்புண்டு. வீட்டு உரிமையாளரோ, ‘வாங்கிய அட்வான்ஸைவிடக் குறைவாகக் கொடுத்த’தாகவும் சொல்ல வாய்ப்பு உண்டு. யார் சொல்வது உண்மை என்பதில் குழப்பம் வந்துவிடும். எனவே, வீட்டு வாடகை ஒப்பந்தம் போட்டுக்கொள்வது நல்லது.
20 ரூபாய் முத்திரைத்தாளை வாங்கி, வீட்டு வாடகை அட்வான்ஸ், மாத வாடகை எவ்வளவு என்பதை எல்லாம் எழுதி ஒப்பந்தமாகப் போட்டுக்கொள்ளலாம். பொதுவாக, வீட்டு உரிமையாளர்கள் 11 மாதங்களுக்குத்தான் ஒப்பந்தம் போடுவார்கள். ஓராண்டுக்கு மேற்பட்ட ஒப்பந்தம் என்றால், சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டியிருக்கும். அதற்குப் பணமும் நேரமும் செலவாகும். எனவே, 11 மாதங்களுக்கே பெரும்பாலும் ஒப்பந்தம் போடப்படுகிறது. பின்னர், ஒவ்வொரு 11 மாதங்களுக்குப் பிறகும் ஒப்பந்தத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.
முறைப்படியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், சார்பதிவாளர் அலுவலகம் மூலமும் ஒப்பந்தமும் போட்டுக் கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்தைப் பொதுவாக 3 ஆண்டுகள் முதல் 10, 15 ஆண்டுகள்வரை போட்டுக் கொள்ளலாம். ஒப்பந்தத்தில் அட்வான்ஸ், வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால், அதையும் குறிப்பிட வேண்டும். இதற்குச் சுமார் ஒரு சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
ஒரு வேளை ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய விரும்பினால், இரு தரப்பும் சேர்ந்துதான் செய்ய முடியும். தனியாக ஒருவரால் மாற்றங்களைச் செய்ய முடியாது. எனவே, தொடக்கத்திலேயே தேவையான எல்லா விஷயங்களையும் ஒப்பந்தத்தில் சேர்ப்பது மிகவும் நல்லது. குறிப்பாக, வாடகைதாரர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்குக் கால அவகாசத்தை உரிமையாளருக்கு கொடுக்க வேண்டும்.
இது வாடகைதாரருக்கும் பொருந்தும். ஒரு வேளை வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்யச் சொன்னாலும், இதே அளவு கால அவகாசத்தை வழங்க வேண்டியிருக்கும். சிலர் மூன்று மாதங்களுக்குக் கால அவகாசம் தர வேண்டும் எனப் பரஸ்பரம் ஒப்பந்தம் போட்டுக்கொள்வதும் உண்டு. இந்த விஷயத்தை தொடக்கத்திலேயே தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிடுவது நல்லது. வீட்டை உள்வாடகைக்கு விடுவது பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. இதுபற்றித் தொடக்கத்திலேயே ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
பொதுவாக, வீட்டு உரிமையாளர்கள் 5 முதல் 10 மாத வாடகையை முன் பணமாகப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், 2015-ல் சென்னையில் சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், ‘வீட்டு வாடகைக்கு ஒரு மாதம் அட்வான்ஸ் கொடுத்தால் போதும்’ என்று ஒரு வழக்கில் உத்தரவிட்டது. எனவே, இந்த விஷயத்தில் சட்டப்பூர்வமாக விசாரித்து, அட்வான்ஸ் தொகையைப் பெறுவது நல்லது.
சில வீட்டு உரிமையாளர்கள் ஒவ்வோர் ஆண்டும் வீட்டு வாடகையை உயர்த்துவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வேண்டுமானால், வாடகையில் மாற்றம் செய்துகொள்ளலாம். அதே நேரம் வீட்டைப் புதுப்பித்தாலோ, கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தாலோ வாடகையைச் சற்று அதிகரிக்கத் தடை இல்லை. இந்தத் தகவலையும் ஒப்பந்தத்தில் சொல்லலாம்.
இதேபோல வீட்டில் ஏற்கெனவே உள்ள வசதிகள் குறையும்போது வாடகையைக் குறைக்கச் சொல்லியும் வீட்டு உரிமையாளரை வாடகைதாரர் கேட்கலாம். உதாரணமாக, தினசரித் தண்ணீர் வந்த நிலையில் தந்த வாடகையை, ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வரும்போது வாடகையைக் குறைக்கச் சொல்லியும் கேட்கலாம். இப்படிக் கேட்க வாடகைதாரருக்கு உரிமை உண்டு. முடிந்தால், இந்த விஷயங்களையும் ஒப்பந்தத்தில் சேர்க்கலாம். வாடகைக்குப் குடியிருப்பவர் அட்வான்ஸ் தொடங்கி மாத வாடகைவரை அனைத்துக்கும் வீட்டு உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம்.
இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதி வாங்கிக் கொண்டாலே போதுமானது. தேவைப்பட்டால் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி அதில் கையெழுத்து வாங்கிக் கொள்ளலாம். வீட்டு வாடகை வரிச்சலுகை பெறவும் இது உதவும்.
வாடகைக்கு இருப்பவர் வீட்டைச் சரியாகப் பராமரிக்காமல் விட்டாலோ அல்லது சேதம் ஏற்படுத்தினாலோ வீட்டின் உரிமையாளர் இழப்பீடு பெற்றுக் கொள்ள வழி இருக்கிறது. இந்த விஷயத்தையும் வீட்டு ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட்டால் நல்லது.
வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகையோ அட்வான்ஸோ நியாயமானது இல்லை என்று எண்ணினால் சென்னைவாசிகள் உயர் நீதிமன்ற வளாகத்திலிருக்கும் சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள் முன்சீப் நீதிமன்றங்களை அணுகலாம். வாடகைதாரர் - உரிமையாளர்களின் உரிமைகள் குறித்து ‘வீட்டு வாடகைச் சட்டம் - 1960 விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அதன்படி இருவரும் நடந்தால், பிரச்சினைக்கு வேலையே இருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT