Published : 02 Aug 2014 09:30 AM
Last Updated : 02 Aug 2014 09:30 AM
பழங்கால வீடுகளின் அடையாளமாக இருந்த பளபளப்பும் குளிர்ச்சியும் மிக்க சிவப்புநிறத் தரைகளை மறந்து பல ஆண்டுகளாகிவிட்டன. டைல்ஸ், மார்பிள், கிரானைட் எனப் பலவிதமான தரைகள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும் அந்தக் கால ரெட் ஆக்சைடு பூசிய தரைகள்தான் மலிவானவையாகவும் நீடித்த உத்தரவாதம் தருபவையாகவும் உள்ளன எனக் கட்டிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
சுற்றுச்சூழல் நலத்தைப் பாதிக்காத வகையில் கட்டிடங்களைக் கட்டுவதில் புகழ்பெற்ற கட்டிடவியல் நிபுணர் கே.ஜெய்சிம் இன்னமும் ரெட் ஆக்சைட் கொண்டு தரைத்தளத்தை அமைப்பதில் நம்பிக்கை வைத்துள்ளார். குறிப்பாக வீட்டின் கட்டுமானச் செலவை ரெட் ஆக்சைடு தரை பெருமளவில் குறைப்பதாகவும் கூறுகிறார். வண்ண சிமெண்டைக் கொண்டு தரைத்தளம் அமைக்கும் தொழில்நுட்பத்தை இன்றைய தொழில்நுட்பத்திற்கேற்ப மேம்படுத்தினால் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள் என்ற நம்பிக்கையும் அவருக்கு உள்ளது.
இந்த ரெட் ஆக்சைடு தொழில்நுட்பம் எப்போது மதிப்பிழந்து போனது?
தரைத்தளப் பொருட்கள் புதிதுபுதிதாக அறிமுகம் காணும்போதெல்லாம் ரெட் ஆக்சைடு தொழில்நுட்பம் விளிம்புக்குத் தள்ளப்பட்டதாகக் கூறுகிறார் சத்ய பிரகாஷ் வாரணாசி. நகர்ப்புறச் சூழ்நிலையில் ரெட் ஆக்சைடு தரைத்தளங்களை அமைப்பதற்கு அதிக அவகாசம் தேவைப்பட்டதால் வேகமாக அத்தொழில்நுட்பம் பின்னுக்குச் சென்றதாகக் கூறுகிறார். அத்துடன் இத்தொழில்நுட்பத்துக்குத் திறன் படைத்த தொழிலாளிகளும் அவசியம் என்கிறார்.
அதனாலேயே எளிதாகத் தரைத்தளம் போட உதவும் கிரானைட் கற்கள், பளிங்குகள், விட்ரிபை டைல்களைக் கட்டுமான நிறுவனங்கள் நாடத் தொடங்கிவிட்டன. ஆனால் தற்போது கட்டிடங்களின் தரைகளை அலங்கரிக்கும் அத்தனை பளபளப்புகளுக்கும் அதிகபட்சமாக எரிபொருள் ஆற்றலும், பணமும் செலவழிக்கப்படுகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சத்ய பிரகாஷ் வாரணாசி இப்போதும் தான் வடிவமைக்கும் வீடுகளில் ரெட் ஆக்சைடு தரைத்தளங்களையே அமைக்கிறார்.
சிமெண்டின் பங்கு
இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட தரைகளில் பூசப்பட்ட ரெட் ஆக்சைடு தொழில்நுட்பத்தையும் இப்போது பயன்படுத்தப்படும் ரெட் ஆக்சைடு முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்கிறார் பி.எஸ்.பூஷன். 25 ஆண்டுகளுக்கு முன்பு மைசூரில் கட்டப்பட்ட பூஷனின் வீட்டின் தரைத்தளத்தில் இன்னமும் பளபளப்பு மாறவில்லை. ஆனால் அவர் தற்போது அமைக்கும் வீடுகளின் ரெட் ஆக்சைடு தரைத்தளம் இதைப் போன்ற பளபளப்பில் இருப்பதில்லை. “சிமெண்டாக இருந்தாலும்,
குல்பர்க்கா உயர்தர சுண்ணாம்பாக இருந்தாலும், அதே ஆக்சைடு பவுடராக இருந்தாலும் அப்போது கிடைத்த தரத்தில் இப்போது இல்லை. இன்று தயாரிக்கப்படும் உயர்தர சிமிண்ட் சீக்கிரமே இறுகிவிடும் இயல்புடையது. அதேவேளையில் சீக்கிரம் நிறம் மங்கும் தன்மையும் அதில் உண்டு. ஆக்சைடு பவுடரை இதில் கலக்கும்போது பழைய சிமெண்டைப் போல இறுகுவதற்கு அதிகநேரம் பிடிப்பதில்லை. அதனால் முன்பு கிடைத்த நிறத்தையும் பார்க்க முடியாது. நிறம் மங்குவதால் வெள்ளைத் திட்டுக்களும் ஏற்பட்டு விடும்” என்கிறார்.
இப்படியான வேதி/ தொழில்நுட்பக் குறைபாடுகளை இயற்கைப் பொருட்கள் சிலவற்றை உபயோகிப்பதன் மூலம் சரிசெய்துவிட முடியும் என்கிறார் பூஷன். “இலங்கையில் தரைத்தளங்களுக்கு இன்னும் ரெட் ஆக்சைடு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பெரிய பரப்பில் உள்ள தரைத்தளங்களுக்கு நவீன கால சிமெண்ட் சீக்கிரமே இறுகிவிடுவதால் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் உஷ்ணமும் வெளிப்படும். சாதாரண சிமெண்ட் அல்லது உலைச்சாம்பலில் ஆக்சைடைக் கலந்தால் பிசுபிசுப்பில்லாமலும், தொழிலாளர்கள் கையாள்வதற்கு ஏற்றதாகவும் இருக்கும். சுண்ணாம்புத்தூளைக் கலந்தால் சிமெண்ட் வேகமாக இறுகுவது தவிர்க்கப்படும். இதனால் மேற்பூச்சு நன்றாக இருக்கும். பெரிய பரப்பில் தரைத்தளத்தை அமைக்கும்போது இடையில் கோடுகளை இடுவதன் மூலம் விரிசலைத் தவிரக்கலாம்” என்கிறார் பூஷன்.
அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட ரெட் ஆக்சைடு தரைகளில் பலவகை வண்ணங்களுக்காகப் பெரிய மெனக்கெடலை அக்காலத்தில் செய்துள்ளதாகக் கூறுகிறார் பூஷன்.
ரெட் ஆக்சைடு தரைகளைப் பொறுத்தவரை நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர் ஒருவரே விரிசல் இல்லாமல் பூசமுடியும்.
கட்டுப்படியாகுமா?
வீடுகளில் தரைத்தளத்திற்குப் பயன்படுத்தப்படும் கிரானைட் கற்களின் விலையில் மூன்றில் ஒரு பங்குவிலைதான் ரெட் ஆக்சைடு தரைக்கு ஆகும். ஆனால் தொழிலாளர் கூலி மட்டும் கொஞ்சம் அதிகம் ஆகும். திறந்த இடங்களிலோ, ஈரமான பகுதிகளிலோ ரெட் ஆக்சைட் தளங்களை இடுவதைத் தவிர்க்க வேண்டும். சுண்ணாம்பும், மெக்னீசியமும் நேரடி சூரிய ஒளியைத் தாங்காது.
ரெட் ஆக்சைடு தரைகள் ஒரு மகத்தான காலகட்டத்தை நினைவூட்டுவதாக உள்ளன. தென் இந்தியாவில் குறிப்பாகக் கேரளம், கர்நாடகம், தமிழ்நாட்டில் உள்ள பழைய வீடுகளில் பவளக்கற்களைப் போல இத்தரைகள் பளபளப்பதைப் பார்க்க முடியும்.
சரியான முறையில் கவனத்துடன் ரெட் ஆக்சைடு பூசினால் உங்கள் வீட்டையும் ஒரு பிரத்யேக அழகனுபவமாக மாறமுடியும்.
தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: ஷங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment