Published : 10 Feb 2018 11:26 AM
Last Updated : 10 Feb 2018 11:26 AM
வீ
ட்டுக் கடன் வாங்கி சொந்த வீடு வாங்கியிருக்கிறீர்களா? ஒவ்வொரு மாதமும் தவணைத் தொகையைச் (இ.எம்.ஐ.) செலுத்திக்கொண்டிருக்கிறீர்களா? புதிதாக வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு வீட்டுக் கடனை குறைந்த வட்டியில் வங்கிகள் தரும்போது, அதே வட்டியில் ஏன் நமக்கு மட்டும் வங்கிகள் தருவதில்லையே என நீங்கள் நினைத்திருக்கலாம். இனி, நீங்களும் புதிதாக வீட்டுக் கடன் வாங்கியவர்களைப் போலவே இஎம்ஐ செலுத்தும் வாய்ப்புக் கிடைக்க வழி ஏற்பட்டிருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ‘கடனுக்கான வட்டிவிகிதம் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் கண்டிப்பாக எம்எல்சிஆர் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும்’ என வணிக வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு, தற்போது புதிதாக வெளியிட்ட அறிவிப்பைப் போலத் தெரிந்தாலும், அது உண்மையில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ரிசர்வ் வங்கி எம்.எல்சி.ஆர். மூலம் கடனுக்கான வட்டிவிகிதம் கணக்கிடும் முறையை அறிமுகம் செய்துவிட்டது. இந்த நடைமுறையைப் பின்பற்றிய பிறகு, வீட்டுக் கடனுக்கான வட்டிவிகிதம் குறைந்தது. பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. உள்ளிட்ட சில வங்கிகள் இந்த முறையில் வீட்டுக் கடனை வழங்கி வருகின்றன.
இந்த வட்டிக் குறைப்பு அனுகூலம் 2016-ம் ஆண்டு ஏப்ரலுக்கு பிறகு கடன் வாங்கியவர்கள் மட்டுமே கிடைத்துவந்தது. இதற்கு முன்பு வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு பழைய நடைமுறையான ‘பேஸ் ரேட்’ மூலம் வட்டி விகிதம் நிர்ணயம் செய்வது பின்பற்றப்பட்டதால் வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறையவில்லை. இனி வீட்டுக் கடனுக்கான வட்டிவிகிதம் எம்.எல்.சி.ஆர். மூலம் கணக்கிடப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதால், 2016-க்கு முன்பு வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கும் வட்டிவிகிதம் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சரி, எம்.எல்.சி.ஆரை நடைமுறைப்படுத்தினால் எப்படி வட்டி விகிதம் குறையும்? ஒரு காலத்தில் ‘பிரைம் லெண்டிங் ரேட் (அதாவது, பிரமாணக் கடன்களுக்கான வட்டி விகிதம்) மூலமே வீட்டுக் கடன், வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு ‘பேஸ் ரேட்’ (அடிப்படைக் கடன் வட்டி விகிதம்) அடிப்படையில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது, ‘மார்ஜினல் காஸ்ட் (செலவு), லெண்டிங் ரேட்’ - எம்.எல்.சி.ஆர். என்கிற கடன் வட்டி விகிதம் பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் வங்கிகளுக்கு டெபாசிட் உள்ளிட்ட நிதி திரட்டுவதற்கு ஆகும் செலவினங்களைக் கணக்கிடும்போது சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சொல்லிவிட்டது. இந்தப் புதிய நடைமுறையின் காரணமாகத்தான், 2016-ம் ஆண்டுக்குப் பிறகு வீட்டுக் கடன், வாகனக் கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதம் குறைந்தது.
இந்த நடைமுறையைப் பின்பற்றுவதிலும் பல வங்கிகள் பாராமுகம் காட்டின. அதன் காரணமாகவே எம்.சி.எல்.ஆர். நடைமுறையை ரிசர்வ் வங்கிக் கொண்டுவரவும் காரணமானது. பொதுவாக ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை (வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகியக் கால கடன்களுக்கான வட்டி விகிதம்) கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைத்து வந்திருக்கிறது அல்லவா? ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்கும்போது வணிக வங்கிகளுக்கு ஆதாயம் கிடைக்கும். அந்த ஆதாயத்தை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கும் அளிக்க வேண்டும் அல்லவா? ஆனால், ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டைக் குறைத்தாலும் பல வங்கிகள் வட்டிக் குறைப்பை செய்வதில்லை.
இந்தக் குறை பல ஆண்டுகளாகவே இருந்துவருகிறது. இது பற்றி வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியில் தொடர்ந்து புகார் கூறிவந்தனர். இதன்பிறகே எம்.சி.எல்.ஆரை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இதனால்தான் 2016 ஏப்ரலுக்கு பிறகு புதிதாக வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதம் குறைந்து வழங்கப்பட்டுவருகிறது.
இது எல்லோருக்கும், அதாவது 2016 ஏப்ரலுக்கு முன்பு வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கும் விரிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே நடைபெறவில்லை. இந்தச் சூழ்நிலையில்தான் ரிசர்வ் வங்கி தற்போது பழைய கடன்தாரர்கள் வாங்கிய கடனுக்கும் எம்.சி.எல்.ஆர். மூலம் வட்டி விகிதம் கணக்கிட வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்துவிட்டது.
இதன்மூலம் 2018 ஏப்ரல் 1-ம் தேதி முதல் பழைய வீட்டுக் கடன்தாரர்களுக்கும் வீட்டுக் கடன் வட்டிக் குறையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பற்றி பாங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வு பெற்ற துணைப் பொது மேலாளர் எஸ். கோபாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.
“பழைய கடன்தாரர்களுக்கு ஒரு வட்டி விகிதமும், புதிய கடன் தாரர்களுக்கு ஒரு வட்டி விகிதமும பின்பற்றப்படுவது அநீதியானது அல்லவா? வங்கிகள் சந்தை விலை முறைப்படி இல்லாமலும், ரிசர்வ் வங்கியின் நடைமுறையின்படியும் இல்லாமலும் தன்னிச்சையான வட்டி விகிதத்தை 2016 ஏப்ரலுக்கு முன்பு கடன் வாங்கியவர்களுக்குப் பின்பற்றி வருகின்றன.
2016 முதல் 2017 டிசம்பர் வரை பேஸ் ரேட் வட்டி விகிதம் 11.23 சதவீதத்திலிருந்து 10.26 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. 1 சதவீதம் அளவுக்கு குறைந்தும்கூட, வங்கிகள் பேஸ் ரேட் மூலம் கடன் வாங்கியவர்களுக்கு வட்டிக் குறைப்பை செய்யவில்லை. இதை மாற்றும் பொருட்டுதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எம்.சி.எல்.ஆரை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.
தற்போது பேஸ் ரேட் மூலம் வீட்டுக் கடன் வாங்கியவர்களை எம்.சி.எல்.ஆர். மூலம் இணைத்து வட்டியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது. இது ஏப்ரல் முதல் தேதி முதல் நடைமுறைக்கு வரும்போது பழைய வீட்டுக் கடன்தாரர்களுக்கும் வட்டிக் குறைப்பு கிடைக்கும்” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT