Published : 10 Feb 2018 11:25 AM
Last Updated : 10 Feb 2018 11:25 AM
ம
த்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பட்ஜெட் உருவாக்கத்துக்கு முன்பு நிதியமைச்சர் ஒவ்வொரு துறை சார்ந்தவர்களிடமும் ஆலோசனைக் கேட்பதும் உண்டு. ஆனால், அப்படிக் கேட்கும் ஆலோசனைகள் அனைத்தும் நடைமுறைக்கு வருமா என்பதைச் சொல்ல முடியாது. அந்த வகையில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கட்டுமானத் துறையின் எதிர்பார்ப்புகள் கண்டு கொள்ளப்படவே இல்லை என்று கவலை தெரிவிக்கின்றனர் கட்டுமானத் துறையினர்.
வரும் நிதியாண்டுக்கான வரவு செலவு அறிக்கையில் கட்டமைப்பு மற்றும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் விவசாயத்துக்கும் தொழில்துறைக்கும் அடுத்தபடியாக அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் கட்டுமானத் துறைக்கு என்று தனியாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். கட்டமைப்புத் துறைக்குதான் கவனம் செலுத்தப்பட்டுள்ளதே என ஒட்டுமொத்தமாகக் கட்டுமானத் துறையை அடக்கிவிட முடியாது.
ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தங்கள் துறை வளர்ச்சிக்குப் புதிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்ப்பது வழக்கம்தான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக, பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம் ரியல் எஸ்டேட் துறையில் கடந்த ஆண்டில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம், கறுப்புப் பண ஒழிப்புக்காகக் கொண்டுவரப்பட்ட பினாமி சொத்துகள் தடைச் சட்டம் போன்றவையும் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியில் தாக்கத்தைச் செலுத்தியது. இந்தத் துறையை முறைப்படுத்துவதற்கான இந்த நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை என்றாலும், உருவான பாதிப்புகளுக்கு உரிய தீர்வுகள் இன்னும் எட்டப்படவே இல்லை. இது தவிர உள்ளூர் அளவில் மணல் தட்டுப்பாடு காரணமாகப் பல கட்டுமான நிறுவனங்கள் தொழிலை விட்டே வெளியேறியுள்ளன.
இதற்கிடையே ஜிஎஸ்டியாலும் கட்டுமானத் துறை அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளது. கட்டுமானப் பொருட்களுக்கான அதிகபட்ச வரி விதிப்பால் வீடுகள் கட்டுவது தேங்கியதுடன், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனையிலும் பாதிப்பு இருந்தது. இதனால் வீடுகளில் விலை அதிகரித்ததும் கவனிக்கத்தக்கது.
இது தொடர்பாக தென்னிந்திய கட்டுமான சங்கத்தினர் சிலரிடம் பேசுகையில், பட்ஜெட் அறிவிப்புகள் அடுத்த ஆண்டில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் குறித்து உடனடியாக உணர்ந்துகொள்வது ஒரு வகை. கொஞ்சம் தாமதமாக நடைமுறை சிக்கல்கள் வரும்போது உணர்ந்து கொள்வது இன்னொரு வகை. கடந்த ஆண்டு பட்ஜெட் அறிவிப்பால் கட்டுமானத் துறையில் ஏற்பட்ட தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல, கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் வீடு வாங்குவது விற்பதில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. எப்படிப் பார்த்தாலும் இதனால் முழுமையாகப் பாதிக்கப்பட்டது நடுத்தர மக்கள்தான் என்கின்றனர்.
“வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கட்டுமானத் துறை வளர்ச்சிக்கு நான்கு விஷயங்களை எதிர்பார்த்தோம்’’ என்கிறார் நவீன்ஸ் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவீன்.
குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைக்குத் தனி அங்கீகாரம் அளிக்கப்படும். இதன் மூலம் கட்டுமானத் துறையின் வளர்ச்சி வேகமெடுக்கும். தனித் துறையாக அங்கீகரிப்பதன் மூலம் திட்டங்களுக்கான முதலீடுகள் திரட்டுவதில் தேக்கம் இருக்காது. முக்கியமாக, திட்ட வேலைகள் நிதிப் பற்றாக்குறையால் தேங்காது என்பதால் வீடுகளில் விலை குறையும். முறைப்படுத்தப்பட்ட துறைக்கான வங்கிக் கடன் எளிதாவதால் நடுத்தர மக்கள் வீடு வாங்குவது எளிதாகும்.
இரண்டாவதாக ஜிஎஸ்டி வரம்பைக் குறைக்க வேண்டும். ஏனென்றால், கட்டுமானத் திட்டங்களில், அதாவது அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் அளவுக்கு உள்ளது. ஜனவரி 18-ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் குறைந்த விலை வீடுகளுக்கு மட்டும் ஜிஎஸ்டி 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இந்த வீடுகளுக்கு மத்திய அரசின் மானியமும் கிடைக்கிறது.
ஆனால், நாட்டில் உள்ள அனைவரையும் குறைந்த விலை வீடுகள் திட்டத்துக்குள் கொண்டுவந்துவிட முடியாது. நடுத்தர வருமான பிரிவினர் வாங்கும் வீடுகளுக்கான திட்டங்களுக்கு மட்டும் வரி வரம்பு குறைக்கப்படவில்லை. கட்டுமானப் பொருட்களுக்கான இன்புட் டாக்ஸ் கிரெடிட் எடுப்பதிலும் இப்போதுவரை தெளிவில்லை.
இது தவிர, ஒற்றைச் சாளர முறை கட்டுமானத் துறைக்கு இன்னும் அறிமுகமே ஆகவில்லை என்ற நிலையில் உள்ளது. எளிதாகத் தொழிலை நடத்தும் குறியீட்டில் கட்டுமானத் துறையில் இந்தியா 180-வது இடத்தில் உள்ளது. எந்த முன்னேற்றமுமில்லை. ஆன்லைன் அப்ரூவல் முறை, 30 நாட்களுக்குள் அனுமதி கிடைக்கும். இல்லையெனில் தானாகவே அனுமதி (deemed approval) கிடைக்கும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டது.
ஆனால், எதுவும் நடைமுறையில் இல்லை. இதனால் ஒரு திட்டத்தைத் தொடங்கி முடிக்க அதிக நாட்கள் ஆகின்றன. இதற்கான நிதி ஆதாரங்கள் முடங்குவதால் நிறுவனங்களுக்கான நிதிச் சுமை அதிகரிக்கிறது. வங்கிகளுக்கான திருப்பிச் செலுத்த வேண்டிய வட்டி சுமை அழுத்துகிறது என்றார்.
பொதுவாகத் தனிநபர் வருமான வரிச் சலுகைகளில் மாற்றங்கள் கொண்டுவருவதன் மூலம் அனைத்துத் துறைகளிலும் தாக்கம் ஏற்படும் என்ற பார்வையும் உள்ளது. தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் வீட்டுக்கடனுக்குத் திருப்பிச் செலுத்தும் அசலுக்கும் வட்டிக்கும் சலுகை அளித்தால் அது நடுத்தர மக்களுக்கு உதவும் என்கின்றனர்.
குறைந்த விலை வீடுகள் திட்டத்துக்கு ரூ.2.30 லட்சம் வரை மானியம் அளிக்கப்படுவதுபோல, நடுத்தர மக்கள் தனியாக வாங்கும் வீடுகளுக்கு மானியம் அளிப்பது அவர்களது வீட்டுக்கனவை நிறைவேற்ற உதவும். அல்லது வரிச் சேமிக்கும் நோக்கில் இரண்டாவது வீடுகளில் முதலீடு செய்வது அதிகரிக்கும்.
கட்டுமானத் துறை வளர்ச்சிக்கான அறிவிப்புகள் என்பது மக்களின் வீடு தேவைகளோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, அது பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஸ்டீல், சிமெண்ட், வேலைவாய்ப்பு எனப் பல வகைகளில் அதன் வளர்ச்சி விரிவுபடுத்தப்படுகிறது.
உற்பத்தித் துறை நிறுவனங்களின் வாராக் கடனைக் குறைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் போல் கட்டுமான நிறுவனங்களின் வாராக் கடனைக் குறைப்பதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கட்டுமானத் துறையின் கோரிக்கைகள் எதுவும் கவனிக்கப்படவில்லை என்பதே உண்மை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT