Published : 16 Sep 2017 11:36 AM
Last Updated : 16 Sep 2017 11:36 AM
உ
ணவு, உடை போன்று வீடு என்பதும் மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று ஆதிகால மனிதன், கொடிய விலங்குகளிடமிருந்தும் வெயில் மற்றும் மழையிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, மரங்களின் மீது குடிலமைத்துக் குடியேறியனான். பின் உணவு மற்றும் இதர வசதிகளுக்காக, நதியின் கரையோரம் குடிலமத்தோ குகைகளிலோ வசிக்க ஆரம்பித்தான். பின்னாளில் மனிதனின் தங்குமிடம், அவனது சமூக அந்தஸ்தைக் குறிக்கும் ஒன்றாக மாறுமென்பதை அந்த ஆதிகால மனிதன் தன் கனவிலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இப்போது ஒரு ரகசிய எண்ணை அழுத்தியதும் வீட்டின் கதவு திறக்கிறது. ஒரு பொத்தானை அழுத்தினால் வீடு ஒளிர்கிறது. இன்னொரு பொத்தானை அழுத்தினால் வீடு குளிர்கிறது. வெளியில் வெப்பநிலை என்னவாக இருந்தாலும், தன்னுள் வெப்பநிலையை மாறாமல் பார்த்துக்கொள்ளும் இன்றைய கால நவீன வீடுகள் ஒரு தொழில்நுட்ப விந்தை. ஆனால், இந்த விந்தை ஒரே நாளில் நடந்த நிகழ்வல்ல.
வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வுப்படி, கிறிஸ்து பிறப்பதற்கு 4,000 வருடங்களுக்கு முன்பு, மனிதன் முதன்முதலாக, மரம் சார்ந்த பொருட்களைக் கொண்டு வீடு கட்டும் முறையை அறிந்திருக்கிறான், ஒன்றாம் நூற்றாண்டில் ரோமானியர்கள் சாய்வான மேற்கூரையை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள், 14-ம் நூற்றாண்டு முதல் தான் அஸ்திவாரத்துக்குப் பெரிய கற்களையும் சுவருக்குச் செங்கல்களையும் மனிதன் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறான்.
எளிதில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்கள், தண்ணீர் குழாய் தொழில்நுட்பத்தில் அடைந்த முன்னேற்றம், கட்டிடக்கலையின் அபரிமித வளர்ச்சி, தொழில்நுட்பங்கள், குடும்பத்தின் அளவு மற்றும் மேம்பட்ட வாழ்க்கை தரம் போன்ற காரணங்களால், கடந்த 300 வருடங்களாக வீடு கட்டும் முறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றத்தால் குடும்ப மற்றும் சமூக உறவுகளிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
17-ம் நூற்றாண்டு வரை வீடு என்பது ஒரே ஒரு அறை கொண்டதாகத் தான் இருந்திருக்கிறது. பழைய கிராமியத் திரைப்படங்களில்கூட வீடுகள் ஒரு அறை கொண்டதாகத்தான் காட்டப்பட்டிருக்கிறது, ஆனால், இப்போது வீடென்றால், குறைந்தப்பட்சம் அது கண்டிப்பாக வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை மற்றும் குளியலறை கொண்டதாகவே உள்ளது. வீடுகளின் வடிவ அளவும், அறைகளின் எண்ணிக்கையும் நம் வசதிக்கும் குடும்ப அளவுக்கும் ஏற்ப மாறுகின்றன.
1980-கள் வரை மக்கள் வீடுகளை ஒரு மேஸ்திரியின் உதவியுடன் தங்களுக்குத் தாங்களே கட்டிக்கொண்டனர். ஆனால், இப்போது சிவில் இன்ஜினீயர், ஸ்டிரக்ச்சரல் இன்ஜினீயர், கட்டிடக்கலை இன்ஜினீயர் மற்றும் எலெக்டிரிக்கல் இன்ஜினீயர் எனப் பலவகை பொறியியலாளர்களின் உதவி இல்லாமல் வீடு கட்ட முடிவதில்லை. இப்போது ஒரு நாளிலேயே வீடு கட்டி முடிக்கும் அளவுக்குத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.
அஸ்திவாரம், தளம், சுவர், மேற்தளம், வண்ணப்பூச்சு, ஜன்னல், கதவு, மின் வசதி, நீர்க்குழாய், நீர்த்தொட்டி, ஒளி விளக்கு, ஒலி-ஒளி அமைப்பு, இருக்கை வசதி, படுக்கை வசதி, குளிர்ப்பான், புகைபோக்கி மற்றும் பாதுகாப்பு வசதி ஆகியவை அடங்கியதுதான் இன்றைய நவீன வீடு. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, இந்த அனைத்தும் பெருமளவு தன்னிச்சையாகச் செயல்படும்வண்ணம் நவீனமாக உள்ளது.
மேற்கூரைகள் இப்போது மின்சாரம் உற்பத்தி பண்ணும் சூரிய ஒளித் தகடுகளாக மாறிவிட்டன. சொரசொரப்பான சிமெண்ட் தரைகள் நவீன ட்ரெக்ஸ் வகை தரையாக மாறிவிட்டன. வண்ணப்பூச்சுகள் கறைபடியாத தனமையுடன் கூடிய வெப்பத் தடுப்பானாக மாறிவிட்டன. ஜன்னல்களும் கதவுகளும் பாதுகாப்பு வசதி மற்றும் தானியங்கி வசதி கொண்டவையாகவும் உறுதியானவையாகவும் உள்ளன. ஒளிவிளக்கின் அளவு வீட்டினுள் நிலவும் ஒளியின் அளவைப் பொறுத்து தானாகவே மாறுகிறது, திரையரங்கத்தின் தரத்தில் ஹோம் தியேட்டர் சிஸ்டம் வீட்டுக்குள் வந்துவிட்டது. இவை எல்லாவற்றையும் இணைக்கும் நெட்வொர்க்கும் இப்போது மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. நம் கைப்பேசியில் இருக்கும் செயலியின் மூலம், இவை எல்லாவற்றையும் நாம், வீட்டினுள் இருந்தோ வீட்டின் வெளியில் இருந்தோ எளிதாகக் கட்டுப்படுத்தும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீடுகள் இப்போது உறுதியாகவும் வசதியாகவும் உள்ளன. மிக முக்கியமாக, வீடு கட்ட ஆகும் செலவும் முன்பைவிடக் குறைவாக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளுக்கு நம்முடைய சிந்திக்கும் திறனைக் கொடுத்து, அது தன்னிச்சையாகச் செயல்படும் தன்மையைக் கொடுக்க முயன்று வருகிறது. வீடுகளுக்கு உயிர் மட்டும்தான் இல்லை, ஆனால் நினைப்பதை உணர்ந்து தானாகவே செயலாற்றும் தன்மையை, இன்றைய தொழில்நுட்பம் வீடுகளுக்கு, பல நவீன கருவிகள் மூலம் வழங்குகிறது. அது என்ன என்பதை வரும் வாரங்களில் பார்ப்போம்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment