Published : 16 Aug 2014 12:00 AM
Last Updated : 16 Aug 2014 12:00 AM
ஆசை ஆசையாய் வீடு கட்டுவதோ, வாங்குவதோ எதற்கு? நமக்கென சொந்தமாக ஒரு இடம் என்ற திருப்தி, நமக்குப் பிறகு வாரிசுகளுக்கு விட்டுச் செல்ல ஒரு சொத்து என்ற எண்ணம்தானே? பெற்றோர் கட்டிய வீடு, மனை என எந்தச் சொத்தாக இருந்தாலும் அது வாரிசுகளுக்கே என்பது நாம் அறிந்த விஷயம்தான்.
ஆனால், இந்தக் காலத்தில் வீட்டுக் கடன் வாங்கியே பலரும் வீடு கட்டுகிறார்கள் அல்லது வாங்குகிறார்கள். 20 முதல் 25 ஆண்டுகள் வரை இ.எம்.ஐ. செலுத்துகிறார்கள். அதுவரை வீட்டின் மீது கடன் இருக்கிறது. கடன் தொகை நிலுவையில் இருக்கும்போது வீட்டை வாரிசுகளுக்கு எழுதி வைக்க முடியுமா?
இப்படி ஒரு விருப்பத்தை வங்கியில் தெரிவித்தால் உடனடியாக நடைமுறை சாத்தியம் இல்லை என்றே சட்டென பதில் வரும். ஆனால், சட்டப்படி இதைச் செய்வதற்கு வழிகள் உள்ளன. வீட்டுக் கடன் தொகை நிலுவையில் இருக்கும் போது விருப்பப்படி வாரிசுகளுக்கு எழுதித் தர முடியும் என்று கூறுகிறார்கள் வங்கியாளர்கள்.
“முதலில் இந்த விருப்பத்தை வங்கியிடம் எழுத்துப்பூர்வமாகத் தர வேண்டும். அதில் வீட்டை எழுதித் தருவதால் வங்கிக்கு எந்தப் பாதிப்பும், இழப்பும் ஏற்படாது என்று உத்தரவாதம் தர வேண்டும். வங்கியிடம் இருந்து ஆட்சேபனை இல்லா கடிதம் பெற வேண்டும். யாருக்கு வீட்டை எழுதித் தருகிறோமோ அவர் எஞ்சிய வீட்டுக் கடனுக்கான ஜாமீன்தாரர் ஆகிவிடுவார்.
மேலும் வீட்டைப் பெறுபவர் இணை கடனாளியாகவும் மாறிவிடுவார். இதைச் சட்ட நடைமுறையாக்கினாலே போதும், வீடு வாரிசுகளின் பெயரில் வந்துவிடும். இந்த நடைமுறையைப் பின்பற்ற பெரும்பாலும் வங்கிகள் முன்வருவதில்லை” என்கிறார் ஓய்வு பெற்ற மூத்த வங்கியாளர் எஸ். கோபாலகிருஷ்ணன்.
வீட்டுக் கடன் தொகை நிலுவையில் இருக்கும்போது, அந்த வீட்டை வாரிசுகளுக்கு மாற்றி எழுதித் தர வங்கிகள் மறுப்பதேன் என்ற கேள்வி இப்போது உங்களுக்குள் எழலாம். அதற்குப் பல காரணங்கள் இருக்கவே செய்கின்றன. முதலில் வீட்டை வாரிசுகளுக்கு எழுதித் தரும் இந்த நடைமுறை மிகவும் நீண்டது.
சொத்தை வாரிசுகளுக்கு மாற்றுவதால், இதுவரை வீட்டுக் கடனைச் செலுத்தியவர் அதற்குப் பொறுப்பாக மாட்டார் என்ற நிலை ஏற்படுவதால் வங்கிகள் யோசிக்கும். தவிர இடையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் வீட்டுக் கடன் பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் வங்கிகள் பல கோணத்தில் யோசிப்பதால் தொடக்கத்திலேயே பெரும்பாலான வங்கிகள் நிராகரித்துவிடுகின்றன. ஆனால் வாரிசுகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் இந்த நடைமுறை சட்ட விரோதமானதல்ல என்றும் கூறுகிறார் எஸ்.கோபாலகிருஷ்ணன்.
நாம் இப்படி யோசித்து பார்ப்போமே. ஒருவேளை வீட்டுக் கடனை வாங்கி வீடு கட்டியவர் கடன் நிலுவையில் இருக்கும் போதே இறந்துவிட்டால் வங்கிகள் என்ன செய்யும்? எஞ்சிய பணத்தை வாரிசுகளிடம் இருந்து வசூலித்துக் கொள்வார்கள் தானே? கிட்டத்தட்ட அதே நடைமுறைதான் வீட்டை வாரிசுகளுக்குப் பெயர் மாற்றம் செய்வதும் அதே நடைமுறைதான்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment