Published : 20 Jan 2018 11:13 AM
Last Updated : 20 Jan 2018 11:13 AM
சொ
ந்தமாக நீங்களே நின்று வீடு கட்டுவதாக இருந்தாலும், அல்லது கட்டிக்கொண்டிருக்கும் வீட்டை வாங்கத் திட்டமிட்டாலும் சில அடிப்படையான கட்டுமான விவரங்களை நாம் தெரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான் கட்டுநரிடமிருந்தோ வேலைஆட்களிடம் இருந்தோ சிறப்பான வேலையை நாம் பெறமுடியும். அவர்களுக்குச் சில வழிகாட்டுதல்களையும் நம்மால் அளிக்க முடியும்.
அவர்களுக்குத் தெரியாத சில தொழில்நுட்பங்களோ வீடு கட்டுவதில் உள்ள தொழில்நுட்பங்களோ உங்களுக்கும் தெரிகிறது என்றாலோ, உங்களை ஏமாற்றும் எண்ணம் அவர்களுக்கு வராது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
இப்போதெல்லாம் கட்டுமான வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக இருப்பதால், பல இடங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள்தான் உள்ளனர். இதனால் அவர்களுக்கு இவற்றைப் புரியவைப்பதற்காக வேணும் நாமும் அடிப்படை விஷயங்களைத் தெரிந்துவைத்துக்கொள்வது நல்லது.
இரண்டு வழிமுறைகள்
கட்டிட வேலைகளைக் கட்டுநரிடம் ஒப்படைக்கும்போது இரண்டு வகையில் நடைமுறைகள் உள்ளன. அதாவது வீட்டைக் கட்டி முடித்து ஒப்படைக்க ஒரு சதுர அடிக்கு இவ்வளவு என்று பேசலாம். தேவையான பொருட்களை அவரே வாங்கி, அவரே வீட்டையும் கட்டித் தந்துவிடுவார். அவ்வப்போது தேவைக்கு ஏற்ப பணம் அளிக்கலாம். எந்தெந்த வேலையை அவர் எப்போது செய்ய உள்ளார் என்பதை நாம் முன்பே தெரிந்துகொள்வதன் மூலம் பணத்தைத் தயார் செய்யலாம். இந்த வேலை இந்த நேரத்தில்தான் முடியும் என்று தெரிந்துகொண்டால் டென்ஷன் இருக்காது.
இரண்டாவது நடைமுறையாக, வீடு கட்டத் தேவையான அத்தனை பொருட்களையும் நீங்களே வாங்கிக் கொடுத்துவிட்டு, கட்டிடம் கட்டுவதற்கான கூலியை மட்டும் சதுர அடிக்கு இவ்வளவு எனக் கொடுக்கலாம். இதை லேபர் கான்ட்ராக்ட் என்று சொல்வார்கள்.
இரண்டாவது நடைமுறையில் நீங்கள்தான் வேலைகளைத் திட்டமிடுவீர்கள். இதனால் என்ன வேலை செய்ய வேண்டுமோ, அதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்குரிய பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுத்தால் போதும். வேலை முடிந்ததும் பணத்தை செட்டில் பண்ணலாம். ஆட்கள் தட்டுப்பாட்டைப் பொறுத்து இந்தத் தொகையில் ஊருக்கு ஊர் வித்தியாசம் இருக்கும்.
இந்த நடைமுறை விவரங்கள் தெரிந்துகொண்டால் நமக்கு எது வசதியானது என்பதை முடிவுசெய்து கொள்ளலாம்.
கட்டுமானப் பொருள்களின் பயன்பாடு
கம்பி
கம்பி வகையைப் பொறுத்தவரையில், பொத்தாம் பொதுவாக வாங்கிவிட முடியாது. அடித்தளம் மற்றும் பில்லர்களுக்கு டி.எம்.டி (TMT Steel) கம்பிகளைப் பயன்படுத்த வேண்டும். அடித்தள மேட் வேலைகளுக்கு 7 எம்.எம். சாதாரணக் கம்பி பயன்படுத்தலாம் என்றாலும், மண்சாரியைப் பொறுத்து இதில் எம்.எம் அளவைக் கூட்டிக்கொள்வது நல்லது.
பொதுவாக, 1,000 சதுர அடியில் கட்டப்படும் வீடு அல்லது தரைத் தளத்துடன் கூடுதலாக ஒரு தளம்கொண்ட வீடாக இருந்தால் மேட் போட 7 எம்.எம். சாதாரணக் கம்பியும் அடித்தள மற்றும் பில்லர் வேலைகளுக்கு 12 எம்.எம். டி.எம்.டி. கம்பியும்,தள வேலைகளுக்கு (Roofing) 10 எம்.எம். டி.எம்.டி. கம்பியும் பயன்படுத்த வேண்டும். strip steels என்று சொல்லப்படுகிற ரிங்ஸ் வேலைகளுக்கு 10 எம்.எம். டி.எம்.டி. கம்பியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஜல்லி
அடித்தள வேலைகளுக்கு 1.5 (ஒன்றரை) ஜல்லிகளையும் இதர கான்கிரீட் வேலைகளுக்கு 3/4 (முக்கால்) ஜல்லிகளையும் பயன்படுத்த வேண்டும்.
சிமென்ட்
சிமென்ட் ரகங்களைப் பொறுத்தவரை, 33 கிரேடு, 43 கிரேடு, 53 கிரேடு என மூன்று வகைகளில் கிடைக்கிறது. இந்த மூன்று கிரேடு வகைகளும் ஒவ்வொரு வேலைக்கு ஏற்பத் தேவைப்படும். அதாவது, 53 கிரேடு சிமென்ட் உடனடியாக செட் ஆகும் தன்மை கொண்டது. இந்த வகையை கான்கிரீட் வேலைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். வேலை முடிந்ததும் உடனடியாக செட் ஆகிவிடும்.
43 கிரேடு வகை பூச்சு வேலைகளுக்கு உபயோகிக்க வேண்டும். அவசரமில்லாத சில வேலைகளுக்கு 33 கிரேடு சிமென்ட்டைப் பயன்படுத்தலாம்.
ஆனால், உடனடியாக செட் ஆக வேண்டும் என்று 53 கிரேடு சிமென்ட் வகையைப் பூச்சு வேலைகளுக்குப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. இதனால் பூச்சு வேலைகளில் விரிசல்கள் வரும்.
கட்டுமான வேலைகளில் அடிக்கடி பயன்படுத்தும் சில வார்த்தைகளையும் அவற்றுக்கான பொருள்களையும் தெரிந்துகொள்வது அவசியம்.
பில்ட்-அப் ஏரியா
வீடு எத்தனை சதுர அடியில் அமைய உள்ளதோ, அந்த மொத்த பரப்பு பில்ட்-அப் ஏரியா என்பார்கள். அதாவது, கட்டிடம் அமையும் பகுதியின் மொத்தப் பரப்பை இப்படிக் குறிப்பிடுவார்கள்.
கார்பெட்
வீட்டின் ஓர் அறையின் நான்கு சுவர்களுக்கு இடையில் உள்ள இடம் கார்பெட் ஏரியா. அதாவது, வீட்டுக்குள் கார்பெட் விரித்தால் எவ்வளவு இடத்தை அடைத்துக்கொள்ளுமோ அதை கார்பெட் ஏரியா என்பார்கள். உள் அறைக்குள் டைல்ஸ் ஒட்டும் அளவை கார்பெட் அளவிலிருந்துதான் கணக்கெடுக்க வேண்டும்.
பிளின்த்
கார்பெட் ஏரியாவோடு சேர்ந்து சுவர்களின் தடிமனையும் கணக்கெடுத்தால் கிடைக்கும் அளவுதான் பிளின்த் ஏரியா.
சீலிங்
கட்டிடத்தின் உட்புற மேல்பக்கம்தான் சீலிங். பொதுவாக, அறையின் உட்புற உயரம் குறைந்தபட்சம் 10 அடி உயரமாவது இருக்க வேண்டும். சராசரியாக இந்த அளவு உயரம் இருந்தால்தான் மின்விசிறி பொருத்த வசதியானது.
மேட்
அடித்தள வேலைகளில் இந்த மேட் பங்கு முக்கியமானது. அதாவது, பில்லருக்குக் கீழே விரிக்கப்படும் ஒரு வலை போன்றது இது. பில்லரைத் தாங்கிப்பிடிக்க இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இதுபோன்ற சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொண்டால் கட்டுமானப் பணியை உங்கள் கண் பார்வையில் சிறப்பாக வழிநடத்தலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT