Published : 13 Jan 2018 09:30 AM
Last Updated : 13 Jan 2018 09:30 AM
வீ
டு வாங்க வேண்டும் என்றால் கட்டிய வீட்டுக்கு முன்னுரிமை அளிப்பீர்களா அல்லது இனிமேல் கட்டப்பட உள்ள வீட்டுக்கு முன்னுரிமை அளிப்பீர்களா எனக் கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் இனிமேல் கட்டப்பட உள்ள வீடு என்பதாகத்தான் இருக்கும். ஆனால், இவர்கள் செய்யும் முக்கியமான தவறு ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அனுபவசாலிகள்.
வீட்டுக் கடன் வாங்கியதும், கடனுக்கான தவணைத் தொகை (EMI) உடனே தொடங்கிவிடும் என்பதால் பணத்தைக் கட்டியதும் புது வீட்டுக்கு உடனே குடிபோக வேண்டும் என்ற அவசரம் இவர்களிடத்தில் உருவாகும். இது தவறான போக்கு. பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால், நமது பணத்துக்கு ஈடாகக் கட்டிடத்தின் தரமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் அதற்காகப் பொறுமை அவசியம்.
நீங்கள் உங்களது சொந்த இடத்தில் வீடு கட்டினால் உங்கள் விருப்பத்துக்குக் கட்டிக் கொள்ளலாம். ஆனால், கட்டுமான நிறுவனங்களின் திட்டங்களைத் தேர்வுசெய்தால் தற்போது கட்டப்படும் அல்லது இனிமேல் தொடங்கப்படும் திட்டங்களில் வீடு வாங்க முயலலாம். ஏனென்றால், அப்போதுதான் கட்டுமானத் தரத்தை நாம் கண்காணிக்க முடியும்.
தற்போது கட்டுமானத் தொழில் நுட்பம் பெருமளவு முன்னேறிவிட்டது. பாதுகாப்புக் குறைபாடுகள் வருவதற்கு வாய்ப்பில்லை என்கின்றனர் கட்டுமானத் துறையினர். ஆனால், இவற்றைச் சரியான வகையில் நடைமுறைப்படுத்துவது சிறந்த வழிகாட்டுதலில்தான் உள்ளது. தொழில்நுட்பம் பாதுகாப்பானதாக இருந்தாலும் அதை எப்படிச் செயல்படுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்.
கட்டுமான வேலைகள் புதிதாகத் தொடங்கப்படும்போதுதான் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கவனிக்க முடியும். தவிர, தவறு நடந்தால் உடனடியாகச் சுட்டிக்காட்டுவதற்குக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் திட்டங்கள்தாம் சரியான தேர்வு என்று குறிப்பிடுகின்றனர்.
கட்டுமான வேலைகள் எப்படி நடக்கின்றன, தரமான மணல், கான்கிரீட் கலவைகள், ஜல்லி, கம்பி எல்லாவற்றிலும் கவனம் செலுத்த முடியும். ரூப் டைப், சென்டிரிங்குகள், லென்டில் பீம், கட்டிய பிறகு தண்ணீர்விட்டுக் காய வைப்பது, எத்தனை நாட்களுக்கு பிறகு சென்டிரிங்குகளைப் பிரிக்கிறார்கள் போன்றவற்றைக் கண்காணிக்கலாம். வரைபட அறிக்கை அடிப்படையில்தான் வேலை நடக்கிறதா என்பதையும் சோதிக்க முடியும்.
சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பு என்றால் கட்டுமான வேலைகளைக் கண்காணிப்பதில் பொறியாளருக்கோ மேஸ்திரிக்கோ நேரடி பார்வை இருக்கும். பெரிய அளவிலான பல்லடுக்குக் கட்டிடம் எனும்போது வேலைகள் நேரடியாகக் கண்காணிப்படுகின்றனவா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
ஒவ்வொரு தளம் எழுப்பப்படும்போதும் அங்குக் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்ப நுணுக்கங்கள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதைச் சோதிக்க வேண்டும். இதற்கான பாதுகாப்பு திட்டமிடுதல்கள் உள்ளன. இவற்றைச் சோதித்து அதற்கான குறிப்பேடுகளில் பதிவுசெய்ய வேண்டும். இந்தக் குறிப்பேட்டை வீடு வாங்குபவர்கள் பார்வையிட முடியும்.
பல்லடுக்குக் கட்டடங்களில் வீடு வாங்கும்போது மின் தூக்கி (Lift) அங்கீகாரம், அதன் பராமரிப்பாளர் விவரங்கள், ஒப்பந்தங்கள் உள்ளனவா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். கட்டிடம் அமைந்துள்ள பகுதியின் உட்புறச் சாலைகள் குறைந்தபட்சம் 20 அடியாக இருப்பது நல்லது. அப்போதுதான் வாகனம் சென்று வர வசதி இருக்கும்.
சிறிய அடுக்குமாடி குடியிருப்பு என்றால் வீட்டுக்குப் பக்கத்தில் பல்லடுக்குக் கட்டிடங்கள் இருந்தால் அங்கு வீடு வாங்குவதைத் தவிர்க்கவும். ஏனென்றால், எதிர்காலத்தில் நிலத்தடி நீர் பிரச்சினை உருவாகும் வாய்ப்பு அதிகம்.
எந்தப் பகுதியில் வீடு வாங்கினாலும் முதலில் அடிப்படையான விஷயங்களாக அந்தப் பகுதிக்கான போக்குவரத்து, மின், குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு கொண்ட பகுதிகளாக இருக்க வேண்டும். பகலில் போக்குவரத்து இருந்தாலும், இரவில் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான ஏரியாவாகவும் இருக்க வேண்டும்.
கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் அல்லது புதிதாகக் கட்ட உள்ள வீடுகளில் இந்தக் கண்காணிப்புகளைச் செய்யுங்கள். காலத்துக்கும் உங்களுக்குப் பிரச்சினை இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT