Published : 13 Jan 2018 09:31 AM
Last Updated : 13 Jan 2018 09:31 AM
ப
தினெட்டாம் நூற்றாண்டில் நவீன உலகம் கட்டமைக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட எத்தனையோ கட்டுமானப் பொருட்கள் இன்று புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டன. அதில் ஒன்று, லேட்ரைட் (laterite)கற்கள். செம்பாறாங்கல், சிவப்பு கப்பிக்கல் எனத் தமிழில் இதற்கு வேறு சில பெயர்கள் இருக்கின்றன. உலகம் நவீனமயமாக்கலை நோக்கிய வேளையில், இந்தக் கட்டுமானக் கல், புதிய கட்டுமானப் பொருட்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போனது. லேட்ரைட் கல்லைக் கொண்டு கட்டப்பட்ட எத்தனையோ பழமையான கட்டிடங்கள் இன்றும் கம்பீரமாக இருக்கவே செய்கின்றன.
லேட்ரைட் கல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவலாக உள்ளன. குறிப்பாக, மலைவாழ் பகுதிகளில் இந்தக் கற்கள் அதிகம் காணப்படுகின்றன. தமிழகத்தில் நீலகிரி, பழநி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை என மலைப் பிரதேசங்களில் இந்தக் கல்லைப் பார்க்கலாம். சமவெளிப் பகுதியான தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியிலும் இந்தக் கல் உள்ளது. இந்தக் கல் பல சிறப்புகள் பெற்றது.
இது மிகவும் கடினமான கல். பாறைகளைப் பிளந்து கிரானைட் கற்களை உருவாக்குவதுபோல இந்தக் கல்லை எளிதாகப் பிளக்க முடியாது. ஈரத்தன்மையோடு இருக்கும்போது மட்டுமே இந்தக் கல்லை வெட்டி எடுக்க முடியும். கல்லை உடைக்க வேண்டுமானால், ஈரத்தன்மையுடனே உடைத்துவிட வேண்டும். கல் உலர்ந்துவிட்டால், பிறகு உடைப்பது பெரும் சிரமமாகிவிடும். சுத்தியைக் கொண்டு அடித்தால்கூட, கல் உடையாது. இந்தக் கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட பழைய கட்டுமானங்களில் துளை போடவோ ஆணி அடிக்கவோ முடியாது. அந்த அளவுக்குக் கடினமானது.
அந்தக் காலத்தில் இந்தக் கல்லைக் கொண்டு ஏராளமான கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வீட்டுக்குள் குளிர்ச்சியான தன்மையைத் தரவல்லது இது. இந்தக் கல்லில் நுண் துளைகள் ஏராளமாக இருக்கும். எனவே, இந்தக் கல்லைக் கொண்டு கட்டப்பட்ட வீடுகளில் கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். வீட்டுக்குள் குளுமையாக இருப்பதுபோலவே இருக்கும். வெளியில் வீசும் வெப்பக் காற்றை இந்தக் கல் ஊடுருவ விடாது. உள்ளே உள்ள குளுமையான காற்றையும் வெளியே செல்லவிடாது. அந்த அளவுக்கு இந்தக் கல் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ளும். அப்படியென்றால், மழை, குளிர் காலங்களில் எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டாம். மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் வெளியே குளிர் இருந்தாலும், இந்தக் கட்டிடத்துக்குள் கதகதப்பான தன்மையே நிலவும்.
இந்தக் கல்லுக்கு இப்படிப் பல சிறப்புகள் இருக்க என்ன காரணம்? பாறைகள் உடைந்து, சிதைந்து அதில் உள்ள வேதிப்பொருட்கள் வெளியேறிய பிறகு மிச்சமுள்ள பொருள்களால் உருவானவைதான் லேட்ரைட் கற்கள். இது சிவப்பு வண்ணத்தில் சிறு சிறு உருண்டைகளாக இருக்கும். இதில், இரும்புத் தன்மை 48 சதவீதம் அளவுக்கு இருக்கும். மழை பெய்யும்போது அந்தக் கல்லில் உள்ள இரும்பு கரைந்து நிலத்துக்குள் செல்கின்றன. தேவையில்லாத மூலப்பொருட்கள் தண்ணீரில் கரைந்துபோய்விடுகின்றன. மழை நீர் சென்ற பிறகு, சிறு சிறு துவாரம் வழியாக மேல் நோக்கி வரும்போது சிறு சிறு உருண்டைகளாக உருவாகின்றன.
இது இயற்கையான கட்டுமானக் கல். இந்தக் கல்லின் தன்மையை அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் நன்றாகவே உணர்ந்ததால், அதைக் கட்டுமானக் கல்லாகப் பயன்படுத்தினர். இந்தியாவில் கோட்டைகள் உட்படப் பழமையான கட்டிடங்கள் இந்தக் கல்லைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. பண்டைய கிரேக்க நாகரிகத்திலும் இந்தக் கல்லைப் பயன்படுத்திக் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளன. நீலகிரி, கொல்லிமலை போன்ற மலைவாழ் பகுதிகளில் இந்தக் கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட வீடுகள் ஏராளமாக உள்ளன. கேரளாவில் இன்றளவும் இந்தக் கற்களைக் கட்டுமானத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
இத்தனை சிறப்புடைய இந்தக் கல்லின் பயன்பாடு பரவலாகக் குறைந்துவிட்டது. கட்டுமான கான்கிரீட் கற்கள் சுலபமாகக் கிடைப்பதால், லேட்ரைட் கற்களை மறந்துவிட்டனர். தொடர்ந்து பயன்பாடு குறைந்ததால், இந்தக் கற்களைத் தயாரிப்பது குறைந்துபோனதும் துரதிர்ஷ்டமான விஷயம்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT