Published : 06 Jan 2018 11:02 AM
Last Updated : 06 Jan 2018 11:02 AM
பு
திய வீடு கட்ட கட்டிட அனுமதி பெறும்போதே கட்டிட வரைபடத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது ஒரு விதியாகவே உள்ளது. நாமும் பெயருக்கு அதனை அமைத்துப் பிறகு அதைக் கண்டு கொள்வதேயில்லை. காரணம், நமது வீட்டின் கூரை மீது விழுந்து பூமிக்குள் செல்லும் நீரின் அளவோ அல்லது அதனால் நாம் பெறும் அனுகூலத்தின் அளவோ நமக்கு தெரிவதில்லை. ஆனால், மழைநீர் சேகரிப்பின் மீது நாம் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை.
ஆனால் இந்த மழைநீர் சேகரிப்பின் பலனை கண்கூடாக நாம் உணர வேண்டுமானால், புதிதாக வீடு கட்டுபவர்கள் தங்களின் கட்டுமானத்தில் கூடுதலாகச் சில அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். இதற்கு இப்படி செய்ய வேண்டும் என்று தங்களுக்கு வீடு கட்டும் பொறியாளரிடம் கூறினால் அவர் இதற்கான கட்டமைப்பை எங்கு அமைக்கலாம் என்பது பற்றி வீடு கட்டப்போகும் இடத்தின் அமைப்புக்கும், தரையின் தன்மைக்கும் ஏற்ப அமைக்க உதவுவார்.
புதிதாகக் கட்டும் வீட்டின் ஒரு அறையின் தரைத்தளத்துக்கு கீழோ அல்லது கட்டிடம் போக மீதம் இடமிருந்தால் அந்த இடத்திலோ தாங்கள் ஓர் அறையை உருவாக்க வேண்டும். (செப்டிக் டேங் அருகில் இக்கட்டமைப்பை அமைக்கக் கூடாது). படுக்கை அறைக்கு கீழோ நடு ஹாலுக்குக் கீழோ இந்தத் தரைத்தளக் கீழ்நிலைத் தொட்டியை அமைத்தால், அந்த அறை மற்ற அறைகளைவிடக் குளுமையாக இருக்கும்.
இந்தக் கட்டமைப்பு அமைப்பதற்குக் கூடுதல் செலவாகும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதற்கான பலனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தச் செலவானது ஒரு தடவை முதலீடு போலத்தான், காலாகாலத்துக்கும் தொடர்ந்து பலன் அளித்துக் கொண்டிருக்கும்.
நாம் கட்டப்போகும் வீட்டில் உள்ள ஓர் அறையின் அளவுக்குத் தரைத்தளத்துக்குக் கீழ் அறை கட்டலாம். தரைத்தளத்திலுள்ள அறை 10க்கு 10 என்றால், கீழே உள்ள தரைத்தளத்துக்கு கீழேயும் 10 க்கு 10 என்ற அளவில் கட்டலாம். அல்லது கட்டிடத்துக்கு வெளியில் மீதம் இடமிருந்தால், தங்களுக்கு வசதியான இடத்தில் கட்டலாம்.
கீழ்நிலைத் தொட்டிக்கு மாடியிலிருந்து மழைநீர் செல்லும்படியாகக் குழாய்கள் பொறுத்தப்பட வேண்டும். இந்தக் குழாய் அமைப்பானது வீட்டின் கட்டிடத்துக்கு வெளியேயிருந்து வந்து, அந்த மழைநீர் தரைத்தளக் கட்டிட அமைப்புக்குள் செல்லுமாறு பெரிய குழாய்களைப் பதிக்க வேண்டும். மழைநீர் கீழ்தளத் தொட்டிக்கு நீர் செல்லும் வழியில் ஒரு கேட் வால்வு ஒன்று அமைக்க வேண்டும். ஏனென்றால் மழை பெய்யும்போது முதலில் மாடியிலுள்ள அழுக்குகள் சேர்ந்து மழைநீர் வெளியேறும். அப்போது நாம் அந்த கேட் வால்வு மூலமாகச் சிறிது நேரம் நீரை வெளியேற்றுமாறு செய்துவிட்டுப் பிறகு கீழ்த்தள மழைநீர்க் கட்டமைப்புக்குள் மழைநீர் செல்லுமாறு செய்தால் சுத்தமான தண்ணீர் உள்ளே சேகரமாகும். அதைப் போன்று அக்கட்டமைப்பில் மழைநீர் நிறைந்துவிட்டால் அவை வெளியேறவும் வழிவகை செய்ய வேண்டும்.
இந்தத் தண்ணீரை மேல்நிலைத் தொட்டியுடன் இணைத்தும் பயன்படுத்தலாம். அல்லது நாம் பயன்படுத்தும் குடிநீர்ச் சுத்திகரிப்பு இயந்திரத்துடன் இணைத்து குடிநீருக்கென்று மட்டும் பயன்படுத்தலாம். குடிநீருக்கு மட்டும் இம்மழை நீரைப் பயன்படுத்த நினைத்தால், நாம் ஏற்கனவே மற்ற பயன்பாட்டுக்கு அமைக்கும் மேல்நிலைத் தொட்டியைப் பயன்படுத்தாமல் தனியாக ஒரு சின்டெக்ஸ் தொட்டியைப் பயன்படுத்தி அதிலிருந்து மழைநீரைக் குடிநீருக்கென்று மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கூடுதலாக ஒரு மோட்டரை இதற்காக நாம் பயன்படுத்த வேண்டியிருக்கும். நமக்கு கிடைக்கும் மழைநீரே மிகவும் சுத்தமானது. அதையும் சுத்திகரித்துக் குடித்தால் அதன் சுவையும் அதன் தரமும் நிச்சயம் நமது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதாகத்தான் இருக்கும்.
புதிய வீட்டில் அமைக்கவிருக்கும் மேல்நிலை நீர் தொட்டிக்கு ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தண்ணீர் ஏற்றும் குழாய் அமைப்பைப் போன்று சின்டெக்ஸ் தொட்டிக்கும் இந்த மழைநீர் கட்டிட அமைப்பிலிருந்தும் குழாய் செல்லுமாறு அமைக்க வேண்டும்.
சரி, இதற்கு நிறைய செலவாகுமே அந்த அளவுக்கு அதனால் பலன் கிடைக்குமா? நிச்சயம் கிடைக்கும். இதற்கான ஒரு சிறிய கணக்கீட்டைப் பார்ப்போம். நாம் கட்டப்போகும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பின் அளவு 10X10X10 என்பதாக இருந்தால் இதற்கான கட்டுமானச் செலவு தோராயமாக 1.5 லட்சத்திலிருந்து 2 லட்சம்வரை ஆகும். நாம் கட்டப்போகும் கட்டமைப்பின் நீர் கொள்ளளவு சுமார் 7,500 காலன் அதாவது 28,400 லிட்டர் நீர் அதில் கொள்ளும். நாம் தற்போது குடிநீருக்காக வாங்கும் 20 லிட்டர் கேனின் விலை 40 என்றால் ஒரு லிட்டர் 2 ரூபாய் ஆகிறது. ஒரு வருடத்தில் நல்ல மழை பொழிந்து நாம் கட்டிய இந்த மழைநீர் சேகரமைப்பு கட்டமைப்பில் குறைந்தபட்சமாக இரண்டுமுறை முழுவதுமாக நிரம்பினால் நமக்கு கிடைப்பது 50,000 லிட்டர். நாம் கணக்கிட்டபடி ஒரு லிட்டர் இரண்டு ரூபாய் என்றால் வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நமக்கு மிச்சம்தான்.
தொடரும் வருடங்களுக்கும் இதேபோல நமக்கு குடிநீருக்கான செலவு லாபமாகத்தான் இருக்கும். எனவே நமது கட்டுமானச் செலவை முதல் இரண்டு ஆண்டுகளிலேயே நமக்குக் கிடைத்துவிடுகிறது. ஆகவே முதலில் நாம் செலவழித்த தொகையில் பல மடங்கு நமக்கு நேரடியாகவே நம் வாழ்நாள் முழுவதும் கிடைத்துக் கொண்டிருக்கும். நாம் தேக்கி வைக்கும்போது அதனை நாம் சரியாகக் கையாண்டால் அதில் புழு பூச்சிகள் வராது. இருப்பினும் நாம் அதில் தண்ணீர் நிறைய இருக்கும் காலங்களில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பிளிச்சிங் பவுடர் போன்ற கிருமி நாசினியைக் கலந்து பயன்படுத்தலாம்.
குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டுக் குழாய்கள் வழியாக நம் இல்லங்களுக்கு வரும் நீர், எந்தெந்தப் பாதைகளை எப்படிக் கடந்து, எத்தனை மேல்நிலைத் தொட்டிகளுக்குச் சென்று கடைசியாக நம் வீட்டுக்கு எந்த நிலையில் வருகிறது என்று யாருக்குமே தெரியாது. கண்ணுக்குத் தெரியாத இடத்திலிருந்து வரும் நீரை நம்பும் நாம், நம்மால் சேமிக்கப்படும் இதுபோன்ற தரைத்தள நீர் சேகரிப்பு தொட்டிகளில் சேமிக்கப்படும் நீர் நிச்சயம் நமக்கு பாதுகாப்பானதாகத்தான் இருக்கும்.
மழைநீரைச் சேமிப்போம் இயற்கையைப் பாதுகாப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT