Published : 12 Apr 2014 02:34 PM
Last Updated : 12 Apr 2014 02:34 PM
ரியல் எஸ்டேட் துறை லாபம் கொழிக்கும் தொழில். மற்ற தொழில்களை விட இத்தொழிலில் தரகர்களின் தலையீடுகள் அதிகம். இவர்களைத் தவிர்த்து வீடோ, மனையோ வாங்க முயல்வது விழலுக்கு இறைத்த நீராகிவிடும். எங்குச் சென்றாலும் தரகர்களுக்குள் ‘ஒருங்கிணைப்பு’ உண்டு. இத்தொழிலில் வாய் ஜாலம் இருந்தால் வீடு விற்பவரிடமும், வாங்கியவரிடம் ஒருசேர தரகர்கள் கமிஷன் வாங்க முடியும். ஆனால், இது கணினி யுகம் அல்லவா? இப்போது வீடு விற்க வாங்கத் தரகர்களை நாடுவதைவிட இணையதளங்களை நாடும் போக்கு மக்களிடம் அதிகரித்து விட்டது.
இன்று வீடுகள் விற்பனை குறித்த தகவல்கள் இணையதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. வீடு வாங்குவோர் செய்யும் முதல் காரியமே இணையதளங்களில் தேடுதல் வேட்டையைத் தொடங்குவதுதான். இதைக் கருத்தில் கொண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்படப் பல நிறுவனங்கள் புதிய புதிய இணையதளங்களைத் தொடங்கிய வண்ணம் உள்ளனர். தரகர்களைத் தவிர்ப்பதைத் தாண்டி, ஒரே தேடுதலில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளை இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. தரகர் மூலம் என்றால், சில வீடுகளை நேரடியாகக் காட்டுவார்கள். பிடிக்கவில்லையென்றால் சில நாட்கள் கழித்து மீண்டும் சில வீடுகளைக் காட்டுவார்கள். இதுவும் தற்போது பொதுமக்கள் இணையதளங்களை நாட முக்கியக் காரணம் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வோர்.
அதற்கேற்ப, ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்கள் தங்கள் வீட்டுத் திட்டங்களை இணையதள நிறுவனங்கள் மூலமாக அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. வீடுகளையும் இணையம் மூலமாக விற்கவும் முயன்று வருகின்றனர். இந்தியாவில் வீடுகள் மற்றும் வீட்டு மனைகள் வாங்குவது தொடர்பாகத் தங்கள் தளத்தில் ஆண்டுதோறும் 80 லட்சம் தேடல்கள் மேற்கொள்ளப்படுவதாக கூகுள் தேடுபொறி நிறுவனம் அண்மையில் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் டாடா ஹவுஸிங் நிறுவனம் இணையதளம் மூலம் வீடு விற்பதை அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ‘‘தங்கள் நிறுவனத்தின் வீடு விற்பனையில் இணையதளம் மூலம் விற்பது 30 சதவீதமாக உயரும்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘‘மேலும் இணையதளம் மூலம் வீடுகளை விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்களை எளிதில் தொடர்புகொள்ள முடிகிறது. இணையதளம் மூலம் வீடு தேடும் செலவுகள் மிகவும் குறைவு ’’ என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு உதாரணம்தான். இதுபோல இன்னும் பல பெரிய நிறுவனங்கள் தங்கள் வீட்டுத் திட்டங்களை இணையதளம் மூலமாகவே விற்க முயன்றுவருகின்றன.
இணையதளங்கள் மூலம் வீடு தேடும் போக்கு அதிகரிக்க என்ன காரணம் என்பது குறித்து இந்தியா ப்ராபர்டி.காம் சி.இ.ஓ. கணேஷ் வாசுதேவன் கூறுகையில், ‘‘தற்போது கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் மூலம் எல்லா நேரமும் இணையதளச் சேவையைப் பயன்படுத்தும் வசதி அதிகரித்துள்ளது. இருக்கும் இடத்தில் இருந்தபடி சேவைகளைப் பயன்படுத்தும் வகையில் வாழ்க்கை முறையும் மாறியிருக்கிறது. ஆன்லைன் வர்த்தக முறை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் சொத்துகளை இணையதளச் சேவை மூலம் வாங்குவதும் அதிகரித்துள்ளது.
எங்கள் நிறுவனத்தைப் பொறுத்த வரைச் சொத்துகளை வாங்க உதவுவது மட்டுமின்றி, வீட்டுக் கடன் வசதி, சட்ட உதவி, ஆவணங்கள் சரி பார்க்க உதவி எனப் பல உதவிகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களுக்குச் சொத்துகளைத் தேடி ஆராயும் அளவுக்கு ஆன்லைனில் பல விதமான தேடு பொறிகளைப் பதிவிறக்கம் செய்துள்ளோம். இடத்தைத் தேர்வு செய்யவும், மதிப்பைத் துல்லியமாக அறியவும் ஆன்லைனில் முடியும். நாம் வாங்க விரும்பும் அடுக்கு மாடி வீட்டை முப்பரிமாணத்தில் பார்க்கலாம். இதுபோன்ற வசதிகளும் ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் வீடு வாங்க ஒரு காரணம்’’ என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT