Published : 17 Jan 2018 01:26 PM
Last Updated : 17 Jan 2018 01:26 PM
ஒரு வீட்டை வாங்குவது பற்றி யோசித்து கொண்டிருக்கிறீர்களா? எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று தெரியவில்லையா? கவலைப்படவேண்டாம்.
1. வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அறிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை விதிமுறைகள்
2. கடன் மதிப்பீட்டின் முக்கியத்துவம்
3. வங்கிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளும் காரணிகள்
ஆகியவற்றை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வீட்டு கடன் விண்ணப்பிக்கும் முன் அது சிக்கலின்றி உங்கள் கைக்கு கிடைக்க கீழ்கண்ட குறிப்புகளை சரி பார்த்து கொள்ளுங்கள்
கடன் மதிப்பீடு
உங்களுக்கு வங்கி கடன் ஒப்புதல் அளிப்பதில் சிபில் (CIBIL )ஸ்கோர் எனப்படும் கடன் மதிப்பீடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
சிபில் மதிப்பெண் என்பது ஒரு தனி நபரின் கடன் அட்டையிலிருந்து, பிற மாத தவணைகள் மற்றும், தாமதம் மற்றும் தவறிய தவணைகள் உட்பட அனைத்து தகவல்களையும் வங்கிக்கு தெரிவித்து விடும்.
சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் 700 மதிப்பெண்களுக்கு மேல் இருந்தால் அது சிறந்த மதிப்பெண்ணாக கருதப்படுகிறது.
www.cibil.com என்ற இனையதளத்தில் உங்கள் சிபில் மதிப்பெண்ணை அறிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு
பெரும்பாலும் வங்கிகள் 20 வயது முதல் 60 வயது வரையிலான மாதசம்பளம் பெரும் நபர்களுக்கு எளிதில் கடன் ஒப்புதல் அளித்து விடுகிறது. சுய தொழில் முனைவோராக இருப்பின் 24 முதல் 65 வயது வரை இருப்பவர்களை வங்கிகள் நிதி ரீதியாக நிலையானவராக கருதுகின்றன. பெரும்பாலும் கடன் பெறுபவரின் நிதி நிலையை பொருத்தும், அவரது திரும்ப செலுத்தும் திறனை பொருத்துமே வங்கிகள் கடனுக்கு ஒப்புதல் அளிக்கின்றன.
தொழில்
கடனுக்கு விண்ணபிப்பவரின் நிறுவனத்தின் ஸ்திரத்தன்மை பொருத்தும் கடன் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. பெரும்பாலும் அரசாங்கமோ, அரசாங்கம் சார்ந்த நிறுவங்களிலோ பணிபுரிபவராக இருந்தால் எளிதில் கடன் ஒப்புதல் கிடைத்து விடும்.
சுய தொழில் புரிபவர்களாகவோ தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களாக இருந்தால் அவர்களுக்களிக்கப்படும் மதிப்பீடு குறைவே. அதே போல் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்தால் அந்த நிறுவனத்தின் ஸ்திர தன்மையையும் ஒரு அளவீடாக வங்கிகள் எடுத்து கொள்கின்றன.
வேலை அனுபவம்
ஒரு நபரின் கடனுக்கான விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கு குறைந்தபட்சம் அவர் 2-3 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருக்கவேண்டும்.
சுய தொழில் புரிபவர்களாக இருந்தால், அவர்கள் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளாவது அந்த தொழிலில் இருந்திருக்க வேண்டும். மேலும், கடனுக்கு விண்ணப்பிக்கும் வங்கிகளுடன் நீண்ட ஆண்டுகள் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருந்தால் எளிதில் கடன் ஒப்புதல் கிடைக்கும்.
மாத வருமானம்
வீட்டுக் கடன் பெறும் போது விண்ணப்பதாரரின் மாதாந்திர வருமானம் முக்கிய அம்சமாக பரிசீலிக்கப்படும்.
கடனுக்காக விண்ணப்பிக்கும் போது உங்களின் வங்கி கணக்கை ஆராயும் போது உங்களால் EMI சரிவர செலுத்த முடியாதென வங்கி கருதினால் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
ஒரு தனி நபர் EMI உட்பட தனது பிற மாதந்திர செலவுகளுக்கும் பின் வங்கிகளில் வைத்திருக்கும் இருப்பு தொகை அவருக்கு கடன் கிடைக்க ஏதுவானதாக கருதப்படுகிறது.
நீங்கள் சம்பளமாக 50,000 ரூபாய் பெருகிறீர்கள் என்றால் உங்கள் EMIக்கு செலுத்த வேண்டிய தொகையின் ஒரு பகுதியாக உங்கள் CTCயில் LTA மற்றும் மருத்துவ செலவுகளை வங்கிகள் வருவாயின் பகுதியாக கருதுவதில்லை.
திருப்பிசெலுத்துதல்
வங்கிக் கடன் திருப்பி செலுத்துதலை பொருத்தவரை, குறைந்த தவணைகளே சிறந்தது. 5 வருடங்களில் பணத்தை திருப்பி செலுத்த முடியுமென்றால் நிதி நிறுவனங்களில் உங்களைப் பற்றிய மதிப்பீடு அதிகரிக்கும். ஆனால் இரண்டு இலக்கமாக, அதாவது 10 வருடங்கள் அல்லது அதற்கு மேல் ஆனால் உங்களுக்கான மதிப்பீடு புள்ளிகள் குறையும்.
மேற்கூறிய விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டுக்கடனை எளிமையாகப் பெறுங்கள்.
சமீபத்தில் நீங்கள் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பித்தவரா? உங்கள் அனுபவத்தை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT