Last Updated : 13 Jan, 2018 09:33 AM

 

Published : 13 Jan 2018 09:33 AM
Last Updated : 13 Jan 2018 09:33 AM

இந்த ஆண்டின் வண்ணம்: அடர் ஊதா

 

பி

ரபல நிறுவனமான ‘பான்டோன் வண்ண மையம்’, 2018-ம் ஆண்டின் வண்ணமாக அடர் ஊதாவைத் (Ultra Violet) தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ‘ஆர்வத்தைத் தூண்டக்கூடிய சிந்தனை மிக்க ஊதா’ என்று இந்த வண்ணத்தை விளக்கியிருக்கிறது இந்நிறுவனம். ‘பான்டோன் வண்ண மையத்தின்’ இயக்குநர் லீட்ரைஸ் ஈஸ்மேன், “புதுமையும் கற்பனையும் தேவைப்படுகிற காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அடர் ஊதா வண்ணம், பிரபஞ்சத்தின் ரகசியங்களையும் அறிவின் எல்லைகளைத் தூண்டும் கண்டுபிடிப்புகளையும் உருவாக்கும் தன்மை கொண்டது. பரந்த எல்லைகளற்ற இரவு வானம், கலை நுணுக்கங்கள், எதிர்க்கலாச்சாரம் போன்றவற்றின் அடையாளமாக ஊதா நிறம் விளங்குகிறது” என்கிறார்.

படைப்பாற்றல் மட்டுமல்லாமல், இந்த அடர் ஊதா நிறம், அமைதி, ரகசிய, ஆன்மிகத் தன்மைகளைக் கொண்டிருப்பதாக ‘பான்டோன்’ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்த வண்ணத்தை வீட்டில் பயன்படுத்துவதற்கான சில ஆலோசனைகள்...

துணிச்சலை விரும்புபவர்கள்

துணிச்சலை விரும்புபவர்கள் வீட்டில் இந்த அடர் ஊதா வண்ணத்தைப் பயன்படுத்தலாம். அத்துடன், தனித்துவத்தை விரும்புவர்களும் தாராளமாக இந்த வண்ணத்தை வீட்டின் உட்புற அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம். இதமான, வசதியான உட்புற அலங்காரத்தை விரும்புபவர்களும் இந்த வண்ணத்தைப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருக்கின்றனர் சர்வதேச உட்புற வடிவமைப்பாளர்கள். இனி வரப்போகும் ஆண்டுகளிலும் வடிவமைப்பு உலகில் இந்த வண்ணம் ஆதிக்கம் செலுத்தலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

பொருந்தும் வண்ணங்கள்

பசுநீலம், பச்சை, கருஞ்சிவப்பு, இளம் ஆரஞ்சு, பித்தளை நிறம் போன்ற வண்ணங்களுடன் இணைத்து இந்த அடர் ஊதாவை உட்புற அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம். தனித்துவமான உட்புற அலங்காரத்துக்குச் சிவப்பு, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, அடர் ஆலிவ் பச்சை போன்ற நிறங்களுடன் அடர் ஊதா நிறத்தை இணைத்துப் பயன்படுத்தலாம். நவீன அலங்காரத்தை விரும்புபவர்கள் வெள்ளை, சாம்பல் போன்ற நிறங்களுடன் இணைத்து இந்த வண்ணத்தைப் பயன்படுத்தலாம். பேஸ்டல் வண்ணங்களான வெளிர் ரோஜா (Pale Rose), இளநீலம் போன்றவற்றுடன் இணைத்தும் பயன்படுத்தலாம். இந்த பேஸ்டல் வண்ணங்கள் அறையில் இணக்கமான தோற்றத்தை உருவாக்கக்கூடியவை. அத்துடன், இந்த அடர் ஊதாவைப் பச்சை நிறங்களுடன் இணைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர் உட்புற வடிவமைப்பாளர்கள்.

வெளிச்சம்

அடர் ஊதா வண்ணங்கள் ஒளியின் பிரதிபலிப்புகளுக்குத் தகுந்தபடி மாறுபட்ட தோற்றத்தைக் கொடுக்கும். எந்த மாதிரியான விளக்குகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து இந்த வண்ணத்தின் பிரதிபலிப்புகள் மாறும். அதனால், விளக்குகளைத் தேர்ந்தெடுக்கும்போது இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்த அறைக்குப் பொருந்தும்?

இந்த அடர் ஊதா மாதிரியான துணிச்சலான வண்ணங்களை நுழைவாயில், வரவேற்பறை, குளியலறை போன்றவற்றில் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். ஆனால், எல்லா அறைகளையும்விட இந்த அடர் ஊதா வண்ணத்தை வரவேற்பறைக்குப் பயன்படுத்துவது கூடுதல் பொருத்தமாக இருக்கும் என்கின்றனர் உட்புற வடிவமைப்பாளர்கள். இந்த அடர் ஊதா வண்ணத்தைக் கூடுமானவரை குழந்தைகளின் படுக்கை அறைக்குப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஆனால், பெரியவர்களின் படுக்கை அறைக்கு இந்த வண்ணத்தைப் பயன்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x