Published : 30 Dec 2017 11:08 AM
Last Updated : 30 Dec 2017 11:08 AM
ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் எதிர் வரும் ஆண்டு கடந்த ஆண்டைவிடச் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரையில் இந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்க்க வருவதாக அந்தத் துறையினர் சொல்கிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் 8-ல் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கம் புதிய சிக்கலைத் தந்ததாக அந்த நேரத்தில் ரூபி மனோகரன் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டுதான் மணல் தட்டுப்பாடு உச்சத்தைத் தொட்டது எனலாம். அதைக் கட்டுப்படுத்த ம எம்-சாண்ட் என அழைக்கப்படும் மாற்று மணலைப் பயன்படுத்தமுதல்வர்அறிவுறுத்தினார். ஜி.எஸ்.டி.யும் இந்த ஆண்டுதான் அமல்படுத்தப்பட்டது. ஆன்-லைன் மணலையும் மாநில அரசு அறிமுகப்படுத்தியது. இறக்குமதி மணலைக் கொண்டுவருவது தொடர்பான வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்றம் மணல் குவாரிகளை 6 மாதங்களில் மூட உத்தரவிட்டதும் இந்த ஆண்டில் நடந்த மற்றுமொரு முக்கிய நிகழ்வு.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மணல் ஒரு பெரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதைத் தடுப்பதற்கு தமிழக அரசு சில முயற்சிகளை எடுத்தது. ஆனால், தட்டுப்பாடு தொடர்ந்துகொண்டிருப்பதன் எதிரொலியாக மணல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. மணலுக்காக வாகனங்கள் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக ஆன்லைன் மணல் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டது.
அத்துடன் புதிய பிரச்சினையாக வந்திருப்பது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம். வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தும் இந்தச் சட்டத்தால் வீடு விலை உயரும் அபாயம் இருப்பதாகச் சொல்கிறார் கிரடாய் அமைப்பின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் நவீன் குமார்.
மேலும் இந்த ஆண்டின் ரியல் எஸ்டேட் குறித்துச் சொல்லும்போது ‘ஒரு புதிய தொடக்கம்’ எனக் குறிப்பிடுகிறார். “இரு முக்கியமான விஷயங்கள் இந்த ஆண்டில் கட்டுமானத் துறையில் விளைவுகளை ஏற்படுத்தின. ஒன்று, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம். இந்தச் சட்டம் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், இதன் மூலம் வீடு விலை உயர வாய்ப்புள்ளது. இரண்டாவது ஜி.எஸ்.டி. இதுவும் வரவேற்கப்பட வேண்டிய திட்டம்தான்.
ஆனால், இது கட்டுமானத் துறையில் மட்டுமல்லாது இந்தியத் தொழில் துறையில் மிகப் பெரிய பாதிப்பை விளைவித்தது. இதனால் கட்டுமானத் துறைக்கும் வரி விதிப்பு கூடியது. இந்த வரி விதிப்பு முறையாலும் வீட்டு விலை கூட வாய்ப்பிருக்கிறது” என்றார் அவர்
2017-ம் ஆண்டு 2016-ம் ஆண்டின் பின்னடைவுகளைப் போக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 2017-ம் முதல் மூன்று மாதங்கள் ரியல் எஸ்டேட் துறை எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்னும் நம்பிக்கையைக் கொடுப்பதுபோல ஏற்றமில்லையென்றாலும் இறக்கமில்லாமல் தொடங்கியது. புதிய திட்டங்கள் அதிகம் தொடங்கப்படாவிட்டாலும் முந்தைய ஆண்டில் முடிக்கப்பட்ட வீட்டுக் குடியிருப்புத் திட்ட வீடுகள் விற்பனையாயின.
2016-ம் ஆண்டு சிறப்பான ஆண்டு எனச் சொல்ல முடியாவிட்டாலும் ரியல் எஸ்டேட் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கவில்லை. ஆனால், இதற்கு நேரெதிராக 2017 இருந்தது. 2016-ன் தொடக்கம் சிறப்பாகவே இருந்தது. ஆனால், 2017 அப்படியான நம்பிக்கையைத் தரவில்லை.
“கடந்த ஆண்டைக் காட்டிலும் மிக மோசமான பாதிப்பை விளைவித்த ஆண்டு இது” என்கிறார் ரூபி மனோகரன். மேலும் “வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள முடியும். ஆனால், மத்திய/மாநில அரசுகளின் செயல்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதுதான் சிரமமானது” என்கிறார் அவர்.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. அமல் படுத்தப்பட்டது, ரியல் எஸ்டேட் ஒழுங்முறைச் சட்டம் ஆகியவை பேரிடர்களைக் காட்டிலும் மோசமான பாதிப்பைத் தந்தாகச் சொல்லும் அவர், “இந்த ஆண்டில் இளைஞர்கள் வீடு வாங்குவது குறைந்திருக்கிறது. கட்டுமான நிறுவனங்கள் அவர்களைத்தான் நம்பி இருக்கின்றன. இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்” என்கிறார்.
ஜி.எஸ்.டி., ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் போன்ற பாதிப்புகளிலிருந்து கட்டுமானத் துறை ஒரு நிலையில் மீண்டுவிடும். ஆனால், மணல் போன்ற கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு உண்மையில் கட்டுமானத் துறைக்கும் அரசுக்கும் எதிர்வரும் ஆண்டில் சவாலாகத்தான் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT