Published : 02 Dec 2017 10:54 AM
Last Updated : 02 Dec 2017 10:54 AM
தாஜ்மகாலை இடிக்க வேண்டும் என்ற கோஷங்கள் எல்லாம் இப்போதுதான் அடங்கியிருக்கின்றன. அதற்குள், ‘ஹுமாயூன் சமாதியை இடிக்க வேண்டும்’ என்று கூக்குரல்கள் எழுந்திருக்கின்றன.எழுப்பியிருப்பது ஷியா மத்திய வக்பு வாரியம்தான். என்ன காரணம் தெரியுமா? முஸ்லிம்களுக்கான இடுகாட்டுக்கு இடம் இல்லையாம். அதனால் ஹுமாயூன் சமாதியை இடித்துவிட்டு, அங்கு இடுகாட்டுக்கு இடம் ஏற்படுத்திக் கொடுக்க அந்த வக்பு வாரியம் கேட்டிருக்கிறது!
இந்தியாவின் இரண்டாவது முகலாய மன்னர் ஹுமாயூன். அவர் 1556-ம் ஆண்டு இறந்தார். அவரின் நினைவாக, அவருடைய முதல் மனைவி பேகா பேகம் (இவருக்கு ஹாஜி பேகம் என்றொரு பெயரும் உண்டு), ஹுமாயூனின் மகன் அக்பர் ஆகியோரால், சமாதி ஒன்றைக் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதுதான் ஹுமாயூன் சமாதி.
இன்று சாக்கடையாக ஓடும் யமுனை நதிக்கரையான கிழக்கு நிஜாமுதீன், அன்று பளிங்கு போல இருந்தது. அங்கு, இந்தச் சமாதியை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. 1565 முதல் 1572-ம் ஆண்டு வரை, சமாதி கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. அன்றைய மதிப்பில் இந்தச் சமாதியைக் கட்ட சுமார் ரூ.15 லட்சம் செலவானது.
இந்தச் சமாதி இன்று தேசிய நினைவுச் சின்னமாக மட்டுமல்லாமல், ‘யுனெஸ்கோ’வால் 1993-ம் ஆண்டு, இது ‘உலக பாரம்பரியப் பகுதி’யாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, ஒருவிதத்தில் இந்தக் கட்டிடம், இந்தியாவுக்கும் உலகுக்கும் இடையிலான ஒரு கலாச்சாரப் பாலமாகவே விளங்குகிறது.
இன்னொரு பக்கம், இந்தச் சமாதி, இஸ்லாமியர்களுக்கு இடையிலான உறவுப் பாலமாகவும் உள்ளது. எப்படி என்றால், அடிப்படையில், இந்தச் சமாதி சன்னி பிரிவு முஸ்லிம்களின் கட்டிடமாகவே பார்க்கப்பட்டாலும், முகலாய ஆட்சியில் நூர்ஜஹான், மும்தாஜ் போன்ற அரசியர்களும், அன்றைக்குப் பிரதமராக இருந்த சஃப்தர்ஜங் போன்ற நிர்வாகிகளும் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். எனவே, ஷியா பிரிவு முஸ்லிம்களும் இந்தச் சமாதியுடன் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்கிறார்கள்.
தோட்டம் கொண்ட கல்லறை
மிரக் மிர்ஸா கியாஸ் என்னும் பெர்சிய கட்டிடக் கலைஞரின் மேற்பார்வையில், இந்தச் சமாதி கட்டப்பட்டிருக்கிறது. இந்தியாவில், தோட்டத்துடன் கூடிய முதல் சமாதியாக, ஹுமாயூன் சமாதி விளங்குகிறது.
சுமார் 35 ஏக்கர் பரப்பளவிலான தோட்டம் ஒன்றில் இந்தச் சமாதி வீற்றிருக்கிறது. நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட அந்தத் தோட்டத்தின் நடுவில் சிறு ஓடை போன்ற அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. நிலத்திலிருந்து சுமார் 7 மீட்டர் உயரத்துக்குக் கற்களால் பரந்த தாங்கு மேடை போன்ற அமைப்பைக் கட்டி, அதற்கு மேலே, 56 சிறிய அறைகளைக் கொண்ட அடிப்பீடத்தை எழுப்பி, அதற்கும் மேலே இந்தச் சமாதி கட்டப்பட்டிருக்கிறது.
முகலாய பாணி கட்டிடத்தின் தொடக்கப் புள்ளியான இந்தச் சமாதியைக் கட்ட சிவப்பு மணல் கற்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தாழ்வாரங்கள், குவிமாடங்கள் போன்றவற்றுக்குச் சலவைக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 47 மீட்டர் உயரமும் 91 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது இந்தக் கட்டிடம்.
பாரசீகப் பாணியிலான இரட்டைக் குவிமாட அமைப்பைக் கொண்ட முதல் இந்தியக் கட்டிடம் இதுதான். அந்தக் குவிமாடத்தின் உச்சியில், தைமூரியச் சமாதிகளில் உள்ளது போன்ற பிறை வடிவம் பொருத்தப்பட்டுள்ளது.
ஆன்மிக அனுபவத்தின் சங்கமம்
இந்தக் கட்டிடம் ஹுமாயூனின் சமாதியை மட்டுமே தாங்கி நிற்கவில்லை. மாறாக, நன்கு பராமரிக்கப்படும் பூந்தோட்டங்கள், படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு, மசூதி ஆகியவையும் உள்ளன.
சூஃபிக்களின் முக்கிய இடமாக இந்தச் சமாதி பார்க்கப்படுகிறது. இந்தச் சமாதியைச் சுற்றி வேறு சில கல்லறைகள், கடைத் தெருக்கள், உணவகங்கள், தர்காக்கள் போன்றவை உள்ளன. தவிர, குடிசைகள், சட்டத்துக்குப் புறம்பான கட்டிடங்கள், எப்போதும் குறையாத மக்கள் நடமாட்டம் ஆகியவற்றுடன், மனிதத் துயரங்களுக்கும் அமானுஷ்யமான ஆன்மிக அனுபவத்துக்கும் இந்தச் சமாதி சாட்சியாக விளங்குகிறது.
90-களில் ஆகா கான் அறக்கட்டளையால், இந்தச் சமாதி புனரமைக்கப்பட்டது. அதனால்தான், இன்றுவரை இந்தக் கட்டிடம் அதன் பொலிவைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பாரம்பரியச் சின்னத்தை மதங்களைக் கடந்து காப்பாற்ற வேண்டும். வரலாற்றுக்கு மசூதியும் சமாதியும் ஒன்றுதான், இல்லையா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT