Last Updated : 30 Dec, 2017 11:06 AM

2  

Published : 30 Dec 2017 11:06 AM
Last Updated : 30 Dec 2017 11:06 AM

வங்கிக் கடன் விண்ணப்பம்: நிராகரிப்புகளைத் தவிர்க்க ஆலோசனைகள்

ஊருக்கு ஊர் வீட்டுக் கடன் மேளாவை வங்கிகளும் வீட்டுக் கடன் நிறுவனங்களும் நடத்தி வருகின்றன. ஆனால் நினைத்த மாத்திரத்தில் அனைவருக்கும் வீட்டுக் கடன் கிடைத்து விடுவதில்லை. அதற்குப் பல நடைமுறைகளை வைத்துள்ளன வங்கிகள். அதன்படி தான் வங்கிகள் வீட்டுக்கடனை அளிக்கின்றன. அதேநேரத்தில் விண்ணப்பம் முறையாக இல்லை என்றால் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இதனால் வீட்டுக் கடன் பெறுவது எந்தச் சூழ்நிலையிலும் தாமதமாகும்.

“வீட்டுக் கடன் பெறுவது எதனால் தாமதமாகிறது என்பது விண்ணப்பதாரகளுக்கு குழப்பம் இருக்கலாம். அல்லது சிலரது விண்ணப்பம் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்படுவது அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் இவற்றுக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் காரணமல்ல, எந்த வீட்டுக் கடன் நிறுவனத்தில் கடன் வாங்க முயற்சி செய்கிறீர்கள் என்பதும், அவர்களது நோக்கமும் அடிப்படையானது. அதிலிருந்துதான் வீட்டுக் கடன் விண்ணப்பதாரரின் கடன் தகுதி முடிவு செய்யப்படும். இதில் முரண்பாடு இருந்தால் அந்த நிறுவனத்தில் கடன் பெற முடியாது” என்கிறார் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். வரதராஜன்.

தவிர வங்கிகள் எதிர்பார்க்கும் தகுதி அல்லது ஆவணங்களில் திருப்தி இல்லாமல் இருந்தாலும் நிராகரிக்கப்படலாம். குறிப்பாக முறையான ஆவணங்கள் இல்லாதது, சம்பந்தப்பட்டவரின் வருமான வரம்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் விண்ணப்பங்கள் நிராகரிப்புக்குக் காரணமாக இருக்கின்றன என மேலும் அவர் சொல்கிறார்.

ஆரம்ப கட்ட நிராகரிப்புகளை தவிர்க்க வீட்டுக் கடன் நிறுவனங்கள் விரும்பும் தகுதிகளை விண்ணதாரர் கொண்டிருப்பது அவசியம். இல்லையென்றால் விண்ணப்பம் செய்பவரின் தகுதியை ஏற்றுக்கொள்ளும் வீட்டுக் கடன் நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். தேவையான விவரங்கள் கச்சிதமாக இருந்தால் ஆரம்ப கட்ட நிராகரிப்பை தவிர்க்க முடியும்.

வீட்டுகடன் நிறுவனங்களைப் பொறுத்தவரை கடன் வாங்குபவர் அதை திருப்பி செலுத்தும் தகுதி உள்ளவராக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். கடனுக்கான அதிகபட்ச தொகையை நிர்ணயிக்கும் போது அவரது இதர தகுதிகளும் பார்க்கப்படும்.

அவர் ஏற்கெனவே பெற்றுள்ள கடன்கள், நிதி நிலைமை, விண்ணப்பம் செய்பவரின் வருமானம், பழைய கடன்களை திரும்பி செலுத்திய விதம், அவரது கிரெடிட் கார்டு பயன்பாடு விவரம், வங்கி சேமிப்பு, காப்பீடு, தற்போது பணியில் உள்ள நிறுவனம், பணியில் மீதமுள்ள காலம் மற்றும் செய்யும் வேலையின் தன்மை போன்ற விஷயங்களும் அவரது கடன் தகுதியையும், தொகையையும் தீர்மானிக்கின்றன.

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையான அளவு அவரது வருமானம் இருக்கிறதா என்பதையும் பரிசீலைனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரரின் மாதச் சம்பளத்தில் அல்லது மாத வருமானத்தில் இருந்து உத்தேச வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ, பிஎஃப் உள்ளிட்ட அனைத்து வகை பிடித்தங்களும் போக அவரது சம்பளத்தில் குறைந்தபட்சம் 45 சதவீதமாவது குடும்பச் செலவுகளுக்காக தேவைப்படும் என முடிவு செய்து கடன் அளவு தீர்மானிக்கப்படும்.

இஎம்ஐ கட்டுவதால் அவரது மாதாந்திர செலவுகள் தடைபடக்கூடாது என்பதையும் வீட்டுக் கடன் விண்ணப்பங்களில் பரிசீலிக்கப்படும். எனவே வங்கிகள் கேட்கும் முறையான ஆவணங்கள், வருமான விவரங்கள் தெரிவித்தால் ஆரம்ப கட்ட நிராகரிப்புகளைத் தவிர்க்கலாம் என அவர் யோசனை சொல்கிறார்.

நடைமுறைகள் என்னவோ எளிமையானதுதான். ஆனால் இந்த நடைமுறைகளை சிரமமாக எடுத்துக் கொள்ளாமல் விண்ணப்பித்தால் வீட்டுக் கடன் நிச்சயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x