Published : 25 Nov 2017 10:55 AM
Last Updated : 25 Nov 2017 10:55 AM
இ
ரு வாரங்களுக்கு முன்பு சென்னையில் விடாத மழை பெய்துகொண்டே இருந்தது. மேகம் மூடிக் கிடந்த சென்னை வானத்தில் இடியும் மின்னலும் தொடர்ந்தன. இம்மாதிரி இடி, பெருமழை என்ற விபரீதக் கூட்டணி இயங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டில் இருப்பதுதான் நல்லது. என்றாலும் எல்லோராலும் எப்போதுமே அப்படி இருக்க முடிவதில்லை. தவிர திடீரென இயற்கை எப்படி வேண்டுமானாலும் பயமுறுத்தலாம். வெளியில் இருக்கும்போது மழையும் இடியுமாகச் சூழல் மாறினால் என்ன செய்வது?
நீங்கள் ஒரு திறந்த வெளியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். அருகில் மூன்று கட்டிடங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒன்று பாழடைந்த நிலையில் இருக்கிறது, மீதி இரண்டும் பக்காவான கட்டிடங்கள். ஒன்று இரண்டடுக்குக் கட்டிடம், மற்றொன்று எட்டடுக்குக் கட்டிடம். இவற்றில் எதிலாவது நுழையலாமா திறந்த வெளியில் இருப்பதே பாதுகாப்பனதா சற்றுத் தள்ளியிருக்கும் மரத்தடியில் நிற்கலாமா?
மரத்தடியிலோ மின்கம்பங்களின் அருகிலோ ஒருபோதும் நிற்காதீர்கள். இடி, மின்னல் பாதிக்க அதிகம் வாய்ப்பு உண்டு. பாழடைந்த கட்டிடம் பாதுகாப்பானது அல்ல என்பது உங்களுக்குத் தெரியும்.
எப்போதுமே மின்னல் உயரமான கட்டிடத்தைத்தான் அதிகம் தாக்கும். எனவே, உயரம் குறைந்த கட்டிடத்தில் நிற்பது பாதுகாப்பானது (அந்த மிக உயரமான கட்டிடத்தில் இடி தாங்கி பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் அப்போது விசாரித்து உறுதி செய்து கொள்ள முடியாது அல்லவா!)
மைதானம், பூங்கா இவற்றைப் போன்ற பெரிய திறந்த வெளிகளில் நின்றிருந்தால் உடனே பாதுகாப்பான இடத்துக்கு ஓடுங்கள். ஏனென்றால் அந்தப் பகுதியில் இடி, மின்னல் பாய்ந்தால் நீங்கள்தான் அங்கு இருப்பதிலேயே உயரம்!
நீச்சலடித்துக் கொண்டிருந்தாலோ கடற்கரையிலோ ஆற்றங்கரையிலோ இருந்தாலோ உடனே விலகிச் செல்லுங்கள். இடி, மின்னலின்போது பரந்த நீருக்கு அருகே இருப்பது மிகவும் ஆபத்தானது.
கூட்டமாக இருக்கும்போது தைரியம் அதிகம்தான் இருக்கும். என்றாலும் இடி, மின்னல் சமயத்தில் அனைவரும் தள்ளித் தள்ளி நில்லுங்கள் அல்லது தள்ளித் தள்ளி நடந்து செல்லுங்கள். ஒவ்வொருவருக்குமிடையே ஐம்பது அடி தொலைவாவது இருக்கட்டும். எதற்காக இப்படி? இடி, மின்னல் தாக்கினால் மொத்தமாகத் தாக்க வேண்டாம் என்பதற்காகவா? மின்னல் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பயணம் செய்யும் ரிஸ்க்கைக் குறைக்கத்தான் இந்த வழிமுறைகள்.
கடுமையாக இடி, மின்னல் இருந்தால் முதுகில் சுமந்து கொண்டிருக்கும் பையை நீக்கிவிடுவது நல்லது. காரணம் அவற்றில் உலோகப் பகுதிகள் இருக்க வாய்ப்பு உண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT