Published : 11 Nov 2017 10:56 AM
Last Updated : 11 Nov 2017 10:56 AM
சொ
த்துகள் வாங்குபவர்கள் அல்லது விற்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நிலம் தொடர்பான ஆவணங்கள் பல உள்ளன. அவற்றில் நமக்குத் தேவையான சில அடிப்படை ஆவணங்களைப் பற்றிப் பார்ப்போம். நிலம், வீடு போன்ற சொத்துகளுக்கான ஆவணங்களை வருவாய்த் துறை, பத்திரப்பதிவுத் துறை, உள்ளாட்சித் துறை ஆகிய மூன்று துறைகளும்தாம் பராமரிக்கின்றன. ஒவ்வொரு துறை வாரியாகப் பராமரிக்கப்படும் ஆவணங்களைப் பற்றிப் பார்ப்போம்.
வருவாய்த் துறை
நிலம் தொடர்பான அனைத்துச் செயல்களையும் செய்யும் உரிமை வருவாய்த் துறைக்குத்தான் உள்ளது. குறிப்பாக நிலவகை மாற்றம், நில ஒப்படைப்பு, அரசு நில குத்தகை, நிலக்கொடை, நில உரிமை மாற்றம், நில எடுப்பு, பட்டா வழங்கல், நிலச் சீர்திருத்தம், நிலத்துக்கு வரி வசூலித்தல் போன்ற பணிகளை வருவாய்த் துறை மேற்கொள்கிறது.
தற்போது நமக்கு நடைமுறையில் பயன்படும், வருவாய்த் துறையால் பராமரிக்கப்படும் நிலம் தொடர்பான ஆவணங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
பட்டா
தமிழ்நாடு பட்டாப் பதிவு புத்தகச் சட்டம் 1983, தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987-ன் படி, ஒரு நிலம் அல்லது இடத்தின் உரிமையாளர் யார் என்பதைக் குறிக்கும் வகையில் வருவாய்த் துறையால் வழங்கப்படும் ஆவணம்தான் பட்டா. இதில் மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயருடன் பட்டா எண், உரிமையாளர்கள் பெயர், உரிமையாளருடைய தந்தை அல்லது கணவர் பெயர், புல எண், உட்பிரிவு எண், நிலத்தின் வகை, பரப்பளவு மற்றும் அதற்கான வரி ஆகியவை இடம் பெற்றிருக்கும். நிலம் தொடர்பான அனைத்து விவரங்களும் இதில் அடங்கியிருப்பதாலேயே இது முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆவணமாகக் கருதப்படுகிறது.
இந்தப் பட்டாவின் நகலை இணையதளத்தில் நாமே பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி உள்ளது. இதைப் பதிவிறக்க https://goo.gl/b625Wn என்ற இணையதள முகவரிக்குச் சென்று முதலில் நாம் எந்தப் பட்டா நகலைப் பார்க்க விரும்புகிறோமோ அந்நிலம் உள்ள மாவட்டத்தை முதலில் தேர்வுசெய்ய வேண்டும். பிறகு வட்டத்தைத் தேர்வுசெய்து பிறகு ஊரைத் தேர்வுசெய்து பட்டா எண்ணையும் அளிக்க வேண்டும். பட்டா எண் தெரியவில்லையென்றால் புல எண் (சர்வே எண்) அளிக்கலாம். இறுதியில் திரையில் தெரியும் அங்கீகார மதிப்பு என்று தெரியும் எழுத்துக்களை (Captha) தட்டச்சு செய்தால் திரையில் நாம் அளித்த விவரங்களுக்கான பட்டாவின் நகல் தெரியும். தேவைப்பட்டால் இதை நாம் பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
சிட்டா
ஒரு தனிப்பட்ட நபருக்கு ஒரு கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதற்கு வருவாய்த் துறையால் பராமரிக்கப்படும் பதிவேடுதான் சிட்டா எனப்படும். அதில் ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு. அது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது போன்ற தொடர்பான விவரங்கள் அடங்கியிருக்கும்.
அடங்கல்
ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பரப்பு, அதன் பயன்பாடு, அந்தக் குறிப்பிட்ட நிலம் கிராமத்தின் மொத்த நிலத்தில் எந்தப் பகுதியில் உள்ளது என்பது போன்ற விவரங்களை உள்ளடக்கியிருக்கும் ஆவணம்தான் அடங்கல்.
‘அ’ பதிவேடு
‘அ’ பதிவேடு என்பது ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே (புல எண்கள்) எண்களும் அடங்கிய பதிவேடு. இதில் அனைத்து சர்வே எண்களுக்கான உரிமையாளர்கள் பெயரும் அதற்கான பட்டா எண் மற்றும் அந்நிலத்தின் பயன்பாடு போன்ற விவரங்களும் தொகுக்கப்பட்டிருக்கும்.
பத்திரப்பதிவுத் துறை
பத்திரம்
ஒரு சொத்து யாருக்கு உரிமை என்பதை அரசாங்கத்தின் மூலமாக உறுதிப்படுத்திக்கொள்ளும் ஆவணம்.
தாய்ப் பத்திரம்
ஒரு குறிப்பிட்ட நிலத்தைத் தற்போதைய உரிமையாளருக்கு முன்பு யாரிடமிருந்தது யார் வாங்கினார்கள் என்பதை அறிந்து கொள்ளக்கூடிய ஆவணம் தாய்ப்பத்திரம். இதுவும் பத்திரம்தான். நாம் இப்போது ஒரு சொத்து வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நாம் இன்னொருத்தருக்கு அந்தச் சொத்தை விற்றால் நாம் முதலில் வாங்கிய பத்திரம் தற்போது தாய் பத்திரம் என்றாகிவிடும்.
பத்திரப் பதிவில் பல முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றுக்கும் பத்திரப் பதிவுக்கான கட்டணமும் அதன் வகையைப் பொறுத்து மாறுபடும்.
இன்றைய தேதிப்படி நீங்கள் வாங்கும் நிலத்துக்குப் பத்திரச் செலவு மற்றும் பதிவுக் கட்டணம் இரண்டும் கட்ட வேண்டும். பத்திரச் செலவு எனப்படும் ஸ்டாம்ப் டூட்டியானது, வாங்கப்படும் நிலத்தின் அரசாங்க மதிப்புக்கு அதாவது ‘கைடு லைன் வேல்யு’ வில் 7 சதவீதம் பத்திரமாகவும், பதிவுக் கட்டணமாக 4 சதவீதமும் செலுத்த வேண்டும். அதாவது நிலத்தின் அரசாங்க மதிப்பில் மொத்தம் 11 சதவிகிதம் செலுத்த வேண்டும். இன்னமும் ஜி.எஸ்.டி இதற்குக் கொண்டுவரப்படவில்லை அப்படி வந்தால் வீடு நிலம் வாங்கும்போது சில லட்சங்கள் கூடுதலாகச் செலவழிக்க நேரிடும். குறிப்பிட்ட நிலத்தை யாருக்காவது நீங்கள் பரிசாகக் கொடுத்தால் பதிவுக் கட்டணம் இல்லாமல் 7 சதவீதம் பத்திரச் செலவு மட்டும் செய்ய வேண்டும். இது போன்ற பல முறைகளில் பத்திரப் பதிவு மேற்கொள்ளலாம் அதற்கான கட்டண விகிதங்களை https://goo.gl/dGogLk என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
அதைப் போன்று நம்முடைய நிலத்தின் அரசாங்க மதிப்பீடு எவ்வளவு என்று பார்க்க https://goo.gl/9mkuqo என்ற தளத்தில் பார்க்கலாம்.
உள்ளாட்சித் துறை
ஒரு இடத்தை வாங்கி அதில் நாம் வீடு கட்டத் தொடங்கும்போது உள்ளாட்சித் துறை அதில் பங்கு வகிக்கும். வீடு கட்ட கட்டிட அனுமதி உள்ளாட்சித் துறையில்தான் பெற வேண்டும். அதைப் போன்று வீடு கட்டிய பிறகு அதற்கு சொத்துவரி என்ற பெயரில் சதுர அடிக்கு ஏற்பவும், கட்டிடத்தின் தன்மைக்கு ஏற்பவும் உள்ளாட்சியால் வரி விதிக்கப்படும். இந்தத் தொகை ஆறு மாதத்துக்கு ஒரு முறை செலுத்தப்பட வேண்டும்.
ஒரு வீடு என்று வாங்கிவிட்டால் நம்மிடம் அதற்கான பத்திரம் இருக்கும், உள்ளாட்சித் துறையிடம் வரியும் கட்டுவோம் ஆனால், அந்த இடத்துக்கு பட்டா மட்டும் வாங்க மறந்து விடுவோம். பட்டா மிகவும் அவசியமானது. நம்மிடம் உள்ள பத்திரத்தின் நகலோடு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பட்டா பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT