Last Updated : 18 Nov, 2017 12:02 PM

 

Published : 18 Nov 2017 12:02 PM
Last Updated : 18 Nov 2017 12:02 PM

பொருள் புதிது 09: வீட்டைக் காக்கும் கண்கள்

திகாலையில் எழுந்து ஆள் நடமாட்டமற்ற சாலையில் பால் வாங்கச் செல்வோம். அதன் பின் அருகில் உள்ள பூங்காவில் நடைப் பயிற்சி செய்வோம். வாகனங்களை சிக்னலில் நிறுத்தக் கூட நேரமில்லாமல் அலுவலகம் விரைவோம். வாகனத்தை நிறுத்திவிட்டு லிப்டில் நாம் வேலை செய்யும் தளத்துக்கு ஏறுவோம்.

16jkr_bulletCamera

சாயங்காலம் நேரம் இருந்தால் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அரட்டை அடிப்போம். பல்பொருள் அங்காடியில் வீட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்குவோம். இறுதியாக இரவில் வீடு திரும்புவோம். இவைதாம் நம் அனைவருக்கும் அன்றாட நிகழ்வுகளாக இருக்கக் கூடும்.

ஆனால், இந்த எல்லா நிகழ்வுகளிலும் நாம் தனியாக இருப்பதில்லை. பாதுகாப்புக்காக நாம் பின்தொடரப்படுகிறோம். ஆம், நாம் நம்மை அறியாமலே எந்நேரமும் கண்காணிக்கப்படுகிறோம். நம்மைக் கண்காணிக்கும் அந்தக் கண்கள்தாம் பாதுகாப்பு கேமராக்கள். நம் வீட்டின் பாதுகாப்புக்கு இதைத்தான் நாம் இப்போது நம்பி இருக்கிறோம்.

பாதுகாப்பு கேமரா வகைகள்:

பயன்பாட்டைப் பொறுத்தவரையில் இந்தப் பாதுகாப்பு கேமராக்கள் அடிப்படையாக இரண்டு வகைகளைக் கொண்டுள்ளன. ஒன்று புல்லட் கேமரா, மற்றொன்று டோம் கேமரா. இந்த கேமராக்கள் அனலாக் கேமரா, ஐ.பி. கேமரா என்ற இரண்டுவிதமான தொழில்நுட்பங்களில் கிடைக்கின்றன.

புல்லட் (Bullet) கேமரா:

புல்லட் கேமரா என்பது பெயருக்கு ஏற்ற வண்ணம் குறிப்பிட்ட இடத்தை மட்டும் குறி வைத்துக் கண்காணிக்கும். இது வழக்கமாகப் பக்கவாட்டுச் சுவரில் பொருத்தப் பட்டிருக்கும். அங்கிருந்து நமக்கு வேண்டிய இடத்தைக் கண்காணிக்கும்படி குறிப்பிட்ட கோணத்தில் அது நிறுவப்பட்டிருக்கும். இந்த வகை கேமராவை வீட்டில் பொருத்துவது மிகவும் எளிது.

இந்த கேமராவின் அடிப்பகுதி தகட்டை மட்டும் சுவரில் நிறுவினால் போதும். அதன் பின் கேமராவின் கோணத்தை நமக்கு வேண்டியவண்ணம் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கண்காணிப்பதற்கு இந்த புல்லட் கேமராதான் சிறந்தது. இந்த கேமரா வெயில், மழையைத் தாக்குப் பிடிக்கும் வண்ணம் வடிவமைக்கப் பட்டிருக்கும். இதன் பார்க்கும் திறனும் மிக அகன்றதாக இருக்கும். குறைந்த வெளிச்சத்திலும் இதனால் துல்லியமாகப் படம் பிடிக்க முடியும். வீட்டின் முற்றம், கார் நிறுத்தும் இடம், வீட்டின் பின்புறம், தோட்டம் போன்றவற்றைக் கண்காணிப்பதற்கு இந்த புல்லட் கேமராதான் சிறந்த தேர்வாக இருக்க முடியும்.

டோம் (Dome) கேமரா:

இந்த கேமரா 360 டிகிரியில் பார்க்கும் திறன் கொண்டது. எனவே, இதன் பார்க்கும் சுற்றளவு பெரியதாக இருக்கும். இது நம் இமை போன்ற கூண்டுக்குள் இருக்கும். இதனால் அது எந்தக் கோணத்தில் எந்த இடத்தைப் பார்க்கிறது என்று அங்கு இருப்பவருக்குத் தெரியாது. இந்த கேமராக்கள் கூண்டுக்குள் இருப்பதால் இது எளிதில் உடையாமல் இருக்கும். இதன் கண்ணாடிக் கூண்டு எளிதில் உடையாத வண்ணம் உறுதியானதாக இருக்கும்.

திறந்தவெளி இடங்களைக் கண்காணிப்பதற்கு இந்த கேமரா உகந்தது அல்ல. ஆனால், அறைகள் போன்ற இடங்களைக் கண்காணிப்பதற்கு இது மிகவும் சிறந்தது. வீடுகளின் வரவேற்பறை, சமையலறை மட்டும் லிஃப்ட் போன்ற இடங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம்.

ஐபி (IP) கேமரா:

பாதுகாப்பு கேமராக்களைப் பொறுத்தவரை ஐபி கேமராக்கள் தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த கேமராக்கள் நேரடியாக நம் வீட்டின் நெட்வொர்க் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இவை காட்சிப் பதிவுகளை நேரடியாக இணையத்தில் அனுப்பும் வசதிகொண்டது. இதனால் இந்தக் காட்சிப் பதிவுகளை நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் எளிதில் பார்க்க முடியும். இந்த கேமராவின் விலை சற்று அதிகம் ஆனால், இதை நிறுவுவது மிகவும் எளிது. இது பிஒஇ (POE) சுவிட்சைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இதனால் மின்சாரத்துக்கு என்று தனி இணைப்பு இதற்குத் தேவையில்லை. இது நெட்வொர்க் இணைப்பில் இருந்தே மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். மேலும் இதில் பிடிஇஸட் வசதி உள்ளது. பிடிஇஸட் (PTZ) என்பதன் விரிவாக்கம் ‘விரி... திரும்பு... உருப்பெருக்கு’ என்பது ஆகும். இந்த வசதியைப் பயன்படுத்தி இதை இணையத்தின் மூலம் எளிதில் இயக்கலாம்.

16jkr_ipcameraஅனலாக் (Analog)கேமரா:

அனலாக் கேமரா பதிவுக் காட்சிகளின் தரம் சற்றுக் குறைவாகத் தான் இருக்கும். ஆனால், வெளிச்சம் குறைவான மற்றும் புகை மிகுந்த சூழ்நிலைகளிலும் இதனால் காட்சிகளைப் பதிவுசெய்ய முடியும். அனலாக் கேமரா பதிவுசெய்யும் காட்சிப் பதிவுகளை டிஜிட்டலாகப் பதிவுசெய்வதற்கு நமக்கு டிஜிடல் வீடியோ ரிக்கார்டர் தேவைப்படும். அனலாக் கேமராவை டிவிஆர் (DVR) உடன் இணைப்பதற்கு நமக்கு கோஆக்சியல் (Coaxial) கேபிள் தேவைப்படும். அது தவிர கேமராவுக்கு ஆற்றல் அளிக்க மின்கம்பியும் தேவைப்படும். அனலாக் கேமராவின் விலை குறைவு. ஆனால், டிவிஆர் மற்றும் கோஆக்சியல் கேபிளின் விலையைக் கணக்கில் கொண்டால் இதன் ஒட்டுமொத்த விலை அதிகரித்துவிடும்.

பாதுகாக்கும் கண்கள்

இந்தப் பாதுகாப்பு கேமராக்கள் இல்லாத தெருக்களோ அடுக்குமாடி குடியிருப்புகளோ இல்லை என்று சொல்லும் அளவுக்கு இதன் பயன்பாடு உள்ளது. தனி வீடுகளிலும் மக்கள் இதை வெகுவாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். நம் வீட்டின் கதவைப் போன்று இதுவும் அத்திவாசிய ஒன்றாக மாறிவருகிறது. நமது வசதிக்கு ஏற்ப தேர்வு செய்வதற்குப் பலவிதமான கேமராக்கள் பலதரப்பட்ட விலைகளில் சந்தையில் எளிதில் கிடைக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x