Published : 25 Nov 2017 10:55 AM
Last Updated : 25 Nov 2017 10:55 AM
எ
ப்போதும் உலக நாடுகளை புதுமையாலும் பிரம்மாண்டத்தாலும் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவைப்பவர்கள் சீனர்கள். அந்த வகையில் தற்போது கட்டிடக் கலையில் மேலும் ஒரு புதுமையை நிகழ்த்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். சீனாவில் உள்ள டியான்ஜின் (Tianjin) நகரத்தின் பின்ஹாய் என்ற இடத்தில் கலை நயம்மிக்க பிரம்மாண்டமான புத்தக நூலகம் ஒன்றை சீனாவின் நகர்ப்புற திட்டமிடல், வடிவவைப்பு நிறுவனம் கட்டியுள்ளது.
12 லட்சம் இலக்கு
இந்தப் பிரம்மாண்டமான நூலகத்தை டச்சு கட்டிடக் கலை நிறுவனமான எம்.வி.ஆர்.டி.வி.யும் சீனாவின் டியான்ஜின் நகர்ப்புற திட்டமிடல், வடிவமைப்பு நிறுவனமும் இணைந்து மூன்று ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளன. சுமார் 33 ஆயிரத்து 700 சதுர மீட்டர் பரப்பளவில் இந்நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நூலகத்தில் சுமார் இருபதாயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் 12 லட்சம் புத்தகங்களை இந்த நூலகத்தில் வைக்கத் திட்டமிட்டப்பட்டுள்ளது. அதேநேரம் நூலகத்தின் எந்தப் பக்கம் திரும்பினாலும் புத்தக அலமாரிகளில் புத்தகங்கள் இருப்பது போன்ற ஒளிப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஒளிப்படங்கள் பார்ப்பதற்கு அசல் புத்தகங்கள்போல் இருக்கின்றன.
வாரத்திற்கு 15 ஆயிரம்
வட்ட வடிவில் கட்டப்பட்டுள்ள இந்நூலகத்தின் மையப் பகுதியில் கண்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நூலகம் ‘The Eye of Binhai’ என்று அழைக்கப்படுகிறது. வாரத்திற்கு சுமார் 15ஆயிரம் பேர் இந்நூலகத்துக்கு வருகை தருகிறார்கள்.
குகைபோல் உள்ள இந்த நூலகத்தின் உட்புறம் கடல் அலைபோல் அழஅழகான வளைவுகளைக் கொண்டுள்ளது. மொத்தம் ஐந்து தளங்களைக் கொண்டுள்ள இந்த நூலகத்தில் கீழ்த்தளம் படிப்பதற்கும், விவாதிப்பதற்கும், கூட்டம் நடத்துவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. நடுவில் இருக்கும் தளங்கள் அலுவலகப் பயன்பாட்டுக்கும், மேல்தளம் கணினி பயன்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மின் புத்தகங்கள் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில் சீனாவில் திறக்கப்பட்டுள்ள இந்நூலகம் புத்தகங்களின் முக்கியத்துவத்தையும் வாசிப்பின் அவசியத்தையும் உணர்த்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment