Last Updated : 06 Nov, 2017 10:21 AM

 

Published : 06 Nov 2017 10:21 AM
Last Updated : 06 Nov 2017 10:21 AM

புறநகர்க் குடியிருப்புகள்: பருவமழை சென்னைக்குச் சாபமா?

செ

ன்னையில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தபோது ஃபேஸ்புக்கில் ஒரு தகவலைப் படிக்க நேர்ந்தது. ‘1994-ல் சென்னையில் பெய்த மழைதான் உச்சம். இப்போதுபோல் அப்போது வெள்ளம் குறித்த பீதி ஏதுமில்லை. ஏனென்றால், இப்போது தண்ணீர்க் காடாக இருக்கும் பகுதிகளில் எல்லாம், அப்போது வீடுகள் வரவில்லை’. உண்மைதான், 2000-ம் ஆண்டுக்குப் பிறகு சென்னையின் புறநகர்ப் பகுதிகளின் புலிப் பாய்ச்சல் வளர்ச்சியும் பருவமழைக் காலத்தில் பீதியடையும் அளவுக்கு வெள்ளப் பாய்ச்சலும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்புடையது என்பது நிதர்சனம்தான்.

இயல்பைவிட அதிகமாக சென்னையில் மழை பெய்த தருணங்களில் பழமையான சென்னையின் பகுதிகள், மழையால் பாதிக்கப்பட்ட செய்திகளைக் கேள்விப்பட்டிருக்க முடியாது. அப்படியே மழை நீர் பெருக்கெடுத்தாலும் வடிந்துவிடும். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் பிரம்மாண்ட வளர்ச்சிபெற்ற சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்தால், வடிய வழியே இல்லை. ஏனென்றால், இப்படி வளர்ச்சிபெற்ற பகுதிகள் பலவும், ஒரு காலத்தில் மழை நீர் வடியும் பகுதிகளாக இருந்தன. அந்த இடத்தில்தான் இன்று கட்டிடங்கள் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கின்றன. பொதுவாக மழை நீர் தேங்கும் பகுதிகளுக்கு அருகே எப்படியும் குளம், ஏரி போன்ற நீர் ஆதாரப் பகுதிகள் இருக்கும். இவை மழை நீரை உள்வாங்கி தேக்கிவைத்துக்கொள்ளும். எனவே, அந்தக் காலத்தில் எந்தத் தொந்தரவும் ஏற்படவில்லை.

இன்றோ மழை நீர் தேங்கும் பகுதிகள் எல்லாம் கான்கிரீட் காடாக மாறிவிட்டன. விளைவு, பருவமழைக் காலத்தில் ஓரிரு நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்தாலே, ‘சென்னை மிதக்கிறது’ என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ‘எங்கள் வீட்டருகே குளமோ ஏரியோ இல்லை. ஆனால், மழைக் காலத்தில் தண்ணீர் புகுந்துவிடுகிறது’ என்று சிலர் கூறலாம். அருகே குளமோ ஏரியோ இல்லாமலிருக்கலாம். ஆனால், அந்தப் பகுதிகள் நிச்சயம் நீர்வழித்தடமாக இருந்திருக்கும். மழை நீர், பள்ளத்தை நோக்கியோ ஏரி, குளம் போன்ற நீர் ஆதாரத்தை நோக்கியோ பாயும் வழித்தடத்தில் கட்டிடம் இருந்தால்? விளைவு, புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன என்ற செய்தி பருவமழைக் காலத்தில் வாடிக்கையாகிறது.

ஏரிக்குள் மனை

வளர்ச்சியின் பெயரால் ஏரி, குளம் போன்ற நீர் ஆதாரப் பகுதிகள் அழிக்கப்பட்டதால், சென்னைப் புறநகர்ப் பகுதிகளைப் பருவமழைக் காலம் இப்போது பதம் பார்த்துக்கொண்டிருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பு தென் சென்னையில் நன்மங்கலம் பகுதியில் நான் வசித்தபோது, ஏரியையொட்டி மனை இருப்பதாகவும், அரை கிரவுண்டு 4 லட்சம் ரூபாய்தான் என்றும் ஒரு தரகர் என்னை அணுகினார். ‘அப்ரூவல் இருக்கிறதா’ என்று கேட்டபோது, ‘அப்ரூவல் இல்லை. ஆனால், பட்டா இருக்கிறது. அங்கே பல குடும்பங்கள் இருக்கின்றன. எல்லோரும் சொத்து வரியெல்லாம் கட்டி ரசீது வைத்திருக்கிறார்கள்’ என்று தரகர் சொன்னார்.

ஆனால், ‘ஏரி, குளம் என்றால் வேண்டாம்’ என்று மறுத்துவிட்டேன். 2015 டிசம்பரில் வெள்ளம் ஏற்பட்டபோது நன்மங்கலம் ஏரியையொட்டி வீடு கட்டியவர்கள் பாதிப்புக்கு ஆளானார்கள். மற்ற பகுதிகளைப் போலவே, இந்தப் பகுதியிலும் வெள்ளப் பாதிப்பு அதிகமாக இருந்ததற்கு, நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதே காரணம் எனக் கண்டறியப்பட்டது. 2015 டிசம்பர் வெள்ளப் பாதிப்புக்குப் பின், ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது சிறு உதாரணம்தான். சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று விரும்பும் பலரும் ஆசை வார்த்தைகளையும் தவறான வழிகாட்டல்களை நம்பியும் நீர் ஆதாரப் பகுதிகளுக்கு அருகேயோ நீர்வழித்தடப் பகுதிகளில் அமைக்கட்ட மனையையோ, வீடுகளையோ வாங்கிவிடுகிறார்கள். பருவமழைக் காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகும்போதுதான் ‘இங்கே ஏன் வீடு வாங்கினோம்’ என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள். ஆனால், வங்கிகளில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி, வீடு வாங்கியவர்கள் வேறு வழியில்லாமல் மழை, வெள்ளம் தரும் துயரங்களைத் தாண்டி, அதைப் பொருட்படுத்தாமல் அங்கேயே இருக்கிறார்கள்.

ஆனால், ‘லேக் வியூவ்’ என்று கூவிக்கூவி விற்றவர்கள் எல்லாம் வீடு, மனையை விற்றதோடு மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். நீர் ஆதாரப் பகுதிகளில் விற்கப்பட்ட மனைகளுக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள், வீடு கட்ட அனுமதி கொடுத்தவர்கள், மின் இணைப்பு, குடிநீர் இணைப்புக்கு அனுமதி கொடுத்தவர்கள் எல்லாம் பருவமழைக் காலத்தில் அந்தந்தப் பகுதிகளில் வலம் வந்து, ஒலிப்பெருக்கியில் எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்துகிறார்கள் அல்லது நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால், தண்டனை என்னவோ, கடன் வாங்கி வீடு வாங்கியவர்களுக்கு மட்டும்தான். இப்படி வீடு வாங்கியவர்கள், பருவமழைக் காலத்தையும் சாபமாகப் பார்க்கிறார்கள் என்பதை நினைக்கும்போதுதான் துயரமாக இருக்கிறது.

ஆக்கிரமிப்பில் ஏரிகள்!

இன்றைக்குப் பருவமழைக் காலத்தில் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் தென் சென்னை பகுதிகளில் நீர் ஆதாரப் பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கின்றன.

வேளச்சேரி ஏரி, நங்கநல்லுார் ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, உள்ளகரம் ஏரி, புழுதிவாக்கம் ஏரி, திரிசூலம் ஏரி, மீனம்பாக்கம் ஏரி, மூவரசம்பட்டு ஏரி, மடிப்பாக்கம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரி, நன்மங்கலம் ஏரி, அஸ்தினாபுரம் ஏரி, நெமிலிச்சேரி ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, கோவிலம்பாக்கம் தாங்கல், நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை அணை ஏரி, பள்ளிக்கரணை சித்தேரி, ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, மேடவாக்கம் ஏரி, ஜல்லடையான்பேட்டை ஏரி, பெரும்பாக்கம் ஏரி, அரசன்கழனி ஏரி, அரசன்கழனி தாங்கல், சித்தாலப்பாக்கம் ஏரி, சோழிங்கநல்லுார் ஏரி, சித்தேரி, ஒட்டியம்பாக்கம் ஏரி, நாவலுார் ஏரி, அகரம் தென் ஏரி உள்ளிட்ட பல ஏரிப் பகுதிகளும் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டன.

இந்த ஏரிகள் எல்லாம் 1970-களில் 200 ஏக்கர் பரப்பளவில் இருந்திருக்கின்றன. ஆனால், இன்றைக்கு கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகச் சுருங்கிவிட்டன எனச் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

வீடு வாங்க ஏற்ற காலம்

 ஒரு நண்பர் சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வீடு வாங்க உத்தேசித்தபோது, தொடர்ந்து இரண்டு நாட்கள் மழை பெய்தாலே, உடனே வீடு பார்க்கக் கிளம்பிவிடுவார். ‘ஏன் மழை பெய்யும்போது வீடு பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டபோது, ‘மழைக் காலத்தில் வீடு பார்த்தால்தான் எங்கெங்கு தண்ணீர் தேங்குகிறது, எங்கு வீடு வாங்கலாம், வாங்கக் கூடாது என்ற தெளிவு கிடைக்கும்’ என்றார். 2015-ம் ஆண்டு வெள்ளத்துக்குப் பிறகு அவரைச் சந்தித்தபோது, வெள்ளப் பாதிப்பு குறித்துக் கேட்டேன். ‘நான் வீடு வாங்கிய பகுதியில் துளித் தண்ணீர்கூட தேங்கவில்லை’ என்று பெருமையாகச் சொன்னார் நண்பர். சென்னையில் வீடு வாங்குவதற்குப் பொறுமையும் முக்கியம். நெளிவுசுளிவும் முக்கியம். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x