Published : 11 Nov 2017 11:02 AM
Last Updated : 11 Nov 2017 11:02 AM
நாம் எல்லோரும் தற்போது மழை வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான சென்னைப் புறநகர்ப் பகுதிகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த வட கிழக்குப் பருவமழை இன்னொரு 2015-ம் ஆண்டு வெள்ளத்தை சென்னைக்குக் கொண்டுவந்துவிடக் கூடாது என்று நினைக்கிறோம். சென்னையை மட்டுமல்ல மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களையும் இந்த ஆண்டு பெய்த பருவமழை பதம் பார்த்திருக்கிறது. அப்படியானால், இந்திய நகரங்கள் பருவ மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு மாறி வருகின்றனவா? இதற்கு என்ன காரணம்?
சென்னைப் பாதிப்பு
சென்னையில் இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை எடுத்த எடுப்பிலேயே 83 சதவீதம் பொழிந்திருக்கிறது. 200 மில்லி மீட்டர் முதல் 300 மில்லி மீட்டர்வரை சில பகுதிகள் மழையைப் பெற்றிருக்கின்றன. கனமழை வழக்கம்போல சென்னைப் புறநகர்ப் பகுதிகளைப் பாதித்திருக்கிறது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. 2015-ம் ஆண்டைப் போல இல்லாவிட்டாலும், ஓரளவுக்குப் புறநகர்ப் பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நீர்நிலைகளையும் நீர் வரத்துப் பகுதிகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களே குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் வரக் காரணம் என 2015-ம் ஆண்டிலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இப்போதும் அதுவே சொல்லப்படுகிறது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம் மற்றும் நீர்நிலைகள் தூர்வாருதலில் சுணக்கம், மழை நீர் வடிகால் அமைக்காதது போன்றவையும் சென்னை வெள்ளத்துக்குக் காரணங்களே. 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளம் தந்த பாதிப்பிலிருந்து அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
பாதிக்கும் பெருநகரங்கள்
அதேநேரம் சென்னைப் பெரு நகரம் மட்டுமே மழைக் காலத்தில் இப்படிப் பாதிப்பைச் சந்தித்து வருகிறது என்று நினைக்க வேண்டாம். தென் மேற்குப் பருவமழையைப் பெறக்கூடிய மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களும் இந்த ஆண்டு வெள்ளப் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் மும்பை (200 மில்லி மீட்டர்), பெங்களூருவில் (129 மி.மீ.) பருவ மழை கொட்டித் தீர்த்தது. 12 முதல் 24 மணி நேரத்தில் பெய்த இந்தக் கனமழை இரு நகரங்களையும் புரட்டிப்போட்டது. இரு நகரங்களும் வெள்ளத்தில் மிதந்தன. வீடுகள், அலுவலகங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஆனால், ஹைதராபாத்தில் 50 முதல் 60 மில்லி மீட்டர் மழைதான் பெய்தது. இந்த மிதமான மழையையே அந்த நகரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நகரமே ஸ்தம்பித்துப்போனது.
ஆக்கிரமிப்புகள்
சென்னையில் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புபோல ஹைதராபாத்திலும் ஏரிப் படுகைகள், கழிவு நீர்ப் பாதைகள் ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. சென்னையைப் போலவே ஹைதராபாத்திலும் மழைநீர் வடிகால்கள் அமைப்பதில் சுணக்கம் உள்ளது. வெள்ளப் பாதிப்புக்கு மேலோட்டமாக ஆக்கிரமிப்புகளைக் கைகாட்டினாலும் பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட திட்டமிடப்படாத நகரமைப்பும் முக்கியக் காரணம் என நகரமைப்பு மேலாண்மை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். திட்டமிடப்பட்ட வடிகால்கள், கழிவு மேலாண்மை என முறையான திட்டங்கள் எவையும் இல்லாமலேயே இந்திய நகரங்கள் வளர்ச்சி பெற்றிருக்கின்றன.
வடிகால்கள் எங்கே?
பருவமழைக் காலத்தில் மட்டுமே பாதிப்புகளுக்கு ஏற்ப பணிகளைச் செய்வதில் இந்த நகரங்களின் உள்ளாட்சி அமைப்புகளும் ஆர்வம் காட்டுகின்றன. அதன் பிறகு அந்தப் பணிகளில் ஆர்வம் காட்டப்படுவதில்லை. இதற்கு வேலை ஆட்கள் பற்றாக்குறை, நிதியின்மை, அரசியல் தலையீடு போன்றவையும் காரணங்கள். பெரும்பாலான இந்திய நகரங்களில் மழைநீர் வடிகால்களில் கழிவு நீரும் சேர்ந்தே வருகிறது. தனித்தனியாக இருக்க வேண்டிய இந்த வடிகால்கள் பல நகரங்களில் ஒரே வடிகாலாகத்தான் காட்சியளிக்கின்றன. தனித்தனி வடிகாலாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் நகர, உள்ளாட்சி அமைப்புகள் ஆர்வம் காட்டுவதும் இல்லை. அப்படி இருக்கும் வடிகால்களைச் சரியாகப் பராமரிப்பதும் இல்லை.
குப்பைகளும் சாலைகளும்
இதுபோன்ற தீர்வு காணப்படாத பிரச்சினைகளால் வெள்ளத் தடுப்பு மற்றும் உடனடியாக வெள்ள நீரை வெளியேற்றுவதில் உள்ள சிக்கல்கள் நகரங்களுக்குச் சவாலாகவே மாறி வருகிறது. மழை நீரை வெளியேற்றுவதில் உள்ள இன்னொரு பிரச்சினை குப்பை. மழை நீரில் பிளாஸ்டிக் பொருட்கள் கலந்து வருவதால், அவை நீர் வெளியேறும் பகுதிகளை அடைத்துக்கொண்டு விடுகின்றன. விளைவு, மழை நீரை வெளியேற்றுவதில் பெரு நகரங்களில் பெரும் பிரச்சினை ஏற்படுகிறது.
இன்று பெரு நகரங்களில் மண் தரைகளைப் பார்க்க முடிவதில்லை. சாலைகள் அனைத்தும் காங்கிரீட், தார் மற்றும் கற்களால் அமைக்கப்பட்ட சாலைகளாகவே உள்ளன. மழை பெய்தாலும் அந்த நீரை நிலம் உள்வாங்கிக்கொள்ள இவை தடையாக இருக்கின்றன. இதுவும் வெள்ளம் ஏற்பட ஒரு காரணி என்பதுடன் நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதையும் இது தடுத்துவிடுகிறது.
வருங்காலத்தில் இந்திய நகரங்கள் மழை, வெள்ளத்திலிருந்து தப்பிக்க மனிதத் தவறுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வடிகால்கள் அமைத்தல், அவற்றைப் பராமரித்தல் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தவும் வேண்டும். பெரு நகரங்கள் பசுமை நகரங்களாக மாறுவதற்கான முன்முயற்சிகளையும் தொடங்க வேண்டும். குறைந்தபட்சம் மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தாலே உள்ளாட்சி அமைப்புகளுக்குக் குறைந்தபட்ச உதவியாக இருக்கும்.
முன்னெச்சரிக்கை தேவை
பருவநிலை மாற்றம் காரணமாக மழைப் பொழிவும் இப்போது உலகெங்கும் மாறி வருகிறது. எப்போது மழை அதிகமாகப் பெய்யும் அல்லது பெய்யாமலேயே போகும் என்று தெரிவதில்லை. இதுபோன்ற நேரத்தில் வானிலை மையங்களின் பங்களிப்பும் அவசியமாகிறது. அமெரிக்காவில் துல்லியமாகப் புயல்களையும் மழைப் பொழிவையும் கணித்து அரசை உஷார்படுத்துகிறார்கள். அதற்கேற்ப அரசும் இயற்கைப் பேரிடர் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து, திட்டமிட்ட முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுகிறது. மக்களுக்கும் அதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதனால்தான், அமெரிக்க நகரங்கள் பெரிய புயல்களால் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக மீண்டுவிடுகின்றன.
பலே கொச்சி!
பெரு நகரங்களுக்கு மழை தலைவலியாக மாறினாலும், கேரளாவில் உள்ள கொச்சி நகரம் அதை எளிதில் சமாளிக்கிறது. ஆண்டுக்குச் சராசரியாக 300 மி.மீ. மழையைக் கொச்சி நகரம் பெற்றாலும், பாதிப்புக்குள்ளாவதில்லை. திட்டமிடப்பட்டு கொச்சி நகரம் உருவாக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள். கட்டுமானப் பகுதிகளில் மழை நீர் தனியாகச் சென்று நிலத்தில் சேரும்படி கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. வீடுகளில் சேரும் மழை நீரும் இந்த முறையில் வெளியேற்றப்படுகிறது. இதை மீறினால் அங்கு நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. இப்போது உங்களுக்குத் தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் நினைவுக்கு வந்தால், உங்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு எந்தக் கதியில் இருக்கிறது என்று பாருங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT