Published : 07 Oct 2017 10:47 AM
Last Updated : 07 Oct 2017 10:47 AM
ஓ
ர் அறையை வடிவமைக்கும்போது எந்த அம்சங்களையெல்லாம் முதலில் தேர்ந்தெடுக்கிறோம், அதை எப்படித் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில்தான் வடிவமைப்பின் வெற்றி அடங்கியிருக்கிறது. பொதுவாக, பெரும்பாலானோர் வீட்டை வடிவமைக்கும்போது சில தவறுகளைச் செய்வார்கள். அந்தத் தவறுகளைத் கண்டுபிடித்துத் தவிர்த்துவிட்டால், வீட்டை வடிவமைத்த பிறகு மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவையிருக்காது. வீட்டு வடிவமைப்பில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்...
நிறமும் பொருட்களும்
வீட்டு வடிவமைப்பில் பெரும்பாலானோர் முதலில் சுவர் வண்ணத்தையே தீர்மானிப்பார்கள். ஓர் அறையின் தோற்றத்தை முடிவுசெய்வதில் சுவர் நிறத்துக்கு முக்கியப் பங்கிருக்கிறது என்பது உண்மைதான். இதற்காகச் சுவர் நிறத்தைத்தான் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்குப் பதிலாக, வீட்டின் அறைக்கலன்கள், அலங்காரப் பொருட்கள் (தரைவிரிப்புகள், குஷன்கள், திரைச்சீலைகள், அறைக்கலன்களுக்கான துணிவிரிப்புகள்) போன்றவற்றை முதலில் தேர்ந்தெடுத்துவிட்டால் சுவர் நிறங்களைத் தேர்ந்தெடுப்பது சுலபமாகிவிடும். இப்படிச் செய்வதால், சுவரின் நிறத்தை முதலில் தேர்ந்தெடுத்துவிட்டு, அதே நிறத்தில்தான் அலங்காரப் பொருட்களையும் அறைக்கலன்களையும் தேர்தெடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தைத் தவிர்க்க முடியும்.
அளவை எப்படித் தீர்மானிப்பது?
ஓர் அறைக்கலனைக் கடையில் பார்க்கும்போது அதன் அளவைச் சரியாகக் கணிப்பது என்பதென்பது அவ்வளவு சுலபமானதல்ல. இந்தக் காரணத்தால்தான், கடையில் பார்க்கும்போது சரியான அளவில் தெரியும் பொருட்கள், வீட்டுக்கு வந்தவுடன் பொருந்தாமல் போகின்றன. அறையின் எல்லா இடத்தையும் அறைக்கலனே நிரப்பிவிட்டது என்று வருத்தப்படாமல் இருக்க வேண்டுமென்றால், அறைக்கு ஏற்ற அளவில் அளவெடுத்து வாங்குவதுதான் சரியான வழியாக இருக்கும். இதற்காக, அளவு ‘டேப்’புடன் கடைக்குச் செல்ல வேண்டுமா என்று கேட்கிறீர்களா? தவறில்லை என்றுதான் இன்று பல உள்அலங்கார வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படி அறைக்குப் பொருந்தும்படியான அறைக்கலனை அளவெடுத்து வாங்குவதால் அறையில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
பல கடைகளில் வாங்கலாம்!
வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள், அறைக்கலன்கள் போன்ற எல்லாப் பொருட்களையும் ஒரே கடையில் வாங்குவதைப் பலரும் விரும்புகிறார்கள். ஆனால், இப்படி ஒரே கடையில் எல்லாப் பொருட்களையும் வாங்குவதால் புதுமையான சுவாரசியமான வகைகள் தவறிவிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால், அறைக்கலனையும் அலங்காரப் பொருட்களையும் தேர்ந்தெடுப்பதற்குமுன், இரண்டு மூன்று கடைகளுக்காவது சென்று புதிய மாதிரிகளைப் பாருங்கள்.
அதுதவிர, இப்போது நவீன, சமகால வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் அறைக்கலன்கள் ‘ஆன்லைன் ஸ்டோர்’களிலும் கிடைக்கின்றன. இப்படி ‘ஆன்லைன் ஸ்டோர்’களில் வாங்குவதாக இருந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் விலை, தர விமர்சனம் போன்ற அம்சங்களை ஒப்பீடு செய்து பார்த்துவிட்டு வாங்கலாம். ‘ஆன்லைன் ஸ்டோர்களில்’ விலையைத் தெரிந்துகொண்டு, கடைக்குச் சென்று வாங்குவதும் கூடுதல் உதவியாக இருக்கும்.
கலவையான வடிவமைப்பு!
அறைக்கலனை வாங்கும்போது மொத்தமாக ஒரே ‘செட்’டாக வாங்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, ஒரு சோஃபாவை வாங்கினால், அதை அதனுடைய மற்ற நாற்காலிகளுடன் சேர்த்து வாங்க வேண்டிய அவசியமில்லை. சோஃபாவைத் தனியாக வாங்கிவிட்டு, நாற்காலிகளைத் தனியாக வாங்கலாம். வீட்டில் இருக்கும் எல்லா அறைக்கலன்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருப்பது ஒருவிதமான அயர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கலாம். இன்று, வீட்டின் அறைக்கலன்களைத் தேர்ந்தெடுக்கும்போது இப்படி ‘மிக்ஸ் அண்ட் மேட்ச்’(Mix and Match) வடிவமைப்பு செய்வதுதான் பிரபலமாக இருக்கிறது. இந்த வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கும்போது மற்ற அறைக்கலன்களுடன் ஏதாவது ஓர் இணைப்பு அம்சம் மட்டும் இருக்கும்படி தேர்ந்தெடுத்தால் போதுமானது. அது நிறம், வடிவமைப்பு, அளவு என எந்த அம்சமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
புதுமையைப் போற்றுவோம்!
வீட்டின் வடிவமைப்பில் ஒரேயடியாகப் புதுமையான அம்சங்களைத் தேர்வுசெய்வதற்குச் சிலர் தயக்கம் காட்டலாம். ஆனால், இப்படிப் புதுமையான, துணிச்சலான அலங்கார உத்திகளைத் தேர்ந்தெடுக்கும்போது வீட்டின் தோற்றத்தை அது உயிர்ப்புடன் மாற்றிவிடுவதாகச் சொல்கிறார்கள் உள் அலங்கார வடிவமைப்பாளர்கள். உதாரணத்துக்கு, கண்ணைக் கவரும் நிறங்களான சுவர் அலங்காரத்தைத் தேர்ந்தெடுக்கும்போது அதை மட்டுப்படுத்த நினைத்தால் வீட்டின் அறைக்கலன்களை மென் நிறங்களில் வடிவமைக்கலாம். இது வீட்டின் தோற்றத்தைச் சமநிலையில் வைக்க உதவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT