Published : 07 Oct 2017 10:45 AM
Last Updated : 07 Oct 2017 10:45 AM
யா
ராவது தீவிர சிந்தனையில் ஆழ்ந்தால் ‘என்ன ஏதாவது கோட்டை கட்டுகிறாயா?’ என்று கேட்பதுண்டு. கோட்டை கட்டுவது அதிக உழைப்பைக் கோரும் ஒரு செயல் என்பதாலாயே அப்படிக் கேட்கிறோம். மனக்கோட்டையை எளிதில் கட்டிவிடலாம் ஆனால், நிஜக் கோட்டைகளை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல.
கோட்டைகளுக்குப் பெயர் பெற்ற நாடு இந்தியா. இங்குதான் எத்தனை பேரரசர்கள், சிற்றரசர்கள் ஆண்டிருக்கிறார்கள்? இவர்களின் கோட்டைகளுள் சில கால மாற்றத்தால் அழிக்கப்பட்டுவிட்டன. தலைநகர் டெல்லியில் இருக்கும் ஆக்ரா கோட்டையிலிருந்து இந்தியாவின் தென்கோடி முனையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த வட்டக்கோட்டை போன்ற சில கோட்டைகள் இன்னும் அழியாமல் இருக்கின்றன.
இந்த மாதிரியான கோட்டைகள் உருவாக்குவதற்கான முயற்சிகள், தந்திரத் திட்டங்கள், தேவைப்படும் நிதி எல்லாமே பிரம்மாண்டமானவை, மலைப்பூட்டுபவை. வேல்ஸ் பகுதியில் தனக்கான கோட்டையை எழுப்பும்போது அதற்கான கட்டுமானச் செலவு ஒரு லட்சம் டாலருக்கும் அதிகமாகிவிட, மன்னர் முதலாம் எட்வர்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். காரணம் அரசாங்க கஜானாவே கிட்டத்தட்ட திவாலாகிவிட்டது. சும்மாவா? 3,000 கட்டிட ஊழியர்களுக்கு வேண்டிய பொருட்களும் ஊதியமும் கொடுக்க வேண்டி இருக்குமே.
பொதுவாக அந்தந்தப் பகுதியிலுள்ள கற்கள், களிமண், மரங்கள் ஆகியவற்றைத்தான் கட்டுமானப் பொருட்களாகத் தேர்ந்தெடுப்பார்கள். அப்போதெல்லாம் கற்சுவர்கள்தான். இதற்காகப் பாறைகளைத் தேர்ந்தெடுக்கும்போது அவற்றில் எங்கெங்கெல்லாம் கோடுகள் (சின்னச் சின்ன பிளவுகள்) தெரிகின்றன என்பதைக் கவனிப்பார்கள். காரணம் அந்தப் பகுதியில் பாறைகளை உடைப்பது எளிதாக இருக்கும். கல் கிடைக்கும் இடங்களிலிருந்து கோட்டை கட்டும் இடத்துக்குக் கற்களை எடுத்துவர குதிரை வண்டிகள் பயன்பட்டன. பாறைகளை நகர்த்த எக்கக்கச்சமானவர்கள் தேவைப்பட்டனர். பழங்காலக் கோட்டைகளைப் பார்க்கும்போது அவை கண்ணுக்கு விருந்தாகக் காட்சிதரும். ஆனால், அவற்றிலுள்ள ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னாலும் அழுத்தமான ஒரு காரணம் உண்டு.
முக்கிய நுழைவு வாயில் அகலமாக இருந்தாலும் அது திடீரென்று குறுகும். படிகள் வெவ்வேறு அளவு கொண்டவையாக இருக்கும். இரண்டு படிகள், சட்டென்று கொஞ்சம் சமதளம், மூன்று படிகள் அதற்கு மேல் கொஞ்சம் சமதளம் என்பது போல இருக்கும். அதாவது வேகமாகப் படிகளில் ஏறும் எதிரிப் படையினர் எதிர்பாராத படிகளின் அமைப்பால் சட்டென்று நிலை தடுமாறி விழுந்துவிடுவார்கள். இதனால் கலவரச் சூழல் உண்டாகி எதிரிப் படைகள் உள்ளுக்குள் வருவது தடைபட்டு கோட்டை வீரர்கள் சுதாரித்துக் கொள்ள நேரம் கிடைக்கும்.
உதய்பூர் அரண்மனைக் கோட்டையில் இன்னொரு தந்திரத்தையும் பார்க்க நேர்ந்தது. மேல்தளத்துக்கு வருவதற்கு முன்னால் ஒரு சிறிய குகை போன்ற அமைப்பு இருக்கும். அப்படி வரும்போது தலையைக் கொஞ்சம் குனிந்து கொண்டுதான் வர வேண்டும். அது எதிரியாக இருந்தால் மேல் தளத்தில் காத்திருக்கும் கோட்டை வீரர்கள் அந்தத் தலையைக் கொய்து விடுவார்கள்.
அதேபோல் சுழல் படிகள் அமைக்கப்பட்டிருக்கும் விதமும் வித்தியாசமாக இருக்கும். இவை கடிகாரச் சுற்றுக்கு எதிர்த் திசையில் அமைந்திருக்கும். எந்தப் படையிலும் பெரும்பாலான வீரர்கள் வலது கைப்பழக்கம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். இதுபோன்ற சுழல் படிகளில் மேலிருந்து கோட்டை வீரர்களால் மேலேறி வரும் எதிரிகள் மீது எளிதில் வாள் வீச்சை நடத்த முடியும். ஆனால், இந்தப் படிகளில் முன்னேறிவரும் எதிரி வீரர்களால் எளிதில் தங்கள் வாள்களைப் பயன் தரும் வகையில் இயக்க முடியாது. காரணம் சுழல் படிக்கட்டின் சுவர் அதைத் தொடர்ந்து தடுத்துக்கொண்டிருக்கும்.
கோட்டையைச் சுற்றி அகழி, வெளிப்புறத்திலிருந்து கோட்டைக்கு இணைக்க ஒரே ஒரு அகலமான, உறுதியான பலகை, அந்தப் பலகையை உட்புறமாகச் சாத்த முடியும் போன்ற எல்லாமே கோட்டைக் கட்டுமானத் தந்திரங்கள்தான். கோட்டையின் மேற்புறத்திலிருந்து எதிரிகளின் மீது அம்பு மழை பொழியும் வசதி இருக்க வேண்டும். அதே சமயம் எதிரிகளின் அம்புகள் நேரடியாக அவர்கள்மீது பாய்ந்துவிடக் கூடாது. இதற்கேற்ப மறைப்பு வசதிகளும் இருக்க வேண்டும்.
எதிரிகளின் தாக்குதலைத் தாங்கக்கூடிய அளவுக்குக் கட்டுமானம் சிறப்பானதாக இருக்க வேண்டும். தவிர ரகசியக் கட்டுமானங்களும் இதில் இருக்கும். கோட்டையிலிருந்து வெளியேறுவதற்கான சுரங்கப்பாதை என்பது வேறு என்னவாம்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT