Last Updated : 06 Oct, 2017 05:16 PM

 

Published : 06 Oct 2017 05:16 PM
Last Updated : 06 Oct 2017 05:16 PM

இணையமயமாகும் கட்டுமான அனுமதி

கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை சந்தித்த தேக்க நிலைக்கான காரணங்களுள் ஒன்று, கட்டுமானத் திட்டத்துக்கான அனுமதி. சிமெண்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது, மணல் விநியோகத்தை முறைப்படுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு இடையில் ஒற்றைச் சாளர அடிப்படையில் இந்தத் திட்ட அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் கட்டுநர்கள் முவைத்துவந்தனர். இந்தக் கோரிக்கை விரைவில் நிறைவேற உள்ளது. மட்டுமல்லாது இந்த ஒற்றைச் சாளர முறை இணையமயமாக்கப்படவும் உள்ளது.

கட்டுமானத் துறை வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் வாடிக்கையாளருக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையிலும் மத்திய அரசு புதிய திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. அதைத் தொடர்ந்து கட்டுமான அனுமதிக்கான கால அவகாசத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டது. பொதுவாகக் கட்டுமான அனுமதியைப் பொறுத்தவரை கட்டுநர்கள் புதிய திட்டங்களுக்காக மாதக்கணக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. அதுமட்டுமல்லாமல் அரசின் பல துறைகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ்கள் வாங்க வேண்டும்.

உதாரணமாக நீங்கள் வாங்கிய நிலம் ரயில் நிலையத்துக்கு அருகிலோ தண்டவாளத்துக்கு அருகிலோ இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதாவது அதிலிருந்து 30 மீட்டருக்குள் இருந்தால் ரயில்வே துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும். ஏரியிலிருந்து 15 மீட்டருக்குள் இருந்தால் மாநிலப் பொதுப்பணித் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும்.விமான நிலையத்திலிருந்து 500 மீட்டருக்குள் இருந்தால் விமான ஆணையத்திடமிருந்து தலையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும். இதுபோல் பல தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியதிருக்கும்.

குளமோ ஏரியோ 15 மீட்டர் தூரத்தில் இருந்தால் பொதுப்பணித் துறை அல்லது தொடர்புடைய துறைகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். குப்பைக் கிடங்கு அருகில் இருந்தால் உள்ளாட்சித் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது அவசியம். இடுகாடு / சுடுகாடு 90 மீட்டருக்கு அருகில் இருந்தால் சுகாதாரத் துறை அதிகாரியிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். கல்குவாரிக்கு 300 மீட்டர் தூரத்தில் இருந்தால் சுரங்கத் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்குவது கட்டாயம். இவை அல்லாமல் வனத் துறை, வேளாண்மைத் துறை போன்ற துறைகளிடம்கூடத் தடையில்லாச் சான்றிதழ்கள் வாங்க வேண்டி இருக்கும்.

இந்தத் தடையில்லாச் சான்றிதழ் வாங்க ஒவ்வொரு துறை அலுவலமாக ஏறி, இறங்கினால் எப்படி இருக்கும்? கண்டிப்பாகக் கட்டுமான அனுமதிக்கே பல காலம் பிடிக்கும். இவற்றையெல்லாம் ஒரே விண்ணப்பத்தில் பெற முடிந்தால் எவ்வளவு எளிமையாக இருக்கும். ஏற்கெனவே ஆந்திரப் பிரதேசம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்கெனவே கட்டுமான அனுமதி இணையமயமாக்கப்பட்டுவிட்டது. அதுமட்டுமல்லாமல் இணையத்திலேயே குறிப்பிட்ட கட்டுமானத் திட்டத்துக்கு எந்தெந்தத் துறைகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் தேவை எனக் குறிப்பிட்டுத் தரவேற்றம் செய்தால் போதும். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் கட்டுமானத் துறையில் முதலீடு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x