Published : 14 Oct 2017 10:43 AM
Last Updated : 14 Oct 2017 10:43 AM
ச
துர மேசை, வட்ட மேசை, செவ்வக மேசை என எந்த வடிவ சாப்பாட்டு மேசையை வாங்குவது என்பது பலருக்கும் ஏற்படும் குழப்பம். அவற்றை எந்த அளவில் வாங்க வேண்டுமென்ற சந்தேகமும் எழும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் சாப்பாட்டு மேசையில் உங்கள் குடும்பத்துக்குத் தேவைப்படும் எண்ணிக்கையில் நாற்காலிகள் இருக்க வேண்டும். சாப்பாட்டு மேசையை அமைத்த பிறகும், அறையில் நடப்பதற்குப் போதுமான இடம் இருக்க வேண்டும். சாப்பாட்டு மேசையின் அகலம் குறைந்தது 90 சென்டிமீட்டராவது இருக்க வேண்டும். அப்போதுதான் உணவு பரிமாறுவதற்குத் தேவைப்படும் பொருட்களை அதில் வைக்க முடியும். மேசையின் நீளம் அதிகமாகும்போது, மேசையின் மேற்பகுதியின் அகலமும் அதிகமாகிறது. எந்த வடிவத்தில், எந்த அளவில் உங்கள் வீட்டுக்கு சாப்பாட்டு மேசையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அதற்கான சில வழிமுறைகள்...
சிறிய அறைக்கு வட்ட மேசை
வட்ட வடிவ சாப்பாட்டு மேசை சிறிய அறைகளுக்குப் பொருத்தமானதாக இருக்கும். அத்துடன், இதில் நிறையப் பேரும் அமர்ந்து சாப்பிட முடியும். பீடத்துடன் இருக்கும் வட்ட மேசை (Pedestal Round Table) இன்னும் வசதியானதாக இருக்கும். பீடத்துடன் 90 சென்டிமீட்டர் அளவில் அமைந்திருக்கும் வட்ட மேசையில் நான்கு பேர் அமர்ந்து சாப்பிட முடியும். அதே மாதிரி, கால்களுடன் 120 சென்டிமீட்டர் அளவில் அமைந்திருக்கும் வட்ட மேசையில் நான்கு பேர் அமர முடியும். பீடத்துடன் 150 சென்டிமீட்டர் அளவில் அமைந்திருக்கும் வட்ட மேசையில் ஆறு பேர் அமர்ந்து சாப்பிட முடியும். ஆனால், பெரிய அளவிலான வட்ட மேசைகளை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், அவற்றில் உணவை எடுத்துப் போட்டு சாப்பிடுவது கடினமாக இருக்கும். பெரிய அளவு சாப்பாட்டு மேசை தேவைப்படுபவர்கள் செவ்வக வடிவ சாப்பாட்டு மேசையைத் தேர்ந்தெடுக்கலாம்.
நீங்கள் சாப்பாட்டு மேசையை அமைக்கும் அறை, நீளமானதாக இருந்தால் செவ்வக வடிவ மேசைகளைத் தேர்ந்தெடுப்பது பொருத்தமானதாக இருக்கும். இதில் 150-180 சென்டிமீட்டர் அளவில் இருக்கும் மேசையில் 6 பேர் அமர்ந்து சாப்பிட முடியும். 300-335 சென்டிமீட்டர் அளவில் இருக்கும் செவ்வக மேசையில் 12 பேர் சாப்பிட முடியும். இந்த மேசை அறையில் குறைவான இடத்தை எடுத்துகொள்ள வேண்டுமென்று நினைத்தால், நாற்காலிகளுக்குப் பதில் பெஞ்சுகளைப் பயன்படுத்தலாம். சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்த பெஞ்சுகளை மேசைக்கு அடியில் வைத்துவிடலாம்.
சதுரமான அறைக்கு சதுர மேசை
உங்களுடைய அறை, சதுரமான கட்டமைப்பில் இருந்தால், சதுர வடிவ சாப்பாட்டு மேசையைத் தேர்ந்தெடுப்பது பொருத்தமானதாக இருக்கும். இந்த சாப்பாட்டு மேசை, அமர்ந்து சாப்பிடுபவர்கள் அனைவருக்கும் சமமான இடத்தை வழங்கும். வட்ட மேசையைப் போலவே சதுர மேசையையும் பெரிதாக இருந்தால் உணவை எடுப்பதற்குக் கடினமாக இருக்கும்.
சுவர்-மேசை இடைவெளி
சாப்பாட்டு மேசையைப் போடவிருக்கும் அறையின் அளவை அளந்துகொள்ளுங்கள். சாப்பாட்டு மேசையின் அமரும் நபர்கள் சுலபமாக அமர்ந்து எழுந்துகொள்வதற்கு, சுவருக்கும் மேசைக்கும் 100 முதல் 200 சென்டிமீட்டர் வரை இடைவெளி விடலாம்.
உங்கள் மேசையின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதைப் பார்த்துத் தெரிந்துகொள்வதற்கு, இரண்டு போர்வைகளை எடுத்துக்கொள்ளுங்கள். சாப்பாட்டு மேசையை எங்கு அமைக்கவிருக்கிறீர்களோ, அங்கே இந்தப் போர்வையை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மேசையின் அளவுக்கு மடித்து தரையில் வைத்துப்பாருங்கள். இது உங்கள் அறையில் சாப்பாட்டு மேசை எவ்வளவு இடத்தை எடுத்துகொள்ளும் என்பதை எளிமையாகத் தெரிந்துகொள்ள உதவும். இதை வைத்து உங்கள் அறையில் இருக்கும் அறைக்கலன்களுக்குச் சாப்பாட்டு மேசை இடையூறாக இருக்குமா என்பதைக் கணிக்க முடியும்.
எவ்வளவு இடைவெளி?
மேசையில் அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இடையில் குறைந்தது 60 சென்டிமீட்டர்களாவது இடைவெளி இருக்க வேண்டும். அப்போதுதான், ஒருவரின் முழங்கை மற்றவர்களை இடிக்காதபடி இருக்கும். எப்போதாவது விருந்தினர்கள் வரும்போது கூடுதல் நாற்காலிகள் போட்டு அமர்ந்துகொள்ளலாம். ஆனால், எப்போதுமே அதைக் கடைப்பிடித்தால் சாப்பாட்டு மேசையில் நிம்மதியாகச் சாப்பிட முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT