Last Updated : 07 Oct, 2017 10:45 AM

 

Published : 07 Oct 2017 10:45 AM
Last Updated : 07 Oct 2017 10:45 AM

புறநகரில் முதலீடு செய்யலாமா?

செ

ன்னை நகரம் என்பது இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்வரை நீண்டுவிட்டது. இதனால் சென்னை ரியல் எஸ்டேட்டின் முகமும் மாறிவிட்டது. சென்னையின் தெற்கே செங்கல்பட்டுவரையும் வடக்கே புழல் சிறை அமைந்துள்ள செங்குன்றம்வரையிலான பகுதியும் சென்னை ரியல் எஸ்டேட் பகுதிகளாகவே பார்க்கப்படுகின்றன. வட சென்னையைத் தாண்டிய செங்குன்றம் ரியல் எஸ்டேட் முதலீடுக்கு ஏற்ற பகுதியா?

புழல் ஏரிக்கரையில் அமைந்துள்ள இந்தப் பகுதி, சென்னை நகரில் குடிநீருக்குப் பாதிப்பு வராத சில பகுதிகளில் ஒன்று. இங்கே அடுக்குமாடிக் குடியிருப்புகள் தொடர்ந்து முளைத்துவருகின்றன. இதனால் செங்குன்றம் பகுதியின் மீது ரியல் எஸ்டேட் பில்டர்கள், புரோமோட்டர்களின் பார்வை பதிந்துள்ளது. இதன் காரணமாகப் பல முன்னணிக் கட்டுமான நிறுவனங்களும் செங்குன்றம் பகுதியில் கடை விரிக்கத் தொடங்கியிருக்கின்றன. சென்னையின் பிற இடங்களைவிடச் செங்குன்றத்தில் நிலத்தின் மதிப்பு குறிப்பிட்ட அளவு குறைவு என்பது இதற்குக் காரணம்.

இதுகுறித்து இந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள மூர்த்தி என்பவர் கூறும்போது, “1,000 முதல் 1,500 சதுர அடி பரப்பளவு உள்ள மனைகள் குறைந்த விலைக்கு இங்கே கிடைக்கின்றன. இதனால் நடுத்தரக் குடும்பத்தினர் இங்கே மனை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளும் சதுர அடி 3 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கின்றன. இதனால் ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ள இரண்டு படுக்கையறைக் கொண்ட வீடு, குறைந்த விலைக்கே கிடைக்கிறது. இதனால் செங்குன்றம் பகுதி முதலீட்டுக்கு ஏற்ற இடமாகக் கருதப்படுகிறது” என்கிறார் மூர்த்தி.

சென்னையின் முக்கியப் பகுதியான பிராட்வே, அண்ணா சாலை, அடையார் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் செங்குன்றம் பகுதியை அடைந்துவிட முடியும் என்பது கூடுதல் சிறப்பு. நெரிசல் இருந்தாலும் செங்குன்றம் பகுதிக்குச் சாலை வழிப் போக்குவரத்து குறிப்பிடும்படி உள்ளது. நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது செங்குன்றம் பகுதியின் சாதக அம்சங்களில் ஒன்று. ரெட்டேரியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இந்தப் பகுதி உள்ளதால், குண்டூர் - சென்னை நெடுஞ்சாலையில் இருந்தும் எளிதாக வந்து செல்ல முடியும். அண்ணாநகர், அம்பத்தூர், பெரம்பூர் போன்ற பகுதிகள் செங்குன்றம் பகுதிக்கு அருகே இருப்பதால், ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் புதிய வீட்டுத் திட்டங்களை இங்கே அறிமுகம் செய்த வண்ணம் உள்ளனர்.

ஒரேயொரு குறை என்னவென்றால், பெரும்பாலும் புறநகர்ப் பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் மனையை விற்கும் போக்குக்கு இந்தப் பகுதியும் தப்பவில்லை. இந்தப் பகுதிக்கு அருகே ஆந்திர எல்லை இருப்பதால் காலி மனைகள் அல்லது வீடுகளை வாங்கும்போது வில்லங்கம் இருக்கிறதா என்று ஒருமுறைக்குப் பலமுறை சோதித்துக்கொள்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x