Published : 21 Oct 2017 10:18 AM
Last Updated : 21 Oct 2017 10:18 AM
செ
ன்னையின் மையப் பகுதியில் வீடு என்பது நடுத்தரவர்க்கத்தினரை பொறுத்தவரை நடக்காத காரியம். அதனால் அந்தப் பகுதியில் வேலை பார்ப்பவர்கள், வாடகை வீடுகளைத்தான் நம்பியிருக்கிறார்கள். மத்திய சென்னைப் பகுதியில் வீட்டு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. 90களில் சூளைமேடு, கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம் போன்ற பகுதிகளில் 10 லட்சமாக இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளின் விலை இன்று ரூ. 50, 60 லட்சங்களைத் தொட்டுவிட்டது. இந்தப் பகுதியில் வெளியூரிலிருந்து வந்து குடியேறியவர்கள் அதிகமாக வாழ்கின்றனர்.
இந்தப் பகுதி மட்டுமல்லாது அசோக்நகர், கே.கே.நகர், வடபழநி போன்ற பகுதிகளிலும் வீட்டு விலை ஏறுமுகமாகத்தான் இருக்கிறது. அதனால் இந்தப் பகுதிகளிலும் வீடு வாங்குவது என்பது சவாலான காரியமாகி வருகிறது. இந்த நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில கட்டுமான நிறுவனங்கள் புறநகர்ப் பகுதிகளில் குடியிருப்புகளை உருவாக்கத் தொடங்கின. குறிப்பாக ஐடி ஹைவே என அழைக்கப்படும் ராஜீவ் காந்தி சாலைப் பகுதியில் அதிகமான வீடுகள் கட்டப்பட்டன.
அந்தப் பகுதியில் 90களுக்குப் பிறகு உருவான ஐடி நிறுவனத்தைச் சார்ந்த பணியாளர்களின் வீட்டுத் தேவையை இலக்காகக் கொண்டு புதிய குடியிருப்புத் திட்டங்கள் அங்கு தொடங்கப்பட்டன.பெருங்குடியில் தொடங்கி நாவலூர் வரை இந்தக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. மட்டுமல்லாமல் வேளச்சேரி அடுத்துள்ள மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பள்ளிக்கரணை, சுண்ணாம்புக்கொளத்தூர் ஆகிய பகுதிகளிலும் கடந்த பத்தாண்டுகளில் மிக அதிகமாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் ஐடி துறையினர் மட்டுமல்லாது சென்னையின் மையப் பகுதியில் பணியாற்றும் பலரும் இங்கே வீடு வாங்கியுள்ளனர்.
₹20 லட்சத்திலிருந்து 25 லட்சத்துக்குள் இந்தப் பகுதியில் ஒரு படுக்கையறை வீடுகள் கிடைக்கின்றன. வேளச்சேரி, ஆதம்பாக்கம் பகுதிகளில் வீடுகள் பெருகிவிட்டதால் புழுதிவாக்கம், மடிப்பாக்கம், ரேடியல் ரிங் ரோடு ஆகிய பகுதிகளில் புதிய வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் உருவாகிவருகின்றன.
அதுபோல தாம்பரம் பகுதிகளிலும் புதிய திட்டங்கள் பல தொடங்கப்பட்டு வருகின்றன. படப்பை பகுதிகளில் ரூ.15 லட்சம் முதல் ஒரு படுக்கையறை வீடுகள் கிடைக்கின்றன. தாம்பரத்துக்கு அடுத்து வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரியும் தாண்டி நீள்கின்றன புதிய குடியிருப்புத் திட்டங்கள்.
தென் சென்னைக்கு அடுத்தப்படியாக மேற்குச் சென்னைப் பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றுவருகிறது. அந்தப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மையமாகக் கொண்டே அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவருகின்றன. பெரும்பாலும் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப, கடைநிலை ஊழியர்கள் போன்ற குறைந்த வருமான உடையவர்களை இலக்காகக் கொண்டே வளர்ந்து வருகிறது.
இது தவிர சென்னையின் மத்தியப் பகுதியில் பணியாற்றும் மற்ற நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இந்தப் பகுதியில் குடியிருப்புகள் இருப்பதால் அவர்களும் வீடு வாங்குவது பெருகிவருகிறது. 10 லட்சத்தில் இருந்து 50 லட்சம் வரை இந்தப் பகுதியில் வீடுகள் விற்பனைக்கு உள்ளன.
புறநகர்ப் பகுதிகளில் உருவாகியுள்ள புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் சென்னைக்குள் வீடு வாங்க முடியாத நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. வாங்கத் தகுந்த விலை, நெருக்கடியில்லாத தன்மை, ஆசுவாசமான வாழ்க்கை இந்தக் காரணங்களுக்காக இந்தப் பகுதிகளில் வீடு வாங்க நடுத்தரவர்க்கத்தினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT