Published : 08 Oct 2017 12:05 PM
Last Updated : 08 Oct 2017 12:05 PM
உலகப் பெண் குழந்தைகள் நாள்: அக்டோபர் 11
வீடு முதல் நாடு வரை பாரபட்சத்தையும் அநீதியையும் சந்திப்பவர்கள் பெண் குழந்தைகள். உலக அளவில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பட்டியல் நீளமானது. 2011-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் உலக நாடுகள் அனைத்தும் அக்டோபர் 11 அன்று ‘அகில உலகப் பெண் குழந்தை தினம்’ கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான மையக் கருத்து ‘வளரிளம் பருவப் பெண் குழந்தைகளின் ஆற்றல்: 2030-ம் ஆண்டின் நோக்கம்’.
உலகம் முழுவதும் பத்து முதல் 19 வயதுவரையுள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 600 கோடி. 2012-ம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவில் 11.3 கோடி வளரிளம் பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், அவர்களின் ஆற்றலும் திறனும் இந்தச் சமுதாயத்தால் உணரப்படவில்லை. உலக அளவிலும், நாடு முழுவதும் தீட்டப்படும் திட்டங்களிலும் அவர்களுக்குச் சிறப்பு இடம் ஏதுமில்லை. இந்நிலையை மாற்றுவதன் மூலம் நாம் 2030-ம் ஆண்டுக்கான நோக்கத்தை எட்ட முடியும் என ஐ.நா. சபை நம்பிக்கையோடு அழைப்புவிடுத்துள்ளது.
யுனிசெஃப் ஆய்வின்படி உலக அளவில் பெண் குழந்தைகள் பிறப்பதற்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு பத்தாண்டு கணக்கெடுப்பின்போதும் வருந்தத்தக்க அளவில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. 2011-ம் ஆண்டு கணக்குப்படி ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளே உள்ளனர். 1-5 வயது குழந்தைகள் இறப்பிலும் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் 17% அதிகமாக இறக்கின்றனர்.
கல்வி இடைநிற்றல்
ஐ.நாவின் பெண் கல்விக்கான முனைப்பு 2015-ம் ஆண்டு அறிக்கையின்படி இந்தியா தொடக்கக் கல்வியிலும் நடுநிலைக் கல்வியிலும் பாலின சமத்துவத்தை எட்டிவிட்டது. ஆனால், உயர்நிலைப் பள்ளியிலும் மேல்நிலைப் பள்ளியிலும் பெண்களின் நிலை பின்தங்கியே உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கடந்த ஆண்டு புள்ளிவிபரப்படி தொடக்கக் கல்வி கற்ற 33% பெண்கள் மட்டுமே மேல்நிலைப் பள்ளிக்குச் செல்கின்றனர். வறுமை, குடும்பச் சுமை, குழந்தைத் திருமணம், பள்ளிக்குச் செல்ல வேண்டிய தொலைவு, பாதுகாப்பின்மை, கழிப்பிடம் இல்லாத நிலை போன்றவை பெண் குழந்தைகள் இடைநிற்றலுக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.
குழந்தைத் திருமணம்
உலகிலேயே அதிகமான குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில்தான் நடைபெறுகின்றன என்றும் இந்தியாவில் ஏறக்குறைய 47 % பெண் குழந்தைகளுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் ஆவதாகவும் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. யுனிசெஃப் உடன் இணைந்து இந்திய அரசு குழந்தைத் திருமண ஒழிப்பில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும் 15 வயது முதல் 18 வயதுக்குள் மணம் செய்வது அதிகரித்துவருகிறது.
இந்தியாவில் உள்ள வளரிளம் பருவப் பெண் குழந்தைகளில் 50%-க்கு அதிகமானோர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சத்தான உணவு கிடைக்காதோர் 66.25 சதவீதத்தினர். வீடுகளிலும் பள்ளிகளிலும் கழிப்பிடம் இல்லாதது, மாதவிடாய் காலங்களில் சுகாதாரமான சானிட்டரி நாப்கின் கிடைக்காதது ஆகியவை பெண் குழந்தைகளைப் பெரிதும் பாதிக்கின்றன.
தொடரும் வன்முறை
குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுக்க பாக்ஸோ சட்டம் அமலில் உள்ளது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தகவல்களின்படி இந்தச் சட்டத்தின் கீழ் 2015-ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட 14,913 வழக்குகளில் 8, 800 வழக்குகள் பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள். இந்தியாவில் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தக் குற்றங்கள் 150% அதிகரித்துள்ளன. மேலும் பெண் குழந்தைகளைக் கடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும் அதிகரித்துவருகிறது.
இலக்கை அடைய
வளரிளம் பருவப் பெண் குழந்தைகளிடமும் பெற்றோர்கள் மற்றும் பொது வெளியிலும் பெண் குழந்தைகள் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இந்நிலையை மாற்ற அவர்களோடு இணைந்தே செயல்திட்டங்களை உருவாக்குவது, குறைந்தபட்சம் மேல்நிலைப் பள்ளி கல்விவரையாவது பெண் கல்வியைக் கட்டாயமாக்குவது, பெண் குழந்தைகள் கல்வி கற்க ஏதுவான சூழலை உருவாக்குவது, பாடத்திட்டத்தில் பெண் குழந்தைகளின் உரிமை, பாதுகாப்பு, பாலியல் கல்வியை இணைப்பது, பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வது, பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு உதவும் மையங்களை அமைப்பது ஆகியவற்றைச் செய்ய வேண்டும்
சட்டங்களையும் திட்டங்களையும்விட மக்களின் மனநிலை மாற்றமும் கருத்தியல் மாற்றமும் உடனடித் தேவை. பெண் குழந்தைகளோடு செல்ஃபி எடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் பாலினப் பாகுபாட்டை அனைத்துத் தளங்களிலும் களைவதே அவர்களின் ஆற்றல் அங்கீகரிக்கப்பட வழிவகுக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT