Last Updated : 01 Oct, 2017 12:35 PM

 

Published : 01 Oct 2017 12:35 PM
Last Updated : 01 Oct 2017 12:35 PM

முகம் நூறு: “போராட்டமே என் முழுநேரப் பணி”

க்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளைக் கண்டு இன்று பலர் குரல் எழுப்பிவருகிறார்கள். ஆனால் களத்தில் இறங்கி, துணிச்சலாகப் போராடுகிறவர்கள் மிகச் சிலரே. அந்த வகையில் படிக்கும் காலத்திலேயே பிரச்சாரம், போராட்டம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது, இளம் வயதிலேயே சிறை அனுபவம் எனப் பல்வேறு காரணங்களுக்காகக் கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தவர் மாணவி வளர்மதி.

நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி சேலம் பெண்கள் அரசு கல்லூரி வளாகத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்த காரணத்துக்காக வளர்மதி கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி வளர்மதி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதியப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து சமீபத்தில் உத்தரவிட்டது. இதனை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

முதல் பட்டதாரி

சேலம் மாவட்டம் வீமனூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் வளர்மதி. வீட்டின் முதல் பட்டதாரியான இவர் பள்ளி, கல்லூரிக் காலத்தில் பெண்ணுரிமை, பாலினச் சமத்துவம், தீண்டாமை, தமிழ் மொழியின் சிறப்பு போன்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மையில் இளநிலைப் பட்டப்படிப்பு படித்துள்ள வளர்மதி, கல்லூரி மாணவியாக இருந்தபோதே கல்லூரி விடுதியில் அடிப்படைத் தேவைகளைச் செய்து தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு முதன்முறையாகச் சிறைக்குச் சென்றார்.

முதல் கைது

கல்லூரி நாட்களில் போராடியதற்காக, முதன்முறையாகக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார் வளர்மதி. அது பற்றிக் கூறுகையில் “எங்கள் வீட்டில் ஆண், பெண் என்ற பேதம் எல்லாம் கிடையாது.

என் அண்ணன், தம்பிக்குக் கிடைக்கு அதே உரிமைகள் எனக்கும் கொடுக்கப்படும். இதன் காரணமாகவே எல்லா விஷயங்களையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பான்மை எனக்குள் வளர்ந்தது. அப்போதுதான் ஈழத்தில் போர், இசைப்பிரியா கொலை என அடுத்தடுத்த சம்பவங்கள் என்னைப் பாதிக்கத் தொடங்கின. அந்தப் பாதிப்புதான் மக்களுக்காகப் போராட வேண்டும் என்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தில் சேர்ந்து மாணவர்களுக்காக கழிப்பறை, விடுதி போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்காகப் போராடத் தொடங்கினேன். அந்த போராட்டத்துக்குக் கிடைத்த பரிசு காவல் துறையினரின் கைது நடவடிக்கையும், அதனையொட்டி கடலூர் சிறையில் பத்து நாட்கள் அடைக்கப்பட்டதும்தான்” என்று கம்பீரமாகச் சொல்கிறார்.

படிக்கும் நாட்களில் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தாலும் கல்லூரிப் பாடங்களில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்துள்ளார் வளர்மதி. அதேபோல் கல்லூரிகளில் நடக்கும் இலக்கியப் போட்டிகளில் ஒன்றுவிடாமல் கலந்துகொண்ட காரணத்தால் பல்கலைக்கழக அளவில் தனித்துவம் மிக்க மாணவியாக விளங்கினார். “போராட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்களில் அதிக அளவில் பங்கேற்றாலும் கல்லூரிக் காலம் முதல் தற்போது இதழியல் முதுகலைப் படிப்புவரை ஒருமுறைகூட அரியர் வைத்தது கிடையாது” என்கிறார்.

சிறைக்குள் நூறு நாட்கள்

“போராட்டங்கள், அரங்கக் கூட்டங்கள், பிரச்சாரம், பொதுக் கூட்டங்கள் போன்றவைதான் எனக்கு இந்தச் சமூகம் குறித்த பார்வையை மேலும் அதிகரித்தன. கல்லூரி அளவில் இருந்த என்னுடைய போராட்ட நடவடிக்கைகளைப் பொது மக்களின் பிரச்சினைகளுக்கும் எடுத்துச் செல்ல அது உந்துதல் அளித்தது. அதனுடைய வெளிப்பாடுதான் நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் தொடங்கியதும். நானும் என் தோழர்களும் ரயில் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்தபோதே கைது செய்யப்பட்டோம். திருச்சி சிறையில் என்னை அடைத்த காவல் துறையினர் பெண் காவலர்களைக்கொண்டு சோதனை என்ற பெயரில் மிகவும் மோசமாக நடந்துகொண்டனர். அதேபோல் எந்தவித அடிப்படை வசதியும் திருச்சி சிறை வளாகத்தில் இல்லை” என்று சொல்லும் வளர்மதி, சோதனை என்ற பெயரில் அவரிடம் தவறாக நடந்துகொண்டதற்காகச் சிறைக்குள்ளேயே எட்டு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்.

பல மக்கள் தலைவர்களைப்போல் சிறைக் காலத்தில் புத்தகங்கள் படித்துத் தன் அறிவைக் கூர்மையாக்குவதிலும் பேட்மிண்டன் விளையாடி உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் மற்ற கைதிகளுடன் பேசி சமூகத்தைப் புரிந்துகொள்வதிலும் செலவிட்டிருக்கிறார்.

கைது நடவடிக்கை, சிறை வாசம் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு முறை விடுதலையான பிறகும் சுணங்கிவிடாமல், மீண்டும் புத்துணர்வு கிடைத்ததுபோல் போராடத் தொடங்கிவிடுகிறார் வளர்மதி. இறுதியாக சேலம் மாவட்டத்தில் துண்டு பிரசுரம் வழங்கியதற்காக முதலில் சேலம் சிறையில் நான்கு நாட்கள் அடைக்கப்பட்டு பின்னர் குண்டர் சட்டம் போடப்பட்டு கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு மொத்தம் 52 நாட்கள் சிறையில் இருந்துள்ளார் வளர்மதி. “என் மீது குண்டர் சட்டம் போட்டதும் என் பெற்றோர் மிகவும் பயந்துவிட்டார்கள். குறிப்பாக என் அம்மா மிகவும் பயந்தார். சிறை வளாகத்தில் என்னை வந்து சந்தித்து, நான் நலமாக இருக்கிறேன் என்பதைப் பார்த்த பிறகுதான் அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது” என்று சொல்பவர், விடுதலையாகி வீட்டுக்குச் சென்றவுடன் தனக்கு மிகவும் பிடித்த நாட்டுக் கோழிக் குழம்பை அம்மா சமைத்திருந்ததையும் அதைச் சாப்பிட்ட ருசியையும் நினைவுகூர்கிறார்.

வளர்மதி இதுவரை கடலூர், திருச்சி, சேலம், கோவை எனப் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு மொத்தம் 102 நாட்கள் சிறையில் கழித்துள்ளார்.

“மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்வரை நான் போராடிக்கொண்டுதான் இருப்பேன். மாமேதை லெனின் கூறியதுபோல் குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம். இனிவரும் நாட்களிலும் மக்களுக்கான போராட்டத்தில் ஈடுபடுவதுதான் என் முழுநேரப் பணி” என முழங்குகிறார் வளர்மதி.

பிடித்த வாசகம்

இந்த வாசகத்தை யார் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என்னை மாணவர் சங்கத்தில் அறிமுகப்படுத்திய ரகு தோழர் எப்போதும் குறிப்பிடும், ‘நமக்கான போராட்டத்தை நாமே முன்னின்று நடத்துவோம்’ என்பதுதான் எனக்கு மிகவும் பிடித்த வாசகம். நான் கலந்துகொள்ளும் போராட்டங்களில் இந்த வாசகத்தைப் பயன்படுத்தாமல் இருந்ததில்லை.

பிடித்த புத்தகம்

சீன நாவலான ‘இளமை கீதம்’ எப்போதும் என் மனதுக்கு நெருக்கமான புத்தகம். அந்த நாவலில் வரும் டாவொசிங் கதாப்பாத்திரம் என்றும் என் நினைவில் இருந்து அழியாத பிம்பம். அதேபோல் ரஷ்ய எழுத்தாளர் நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி எழுதிய ‘வீரம் விளைந்தது’ நாவல் மிகவும் பிடிக்கும். சமீபத்தில் கோவைச் சிறையில் இருந்தபோது படித்த எழுத்தாளர் அருந்ததி ராயின் ‘தி மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்’ நாவல் மிகவும் கவர்ந்தது. தற்போது ஆளும் மத்திய அரசு, நாட்டில் எப்படியெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள அது உதவியாக இருந்தது.

பிடித்த தலைவர்கள்

நாட்டின் விடுதலைக்காக 24 வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மாவீரன் பகத்சிங்தான் எனக்கு மிகவும் பிடித்த தலைவர். நான் மாணவர் சங்கத்துக்கு வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவை அவரது எழுத்துகள்தான். அவர் மக்கள் மீது கொண்ட அன்பும், அவர்களுக்காக அவர் செய்த தியாகமும்தான் போராட்டங்களில் ஈடுபட எனக்கு உந்துதலாக இருந்தன. அதேபோல் உழைக்கும் மக்களின் நலனுக்காக மார்க்சிய தத்துவத்தை எழுதிய கார்ல் மார்க்ஸும், அந்தத் தத்துவத்தை நடைமுறைப்படுத்திய புரட்சியாளர் லெனினும் என்னை வெகுவாக ஈர்த்தவர்கள்.

ஆதர்சமாக இருப்பவர்

பள்ளிக்கூடமும் வீடும்தான் வாழ்க்கை என இருந்த எனக்கு மக்களுக்காகப் போராட வேண்டும் என உணர்த்தியவர் எங்கள் அமைப்பின் தோழர் ரகுவரன். ஆனால் அவர் 23 வயதிலேயே மூளைக் காய்ச்சல் காரணமாக இறந்துவிட்டார். ஏன் மக்களுக்காகப் போராட வேண்டும், சமுதாயத்தில் என்ன பிரச்சினைகள் உள்ளன, அவற்றுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என எளிமையாக எங்களுக்கு விளக்குவார். மூளைக் காய்ச்சலால் அவருக்கு சுயநினைவு இல்லாமல் பல நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது ஒருமுறை அவருக்குச் சுயநினைவு வந்தது. அந்த நேரத்திலும்கூட நாங்கள் முன்பே திட்டமிட்டிருந்த கருத்தரங்க வேலைகள் எப்படிச் சென்றுகொண்டிருக்கின்றன, பிரசுரங்கள் எல்லாம் அச்சாகிவிட்டனவா எனக் கேட்டார். அதுதான் அவர் முதலும் கடைசியுமாகப் பேசிய வார்த்தை. அவரைப் போலவே நானும் மக்களுக்காக இறுதி மூச்சுவரை போராட வேண்டும் என்று உறுதியெடுத்துள்ளேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x