Published : 01 Oct 2017 12:22 PM
Last Updated : 01 Oct 2017 12:22 PM
இ
ன்றைக்கு நிமிடத்துக்கு ஒரு செல்ஃபி எடுத்து, அடுத்த நொடி எல்லோருக்கும் அனுப்பிவிடும் அவசர காலத்தில் வாழ்கிறோம். 'போட்டோ பிடித்தால் ஆயுசு குறைந்துவிடும்' என்ற நம்பிக்கை மிகவும் அழுத்தமாக இருந்த நம் நாட்டில் 19-ம் நூற்றாண்டில் கேமராவுக்கு முன்னால் எப்படி நின்றிருப்பார்கள்? அதுவும் வீட்டுக்குள்ளேயே வைத்துப் பூட்டப்பட்ட பெண்கள் கேமராவின் முன்பு முகம் காட்டியிருப்பார்களா?
அப்படியே சில பணக்காரப் பெண்கள் முகம் காட்டினாலும்கூட, சிம்மாசனம் போன்ற நாற்காலியில் கணவர் கம்பீரமாக அமர்ந்திருக்க, பக்கத்தில் மனைவி தள்ளியோ, சற்று ஒடுங்கியோ பாவமாக நின்றுகொண்டிருப்பார். அரிதாக பெண்கள் இருக்கையில் அமர வைக்கப்பட்டாலும், இருக்கையின் கைப்பிடியில் ஸ்டைலாக ஆண்கள் அமர்ந்திருப்பார்கள். இவை மட்டும்தான் நமக்குத் தெரிந்த அந்தக் காலப் படங்கள்.
இந்தப் பின்னணியில், கேமராவுக்கு முன் நின்ற பெண்களின் தோற்றம் 1850-களில் இருந்து 1970 வரை எப்படி மாறிவந்தது என்பதையும், ஒளிப்படம் எடுக்கும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் பற்றி புதிய பார்வையை விதைக்கின்றன இங்கு இடம்பெற்றுள்ள படங்கள். ‘தஸ்வீர் கேலரி' என்ற அமைப்பு சேகரித்த அரிய படங்கள் இவை. இந்தப் படங்களில் இருந்து பல விஷயங்களை நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.
அதுவரை வீட்டுச் சுவர்களுக்குள்ளும் முக்காடுகளுக்குள்ளும் அடைக்கப்பட்டிருந்த பெண்கள், படமெடுத்துக் கொள்வதற்காகவும் படமெடுக்கச் சம்மதித்தன் மூலமாகவும் வெளியே வரத் தொடங்கினார்கள். தொடர்ச்சியாக அந்தப் படங்களின் வழியாக, இந்தியர்களின் மனதில் கட்டமைக்கப்பட்டிருந்த பெண் குறித்த பிம்பமும் மாறத் தொடங்கியது.
இந்தியப் பண்பாட்டிலும், குறிப்பாகப் பெண்களிடையேயும் ஏற்பட்ட மாற்றங்களை இந்தப் படங்கள் எடுத்துச் சொல்கின்றன. இந்தப் படங்களில் பதிவுசெய்யப்பட்ட பெண்கள் பாரம்பரிய அம்சங்களுடன் இருக்கும் அதேநேரம், அவர்கள் படமெடுக்கப்பட்ட ஸ்டுடியோ, ஓவியத் திரைச்சீலைகள், போஸ் கொடுக்க வைக்கப்பட்ட முறை உள்ளிட்டவை ஐரோப்பியத் தன்மையுடன் அமைந்திருப்பது முக்கியமான முரண்.
19-ம் நூற்றாண்டின் நடனப் பெண்கள் - பழங்குடிப் பெண்களின் அப்பாவித்தனம், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வசதி படைத்த பெண்களின் அமர்த்தலான ஸ்டுடியோ உருவப்படங்கள் (போர்ட்ரெய்ட்), 1940-50-களின் பாலிவுட் நடிகைகளின் ஆச்சரியப்பட வைக்கும் பகட்டான படங்கள் என பல்வேறு தளங்களில் இந்தப் படங்கள் அமைந்துள்ளன. இந்தப் பெண்களின் பின்னணி, அவர்களுடைய சமூக-பண்பாடு பற்றிய மனச்சித்திரத்தை சட்டென்று இந்தப் படங்கள் உருவாக்கி விடுகின்றன.
பெண் வெறும் அழகுப் பதுமை அல்ல என்பதையும் இந்தப் படங்களின் வழியே கண்டுணர முடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT