Last Updated : 08 Oct, 2017 11:47 AM

 

Published : 08 Oct 2017 11:47 AM
Last Updated : 08 Oct 2017 11:47 AM

முகங்கள்: உலக அரங்கில் இந்திய முகம்!

இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சியான WWE போட்டியில் முதன்முறையாக கவிதாதேவி என்கிற இந்தியப் பெண் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச மல்யுத்த பொழுதுபோக்கு (WWE) நிகழ்ச்சியை ஏராளமான ரசிகர்கள் பார்த்துவருகிறார்கள். இந்தப் போட்டியில் பொதுவாக ஆண்களே அதிக அளவில் பங்கேற்றுவந்தனர். சமீப காலமாக இதில் பெண்கள் பங்கேற்றாலும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெண்களே அதிக அளவில் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஆசிய மற்றும் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த பெண்களையும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளச் செய்வதற்காக உலக அளவில் 32 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்குத் தகுதிச் சுற்றுப் போட்டி நடந்தது. இதில் மிகச் சிறப்பாகத் தன் திறமைகளை வெளிக்காட்டிய கவிதாதேவி, சர்வதேச WWE போட்டியின் இறுதிச் சுற்றில் கலந்துகொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உடை தடையல்ல

இந்தப் போட்டியில் பங்கேற்கும் பெண்கள் பொதுவாக டீஷர்ட், டிராக்ஸ், ஷார்ட்ஸ் போன்றவற்றை அணிவார்கள். கை, கால்களை அசைத்து சண்டையிட இவை உகந்தவை. ஆனால், கவிதாதேவி ஆரஞ்சு நிற குர்தா அணிந்துகொண்டு இடுப்பில் துப்பட்டாவைக் கட்டிக்கொண்டு களமிறங்கினார். வட இந்திய ஆடையை அணிந்து போட்டியிட்ட கவிதாதேவி, எதிராளியைப் பந்தாடிய காட்சியைக் கண்ட அனைவரும் அசந்துபோயினார்கள் சர்வதேச ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றார். தன்னம்பிக்கை இருந்தால் எந்த உடையை அணிந்துகொண்டும் ஜெயிக்கலாம் என்பதை நிரூபித்தார்.

முதல் தங்கம்

கவிதாதேவி, ஹரியாணா மாநிலத்தில் உள்ள குக்கிராமத்தில் பிறந்தவர். அரசுப் பள்ளியில் படித்த இவர், சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்று வெற்றிபெற்றுள்ளார். ஹரியாணா காவல் துறையில் காவலராகச் சேர்ந்த அவர், சில ஆண்டுகளில் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்றார். ஆனால், விளையாட்டுத் துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்த கவிதா, 2010-ம் ஆண்டு வேலையை விட்டு விலகினார். பின்னர், பளுதூக்கும் போட்டிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். கடந்த ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றார்.

காளியின் மாணவி

உலகப் புகழ்பெற்ற ‘த கிரேட் காளி’ என்கிற தாலிப் சிங் ரானாவின் ‘பஞ்சாப் மல்யுத்த பயிற்சி மைய’த்தில் கவிதாதேவி பயிற்சி பெற்றார். அங்கு புல் புல் என்கிற இந்திய மல்யுத்த பெண் வீரருடன் அவர் மோதிய காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதன் மூலம் கவிதாதேவி நாடு முழுவதும் அறியப்பட்டார்.

“WWE போட்டியில் கலந்துகொள்ளும் முதல் இந்தியப் பெண் என்பதை மிகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் என்னுடைய பங்களிப்பை வெளிப்படுத்துவேன்” என உற்சாகமாகச் சொல்கிறார் கவிதாதேவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x