Published : 24 Sep 2017 11:46 AM
Last Updated : 24 Sep 2017 11:46 AM

வான் மண் பெண் 24: அழியாத நம்பிக்கைக்கு ஒரு காரணம்!

கு

ரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் மனிதர்கள் என்கிறது அறிவியல். மனம் ஒரு குரங்கு என்கிறது ஆன்மிகம். குரங்குகள் மனிதர்களின் அசல் என்றால், மனிதர்கள் குரங்குகளின் நகல்!

ஆனால் நம்மை யாராவது ‘குரங்கு’ என்று அழைத்துவிட்டால் உடனே பொல்லாத கோபம் வந்துவிடும். விளையாட்டாக அழைத்தாலே கோபமும் எரிச்சலும் ஏற்படுகிறதென்றால் குரங்குகளுடனேயே தங்கள் மொத்த வாழ்க்கையையும் கழிக்கிற ஆய்வாளர்கள் எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பார்கள்? ‘குரங்குகளிடமிருக்கும் சில தன்மைகளை இன்றும் மனிதர்கள் பின்பற்றுகிறார்கள்’ என்கிற அறிவியல் உண்மையைச் சொன்னதற்காக எத்தனை விமர்சனங்களை எதிர்கொண்டிருப்பார்கள்?

சிம்பன்ஸி குரங்குகள் தொடர்பான தனது ஆய்வுகளைக் குறித்து, ‘ரீசன் ஃபார் ஹோப்’ உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதிய ஜேன் குடால், குரங்குகளின் மீது மனிதர்களுக்கு மரியாதையை ஏற்படுத்தியவர்களில் முதன்மையானவர். அதனால்தான் இயற்கை அழியாது என்ற நம்பிக்கைக்கு இவர் போன்றவர்கள் காரணமாக இருக்கிறார்கள்.

டார்சான் தந்த கனவு

மனிதர்களின் முன்னோர்கள் என்று கருதப்படுகிற குரங்கு இனங்களில் முக்கியமானவை சிம்பன்ஸி குரங்குகள். இந்தக் குரங்கு இனங்களைப் பற்றி ஆய்வு நடத்திய முன்னோடி அறிவியலாளர் ஜேன் குடால். இவர் 1934-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி லண்டனில் பிறந்தார்.

முதல் பிறந்தநாளுக்கு அவருக்குக் கிடைத்த பரிசு ஒரு சிம்பன்ஸி குரங்கு பொம்மை. சிம்பன்ஸி குரங்குகளுடனான அறிமுகம் ஜேன் குடாலுக்கு இப்படித்தான் ஏற்பட்டது.

வீட்டைச் சுற்றிலுமிருந்த தோட்டம், நாய்க்குட்டி, குரங்கு பொம்மை எனச் சிறு வயதிலிருந்தே இயற்கையின் மீது ஈடுபாட்டுடன் வளர்ந்துவந்தார். அவருடைய அம்மா, ‘தி ஜங்கிள் புக்’ போன்ற இயற்கை சார்ந்த சித்திரக்கதைப் புத்தகங்களைக் கொடுத்து வாசிப்புப் பழக்கத்தை ஊட்டினார். டார்சான் கதைகளைப் படித்து அதன் நாயகன் டார்சான் காட்டில் செய்யும் சாகசங்களைத் தானும் செய்வதாக நிறைய கனவுகள் கண்டார் ஜேன். இந்தக் கனவுகள் அவருக்குக் காடுகள் மீதான ஆர்வத்தை வளர்த்தன.

ஆப்பிரிக்கா அழைத்தது

இப்படி இயற்கை மீது பெரும் நேசம் கொண்டு வாழ்ந்துவந்தவருக்கு, 1957-ம் ஆண்டு ஆப்பிரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. லண்டனில் சொற்ப சம்பளத்துக்கு செகரட்டரியாகப் பணியாற்றிவந்த ஜேன், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். அப்போது அந்நாட்டுத் தலைநகர் நைரோபியில் உள்ள காரிண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் தொல்மானிடவியலாளராகப் பணியாற்றிவந்த லூயி லீக்கியை ஜேன் சந்தித்தார். லீக்கி தந்த உற்சாகத்தால் ஆப்பிரிக்காவில் உள்ள சிம்பன்ஸி குரங்குகளைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினார் ஜேன்.

இத்தனைக்கும் ஜேன், முறையான கல்லூரிக் கல்வியைப் பெற்றிருக்கவில்லை. மேலும் அறிவியல் தொடர்பாக எந்தப் படிப்பையும் படித்திருக்கவில்லை. ஆனால் லீக்கி, அப்படியான ஒரு நபரைத்தான் தேடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் எந்த ஒரு முன்முடிவும் இல்லாமல் உயிரினங்களை அணுகி, அவற்றைப் புரிந்துகொள்ள முடியும் என்பது அவரின் நம்பிக்கை. எனினும் பின்னாட்களில் சிம்பன்ஸி தொடர்பான ஆய்வுகளுக்கு நிறைய நிதி தேவைப்பட்டது. லீக்கியால் ஓரளவுக்கு மேல் பணம் புரட்ட முடியவில்லை. எனவே தன் செல்வாக்கைப் பயன்படுத்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரினங்களின் பண்பியல் (இதாலஜி) குறித்த முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள ஜேனுக்கு ஒரு ‘சீட்’ வாங்கிக் கொடுத்தார். ஜேன் குடால் இப்படித்தான் அறிவியல் துறைக்குள் வந்தார்.

உண்மையை நிரூபித்த கருவி

சிம்பன்ஸி குரங்குகளுடன் தனது தோழமையை ஏற்படுத்திக்கொள்வதற்கு, ஜேனுக்கு ஆண் சிம்பன்ஸி குரங்கு ஒன்று உதவியது. அந்தக் குரங்குக்கு டேவிட் கிரேபியர்ட் என்று பெயரிட்டார் ஜேன். அடுத்து வந்த சில நாட்களுக்கு அந்தக் குரங்கின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் குறிப்பெடுத்துவந்தார்.

சிம்பன்ஸி குரங்குகளுக்குக் கரையான்கள் மிகவும் பிடித்த உணவு. ஒருநாள் டேவிட் கரையான் புற்றுக்கு அருகில் அமர்ந்திருந்தது. மரத்திலிருந்து கீழே விழுந்து கிடந்த குச்சியை எடுத்து, அதன் இலைகளைப் பறித்துவிட்டு, அந்தக் குச்சியின் தண்டுப் பகுதியைப் புற்றின் உள்ளேவிட்டுக் கரையான்களைப் பிடித்துத் தின்பதைப் பார்த்த ஜேனுக்கு ஒரு உண்மை புலப்பட்டது. அதாவது மனிதர்களுக்குக் கருவி செய்யும் திறன், இந்த சிம்பன்ஸி குரங்குகளிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்பதை அறிந்தார் அவர். அந்த உண்மை உலகத்தையே அவர் பக்கம் திரும்ப வைத்தது.

அது மட்டுமல்ல, சிம்பன்ஸி குரங்குகளுக்கு இயல்பிலேயே வன்முறை குணம் உண்டு. அதனால்தான் மனிதர்களிடையேயும் வன்முறை என்பது இயல்பாகவே தென்படுகிறது என்பதை உலகுக்கு உணர்த்தினார்.

முறையான அறிவியல் படிப்பு இல்லாத காரணத்தால் ஆரம்ப காலத்தில் குரங்குகளுக்குப் பெயரிட்டும் அவற்றுக்கு மனிதர்களின் குணங்களைப் பொருத்திப் பார்த்தும் தனது ஆய்வை மேற்கொண்டுவந்தார் ஜேன். கோபம், பாசம், நன்றி உணர்வு போன்ற மனிதர்களின் குணங்களை உயிரினங்களுக்குப் பொருத்திப் பார்ப்பதை ஆங்கிலத்தில் ‘ஆந்த்ரபோமார்ஃபிஸம்’ என்று சொல்வார்கள். இது, இயற்கைக்கு எதிரானது. எனவே, அன்றைய நாட்களில் ஜேன் மீது சில விமர்சனங்கள் வைக்கப்பட்டன. முனைவர் பட்டம் பெற்று, பின்னாட்களில் இந்தத் தவறைத் திருத்திக்கொண்டார் ஜேன்.

ஆள்கடத்தல் தந்த அமைப்பு

நைஜீரியாவின் காம்பே பகுதியிலிருந்து சிம்பன்ஸி குரங்குகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவந்தார் ஜேன். அங்கு வெளிநாட்டு மாணவர்கள் வந்து, சில காலம் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள். ஒருமுறை, நான்கு வெளிநாட்டு மாணவர்கள் உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்கள் சிலரால் கடத்தப்பட்டனர். சில காலம் கழித்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இனி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்ற உந்துதலால்தான் 1976-ம் ஆண்டு ‘ஜேன் குடால் இன்ஸ்டிட்டியூட்’ எனும் அமைப்பைத் தொடங்கினார்.

இந்த அமைப்பின் மூலம் ஆய்வுப் பணிகளுடன், மருத்துவ ஆய்வுகளுக்காகவும் சர்க்கஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டுவந்த பல்லாயிரக்கணக்கான சிம்பன்ஸி குரங்குகளை மீட்டார். மேலும் அந்தக் குரங்குகள் கள்ள வேட்டையாடப்படுவதையும் முடிவுக்குக் கொண்டுவந்தார். தனது பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்ற ஜேன், ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதித் தூதராகவும் இருந்துவருகிறார். 84 வயதிலும் காட்டுயிர்களின் பாதுகாப்புக்காக அயராது பாடுபட்டுவரும் இவர் சொல்லும் செய்தி இதுதான்: “இயற்கையுடன் நாம் ஒன்றுபட்டு வாழாதவரை நம்மால் சக மனிதர்களுடன் ஒற்றுமையுடன் வாழ முடியாது!”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x