Published : 03 Sep 2017 11:37 AM
Last Updated : 03 Sep 2017 11:37 AM
வி
ளையாட்டுத் துறையில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் விருதுகளில் அர்ஜுனா விருது தனித்துவமானது. மாற்றுத் திறனாளிகள் உள்பட பலதரப்பட்ட விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதன் சிறப்பு. இந்த ஆண்டு 17 பேர் இந்தப் பெருமைமிகு விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களில் 5 பேர் பெண்கள்!
வி.ஜெ.சுரேகா (வில் வித்தை)
தெலங்கானாவைச் சேர்ந்த இளம் வீராங்கனையான சுரேகா 11 வயதிலேயே வில்வித்தையில் களமிறங்கியவர். மெக்சிகன் கிராண்ட் போட்டியில் தங்கம் வென்றபோது இவருக்கு 13 வயதுதான். இவர் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தவர் என்பது பலரும் அறியாதது. 3 வயதிலேயே கிருஷ்ணா ஆற்றில் 5 கி.மீ. தூரத்தை 3 மணி நேரம் 20 நிமிடங்களில் மூன்று முறை கடந்து சாதனை படைத்தவர். இதுவரை வில்வித்தைப் போட்டிகளில் இந்தியாவுக்காக 17 பதக்கங்களைப் பெற்றுள்ளார். சென்ற ஆண்டு எஃப்.ஐ.எஸ்.யு. உலகப் பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இவரும் இடம்பெற்றிருந்தார்.
பிரசாந்தி சிங் (கூடைப்பந்து)
கூடைப் பந்தாட்டப் பிரிவில் அர்ஜுனா விருது பெறும் மூன்றாவது வீராங்கனை இவர். உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசிதான் இவரது சொந்த ஊர். 33 வயதான பிரசாந்தி, இந்தியக் கூடைப் பந்து அணியின் நட்சத்திர வீராங்கனை. இவரது கூடைப் பந்தாட்டக் கனவைக் காயங்கள் பலமுறை சிதைத்திருந்தாலும், அதிலிருந்து விரைவாகவே மீண்டுவந்து இந்தியாவுக்காகக் களமாடியவர். 2006-ம் ஆண்டில் காமன்வெல்த் போட்டியில் இந்திய அணியை வழிநடத்திய பெருமை இவருக்கு உண்டு. ஃபிபா (FIBA) ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் இவரது தலைமையில் இந்திய அணி 6 முறை களம் கண்டிருக்கிறது. இன்னமும் கூடைப் பந்தாட்டாத்தில் சாதிக்கத் துடிக்கிறார் பிரசாந்தி. இவருடைய மூத்த சகோதரி திவ்யா சிங்கும் கூடைப் பந்தாட்ட வீராங்கனைதான்.
ஆயினம்பெம்பெம் தேவி (கால்பந்து)
கால் பந்தாட்டத்தில் இந்த ஆண்டு அர்ஜுனா விருதுக்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்ற கவலையைப் போக்கியிருக்கிறார் ஆயினம்பெம்பெம் தேவி. கால் பந்தாட்டப் பிரிவில் அர்ஜுனா விருது பெறும் இரண்டாவது வீராங்கனை இவர். கால் பந்தாட்டம் இந்தியாவில் உயிர்ப்புடன் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் தலைநகர் இம்பால், தேவியின் சொந்த ஊர். ‘இந்தியக் கால் பந்தாட்டத்தின் துர்கா’ என்று செல்லமாக அழைக்கப்படும் அளவுக்குக் கால் பந்தாட்ட நுணுக்கங்களை அறிந்தவர். ஐந்து சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்திருக்கிறார். கால்பந்தை 13 வயதில் உதைக்க ஆரம்பித்த தேவியின் கால்கள், 37 வயதாகியும் இன்னும் பந்துகளைத் துரத்தி ஓடிக்கொண்டே இருக்கின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் (கிரிக்கெட்)
இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வலிமையான ஆஸ்திரேலிய அணியைத் தனி ஒருவராக எதிர்த்து இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற சூறாவளி வீராங்கனை. வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 171 ரன்கள் குவித்து ஒரே நாளில் இந்தியா முழுவதும் புகழ்பெற்றார் ஹர்மன்பிரீத். பஞ்சாபைச் சேர்ந்த ஹர்மன்பிரீத், கூடைப் பந்தாட்ட வீரர் ஹர்மந்தரின் மகள். 20 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்த இவர், பல முறை மகளிர் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார்.
குஷ்பிர் கவுர் (தடகளம்)
பஞ்சாபைச் சேர்ந்த 24 வயது இளம் பெண்ணான குஷ்பிர், 20 கிலோ மீட்டர் நடைப் போட்டியில் இந்தியாவின் ஒரே அடையாளம். 2012 ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், 2014 ஆசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் என சர்வதேச அளவில் பல பதக்கங்களை வென்றிருக்கிறார். கடந்த ஜூலை மாதம் லண்டனில் நடைபெற்ற உலகத் தடகளப் போட்டி 20 கிலோ மீட்டர் நடைப் போட்டியில் 42-வது இடத்தையே இவரால் பிடிக்க முடிந்தது. ஆனால், தேசிய அளவிலான நடைப் போட்டியில் இவர் செய்யாத சாதனைகளே இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT