Published : 18 Sep 2017 11:14 AM
Last Updated : 18 Sep 2017 11:14 AM
பணியின்போது உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களின் மனைவிகள், தங்களுடைய கணவரின் கனவை நனவாக்கும் வகையில் ராணுவத்தில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்துள்ளனர்.
சென்னை, பரங்கிமலையில் ராணுவப் பயிற்சி அகாடமி உள்ளது. ராணுவத்தில் அதிகாரியாகப் பணியில் சேரும் வீரர்களுக்கு இங்கே பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் 104-வது பிரிவைச் சேர்ந்த 322 பேர் பயிற்சி நிறைவுபெற்றுப் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டனர். இந்தப் பயிற்சியின் சிறப்பம்சமாகக் கணவனை இழந்த இரண்டு பெண்கள், அதிகாரியாகத் தேர்வு செய்யப்பட்டுப் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் லெப்டினென்ட் ஸ்வாதி மகாதிக் (38). இவருடைய கணவர் கர்னல் சந்தோஷ் மகாதிக் காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தார். இவர்களுக்கு கார்த்திக்கி (12) என்ற மகளும் ஸ்வராஜ் (6) என்ற மகனும் உள்ளனர். கணவரைப் போரில் இழந்ததால் இவருக்கு ராணுவத்தில் சேர வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டது. இதையடுத்து இவர் ராணுவத்தில் சேர்ந்தார். பயிற்சி முடித்த ஸ்வாதி மகாதிக் தற்போது புனேவில் உள்ள ராணுவப் போர்த் தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவத்தில் சேருவதற்கு முன்பு இவர் ஆசிரியராகப் பணியாற்றினார்.
“என் கணவரைத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அந்த நிமிஷம் என் வாழ்க்கையே அஸ்தமனமானதுபோல் இருந்தது. உயிரில்லாத அவரது உடலைப் பார்த்தபோது நானும் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்தேன். ஆனா தன்னோட அப்பா இறந்ததுகூடத் தெரியாம விளையாடிட்டு இருந்த என் மகனின் முகத்தைப் பார்த்ததும் அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன். என் மகனுக்காக நான் வாழணும். என் கணவர், நாட்டுக்காக இறந்தார். வாழ்க்கையில எந்த நிலையிலும் நம்பிக்கையைக் கைவிடக் கூடாதுன்னு அவர் எப்பவுமே சொல்லிட்டே இருப்பார். இந்த வரிகள் எனக்குள் ஒலித்தன” என்று சொல்லும் ஸ்வாதி மகாதிக், அதன் பிறகு ராணுவத்தில் சேர முடிவு செய்தார்.
“என் மகனை எப்படிப் பிரியறதுன்னு தெரியாம தவிச்சேன். அப்போ என் அம்மாவும் அப்பாவும் எனக்கு உறுதுணையா நின்னாங்க. இன்டர்வியூவில் செலக்ட் ஆகி, சென்னையில் ஆறு மாசம் ராணுவப் பயிற்சி. இதை வெறும் பயிற்சின்னு ஒரு வார்த்தையில சொல்லிட முடியாது. ஆறு மாசம் வரைக்கும் என் மகனைப் பார்க்க முடியாத தவிப்பு. தினமும் இரவு அழுதுகிட்டேதான் தூங்குவேன். ஒவ்வொரு வாரமும் என் மகனோட புகைப்படத்தை எனக்கு லெட்டர்ல அனுப்புவாங்க. அதைப் பார்த்து ஆறுதல் அடைவேன். வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்த நான் இனி அவரது கனவை நிறைவேற்றும் வகையிலும் பணியாற்றுவேன்” என்றார் ஸ்வாதி மகாதிக்.
பணியில் சேர்ந்த இன்னொரு பெண், நிதி துபே (25). இவருடைய கணவர் முகேஷ்குமார் துபே. இவர் ராணுவத்தில் நாயக் ஆக இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார். நிதி துபே, எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் கணவர் இறந்தபோது இவர் நான்கு மாதம் கருவுற்றிருந்தார். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திலும் ராணுவப் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினர்.
கணவனை இழந்த ஒரு பெண், ராணுவத்தில் அதிகாரியாகச் சேர்ந்ததைக் கண்ட நிதி துபே தானும் அதில் சேர தீர்மானித்தார். இதற்காக ராணுவத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார். இதையடுத்து இவரும் பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து, மத்தியப் பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தில் உள்ள ராணுவத் தளவாடப் பிரிவில் அதிகாரியாகச் சேர்ந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT