Published : 09 Sep 2017 07:00 PM
Last Updated : 09 Sep 2017 07:00 PM
வீதி நாடகம் எனும் வடிவம் தமிழகத்தில் அறிமுகமான காலத்தில் அதில் துணிந்து பங்கேற்ற மதுரைப் பெண் எஸ்.தேவகி. வீதி நாடகம், சமூக நாடகம், வரலாற்று நாடகம் என்று தொடங்கி தற்போது நவீன நாடகம்வரை கடந்த 50 ஆண்டுகளில் 1,000 மேடைகள் கண்டிருக்கிறார். “எனது வாழ்க்கைக் கதை திருப்பங்கள் நிறைந்த வரலாற்று நாடகம் போன்றது” என்று கூறி நாடக வாழ்வின் தருணங்களை மனம்விட்டுப் பகிர்ந்தார்.
கைதட்டல் கொண்டுவந்த காதல்
“வெள்ளைக்காரன் பட்டாளத்தில் என் அப்பா டாக்டராக இருந்தார். மதுரை ஜில்லாவில் டாக்டர் ஏ. சீதாராமன் என்றால் தெரியும். என்னை ஒரு டாக்டர் ஆக்கிப் பார்க்க நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.
திருச்செந்தூர் பக்கத்தில் வீரபாண்டிபட்டினத்தில் குடியிருந்தபோது, செயின்ட் மேரிஸ் பள்ளியில் என்னைச் சேர்த்தார்கள். ஈஸ்டர் பண்டிகை நேரத்தில் யேசுநாதரின் வாழ்க்கை வரலாற்றைச் சிறு பிள்ளைகளை வைத்து பள்ளியில் நாடகமாக நடத்தினார்கள். அப்போது யேசுநாதராக நடிக்க என் அக்காவைத் தேர்வு செய்தார்கள். அவள் மறுத்துவிட்டாள். உடனே ‘நடிக்கட்டுமா?’ என்று நான் கேட்டேன். பத்து வயதில் யேசுநாதராக நடித்தபோது கிடைத்த கைதட்டல், நாடகம் மீது மயக்கத்தை உண்டாக்கிவிட்டது.
காதலும் கணவரும்
அதன்பிறகு 10-ம் வகுப்பு ஆண்டுவிழாவுக்கு ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றை நடத்தினார்கள். அது ஷேக்ஸ்பியர் பிரதியைத் தழுவிய ஒரு ஆங்கில நாடகம். பஸானியோ, பொஸியோ என்ற அரசன் – அரசி வேடத்தின் நானும் சக மாணவரும் நடித்தோம். அவர்தான் பின்னால் என் கணவரானார். படிப்பை முடித்ததும் 1973-ல் ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது. “என் விருப்பப்படி டாக்டராகத்தான் ஆகவில்லை, ஹெல்த் இன்ஸ்பெக்டராகவேணும் இரு” என்று அப்பா கூறினார். அன்று ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலையில் பெண்கள் சேரமாட்டார்கள்.
ஏனென்றால், ஊர் ஊராகச் செல்ல வேண்டும். எல்லா மக்களையும் வேறுபாடு இல்லாமல் சந்திக்க வேண்டும். குழந்தைகளையும் பெரியவர்களையும் துரத்திப் பிடித்து அம்மைப் பால் தடுப்பூசி போட வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் அன்று நான் ஒருத்தி மட்டும்தான் பெண் ஹெல்த் இன்ஸ்பெக்டர்.
என் கணவருக்கு அரசியலில் ஆர்வம். கட்சியில் சேர்ந்து கவுன்சிலர் ஆனபிறகு கொஞ்சமாக ஆரம்பித்த குடிப்பழக்கம் ஒரு கட்டத்தில் அவரைக் குடிநோயாளி ஆக்கிவிட்டது. என்னை வற்புறுத்தி என் வேலையை ராஜினாமா செய்ய வைத்துவிட்டார். குடித்துவிட்டுவந்து தினசரி அடிக்க ஆரம்பித்துவிட்டார். அடிகளைச் சகித்துக்கொண்டு வாழமுடியாது என்று தோன்றியபோது கணவரைப் பிரிந்து அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன்.
கலையே என் கணவர்
மதுரைக்கு அம்மா வீட்டுக்கு வந்த பிறகு அம்மா, தம்பி, தங்கைகளைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இருந்ததால் சமூக நலத்துறையின் கீழ் அங்கன்வாடிப் பணியாளராக வேலையில் சேர்ந்தேன். அங்கன்வாடிப் பணியாளர் என்பதைத் தாண்டி, சமூகநலத் துறை நடத்தும் கலை நிகழ்ச்சிகளில் எனது ஆடல் பாடல் நடிப்புத் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள்.
இப்படித்தான் பொது மேடையில் எனது திறமையைப் பார்த்து மதுரையில் புகழ்பெற்ற நாடகக் குழுக்களான கலை அருவி, யாதவா கல்லூரி நாடகக் குழு, மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகக் கலைக்குழு, முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கலைக்குழு போன்றவை என்னை நடிக்க அழைத்தன. 28 வயதில் முழுவீச்சில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன்.
மறக்க முடியாத பங்கேற்பு
எனது நாடக வாழ்வில் பல சம்பவங்கள் மறக்க முடியாதவை. பெண் சிசுக்கொலை, பெண்கள் பாதுகாப்பு, எய்ட்ஸ், குடும்பக் கட்டுப்பாடு, குடிநோய் மீட்பு, மது ஒழிப்பு, மனநல மேம்பாடு என்பது போன்று பலவிதமான கருத்துகளைக் கொண்ட வீதி நாடகங்களில் 15 ஆண்டுகளாக நடித்திருக்கிறேன்.
தென்னகத்தின் முதல் சுதந்திரப்போராட்ட வீரர், ‘வீரன் அழகுமுத்துக்கோன்’ நாடகத்தில் சித்ராங்கி என்ற வில்லியாக நடித்திருக்கிறேன். சென்னையில் அந்த நாடகம் நடந்தபோது அதைக் காண வந்திருந்த சாருஹாசன், வைரமுத்து, வலம்புரி ஜான், எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் நாடகம் முடிந்ததும் என் நடிப்பை மேடையேறி வந்து மனம் நிறையப் பாராட்டிச் சென்றனர். மதுரை யாதவா கல்லூரிப் பேராசிரியர் மு.ஷாஜகான் கனி ஆராய்ச்சி செய்து, எழுதி, நடித்த அந்த நாடகத்துக்குப் பிறகுதான் தமிழக அரசு வீரன் அழகு முத்துக்கோனுக்கு சென்னையில் சிலை வைக்க முன்வந்தது.
வீரன் அழகுமுத்துக்கோன் நாடகத்தில் என்னைக் கண்ட பேராசிரியர் மு.ராமசாமி, அவரது ‘கலிலியோ’ நாடகத்தில் கலிலியோவின் மகள் வெர்ஜினியாவாக நடிக்க அழைத்தார். சங்கீத நாடக அகாடமி திட்டத்தின் கீழ் டெல்லிவரை நிகழ்த்தப்பட்ட அந்த நவீன நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தபோது, மொழி தெரியாத பல நாடகக் கலைஞர்கள் என்னைப் பாராட்டியதை மறக்க முடியாது.
இத்தனைக்கு நடுவிலும் கடந்த 2014-ல் பூரண மதுவிலக்கு வேண்டும் எனக் கோரி, மதுபோதைக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் மதுரை இளைஞர்கள் 100 நாள் எழுச்சி நடைப்பயணம் நடத்தினார்கள். அதில் பங்கேற்று நடந்தேன். எங்கள் நடைப்பயணத்தில் எங்கெல்லாம் மதுக்கடைகள் கண்ணில் படுகிறதோ, கடையின் முன்னால்போய் குடிநோயாளிக் கணவனால் பட்டினி கிடக்கும் லட்சக்கணக்கான குடும்பத் தாய்மார்களின் பிரதிநிதிபோல் ஒரு ஏழைத் தாயாக, குடியின் தீமையால் குடும்பம் தெருவுக்கு வந்துவிட்ட அவலத்தை எடுத்துக்கூறி நடித்துக் காட்டியது ஆத்ம திருப்தி தந்தது.
தற்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாடகப்பிரிவில் பயின்று பல சிறந்த நாடகங்களை நடத்திவரும் முருகபூபதியின் நாடகக் குழுவில் முக்கிய பங்களிப்பாளராக இருக்கும் பகுருதீன் மற்றும் இயக்குநர் அருண்மொழியும் இணைந்து உருவாக்கியிருக்கும் ‘என் பெயர் காஞ்சரமரம்’ நாடகத்தில் கொமண்டி அப்பத்தாவாக நடித்துவருகிறேன். எழுத்தாளர் கோணங்கியின் படைப்புகளிலிருந்து உருவாகியிருக்கும் இந்த நாடகம் முழுக்க உடல்மொழி சார்ந்தது. 25 வயதுக்கு உட்பட்ட இளம் கலைஞர்களோடு சேர்ந்து நடிக்கும்போது ஏற்படும் உற்சாகத்துக்கு அளவே இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT