Last Updated : 24 Sep, 2017 11:59 AM

 

Published : 24 Sep 2017 11:59 AM
Last Updated : 24 Sep 2017 11:59 AM

பெண் அரசியல் 23: சுரண்டப்பட்டவர்களுக்கு விடுதலை!

மூர்க்கத்தனத்தோடு பாய்ந்த கரடியிடமிருந்து பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான் அந்த ஏழு வயது சிறுமியை மீட்டார்கள். முகத்தின் ஒரு பகுதியைக் கரடி குதறியிருந்தது. உயிரோடு மீட்கப்பட்டாலும் சுயநினைவின்றி ஒரு மாத காலமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். 20 வகையான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும்கூட முகத்தின் முழுமையான வடிவத்தைப் பெற முடியவில்லை. கரடியின் தாக்குதலில் அதுவரை ஆறு பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் சித்தம்மா மட்டும்தான் அதிசயமாக உயிர் பிழைத்தார் என்றும் ஊரே பேசிக்கொண்டது.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்களோடு விடாப்பிடியாக எம்.ஏ. படித்து தேர்ச்சியும் பெற்றார் சித்தம்மா. ஆனாலும் அவர் பெயரோடு கரடி எப்படியோ ஒட்டிக்கொள்ள, ‘கரடி சித்தம்மா’ என்றே அழைக்கப்படடார்.

சேவையின் வழியில்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், சென்னை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்தபோது கட்டிடத் தொழிலாளர் சங்கத் தலைவர் கீதாவையும் அவரது அமைப்பினரையும் சந்தித்தார். அவர்களோடு ஏற்பட்ட தொடர்பால் சேவையின் பக்கமாக ஈர்க்கப்பட்டார். ஒருநாள் இரவு இவர் தங்கியிருந்த வீட்டின் கதவைத் தட்டிய தனம் என்ற பெண் தங்கள் குடிசையை எரித்துவிட்டதாகவும் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்றும் முதலாளியிடமிருந்து தங்களைக் காப்பாற்றுமாறும் அழுகையோடு சொன்னார். அழுகையும் பதற்றமுமாகப் பேசிய தனத்தைப் பார்த்தபோது தான் கரடியிடம் சிக்கியது போல் சித்தம்மாவுக்குத் தோன்றியது. எப்படியும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்குவந்தார்.

இந்தச் சம்பவத்திலிருந்துதான் இருளர் சமுதாய மக்களையும் அவர்களிடையே இருந்த அறியாமை, வறுமை, கொத்தடிமை முறை போன்றவற்றையும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. யாரைப் பார்த்தாலும் அஞ்சி வாழ்கிற இருளர் மக்களைப் பார்க்கிறபோதெல்லாம் கரடியிடம் மாட்டிக்கொண்ட மக்களாகவே சித்தம்மா கண்ணுக்குத் தெரிந்தார்கள். ஆனால், அவர்கள் விலங்குகளுக்குப் பயப்படாதவர்கள் என்பதையும் மனிதர்களுக்குத்தான் பயப்படுகிறார்கள் என்பதையும் பிறகு புரிந்துகொண்டார்.

சென்னையைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருளர் சமுதாய மக்கள் வாழ்கிறரார்கள். துளியூண்டு நிலமோ நிரந்தரக் குடியிருப்போ ரேஷன் அட்டையோ இல்லாத அந்த மக்களிடத்தில் அறியாமையே நிறைந்திருந்தது. மேலும் பல வகையான தொழில்களில் குடும்பம் குடும்பமாகக் கொத்தடிமைகளாவும் இருந்தார்கள். கல்வி, இடஒதுக்கீடு போன்ற எந்தச் சலுகையும் பெறாதவர்களாகவும் பெறமுடியாதவர்களாகவும் இருந்தார்கள்.

இவர்களின் துயரங்களைப் புரிந்துகொண்ட சித்தம்மா, அவர்கள் வாழும் இடங்களிலேயே தங்கி அவர்களில் ஒருவராகப் பணியாற்றத் தொடங்கினார். அதிகாரிகளைச் சந்திப்பது, போராட்டங்களுக்குச் செல்வது என ஒவ்வொன்றாக அந்த மக்களின் இறுக்கத்தைத் தளர்த்தினார். அதனால் அந்த மக்களும் சித்தம்மாவைத் தங்களில் ஒருவராகப் பாவித்து, நேசிக்கத் தொடங்கினார்கள். தங்கள் உரிமைகளுக்காக ஒன்றுசேர்ந்து போராடவும் தொடங்கினார்கள்.

இருளில் வெளிச்சக் கீற்று

திருவள்ளூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாகக் கொத்தடிமைகளாக இருந்த இருளர் சமுதாய மக்கள் 100 பேர், அரிசி ஆலையிலிருந்து சித்தம்மாவின் முயற்சியால்தான் விடுவிக்கப்பட்டார்கள். 1000 பேர்வரை அடையாளம் அறியப்பட்டு அவர்களை மீட்பதற்கான உறுதிமொழியும் அரசிடமிருந்து பெறப்பட்டது.

இருளர் குழந்தைகளின் கல்விக்காக இரவுநேர பாடசாலை தொடங்கப்பட்டு, அங்கிருந்த ஆதிக்க சக்திகளின் தாக்குதலுக்குள்ளாகி அந்தப் பள்ளி இழுத்து மூடப்பட்டது. ஆனாலும் மனம் தளராமல் அதிகாரிகளைச் சந்தித்து அந்தக் கிராமத்தில் நிரந்தரப் பள்ளி தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து அதில் வெற்றியும் பெற்றார்.

பள்ளிக்குச் சென்ற குழந்தைகளுக்குப் பழங்குடியினச் சான்றிதழை முதன்முதலாகப் பெற்றுக் கொடுத்தார். இதுபோன்ற நடவடிக்கைகளின் காரணமாக அந்த மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் சிறு முன்னேற்றத்தைப் பெற்றார்கள். பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடுதல், பாம்பு, எலி, மீன் போன்றவற்றைப் பிடித்தல், இன்ன வேலை என்றில்லாமல் எந்த வேலையையும் கூலி பெறாமலே செய்வது என்று திரிந்த சிறார்களைப் பள்ளிக்கு அனுப்பிவைத்த பெருமை சித்தம்மாவைச் சேரும். இதற்காக அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

பெண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்ததோடு அவர்களுக்கு எழுதப் படிக்கவும் கற்றுத்தந்தார். அப்படி கையெழுத்திடப் பழகிய சாந்தி என்ற இருளர் சமுதாயப் பெண் முதன்முறையாகத் திருக்கண்டலம் பஞ்சாயத்தில் 2011-ம் ஆண்டு வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டியே இல்லாமல் தாம் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சித்தம்மாவும் ‘சர்வம்’ அமைப்புமே காரணம் என நன்றியோடு நினைவுகூர்ந்தார்.

நேர்மையும் உறுதியும்

ஆயிரம் பேர் வாக்காளர்களாக உள்ள இந்த வார்டில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை, குடியிருப்பு வீடுகளுக்கான பட்டா ஆகிய உரிமைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார் சாந்தி. மனைப் பட்டா பிரச்சினையின்போது பெண் என்ற முறையிலும் சாதியையும் சொல்லி இழிவுபடுத்திய சம்பவம் மனதை வருத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு ஊரே அந்த நபரைக் கண்டித்ததாகவும் தெரிவிக்கிறார் சாந்தி.

2015 வெள்ளத்தின்போது கொசஸ்தலை ஆற்றுப் பெருக்கால் கரையோரம் இருந்த இருளர்களின் குடிசைகள் கடும் சேதமடைந்தன. இரவோடு இரவாக அந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், முதியவர்களை டிராக்டர் வண்டியிலேற்றிப் பாதுகாப்பாகப் பள்ளிக்கூடங்களில் கொண்டுபோய் தங்கவைத்தார். வெள்ளப் பெருக்கு கடுமையானதாக இருந்ததைப் பார்த்து சாந்தியை வெளியேறும்படி எச்சரித்தும் அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் குழந்தைகளைத் தோளில் தூக்கிச் சுமந்தபடி பணி செய்ததைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

எந்தப் பதவியை வகித்தாலும் அங்கு மக்களுக்காக உழைக்க வேண்டும் என சாந்தி சொல்வது முக்கியமானது. நேர்மையும் உறுதியும் கொண்ட உழைப்பாளி என இவர் பெயரெடுத்திருக்கிறார். அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த அடித்தட்டு இருளர் சமூக அமைப்பிலிருந்து கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்தாலும் தான் வகித்த பதவியின் உட்பொருளை உணர்ந்து அதை மக்களின் சேவைக்காகப் பயன்படுத்தும் அரசியலையும் அதன் பண்பையும் கற்றுக்கொண்ட சாந்தி, போற்றத்தக்கவர். தன் முக வடிவத்தை எந்த விலங்கு குலைத்ததோ அந்த விலங்கின் பெயரையே தன் பெயரோடு கம்பீரமாக இணைத்துக்கொண்ட சித்தம்மா, இருளடர்ந்த மக்களிடத்தில் ஒரு வெளிச்சக் கீற்றாக நின்றார். எந்த பிரச்சினை என்றாலும் சிதைக்க முடியாதது மனவலிமைதான்; எந்த வறுமையாலும் சிதைக்க முடியாதது நேர்மைதான் என்பதற்கு சாந்தியும் சித்தம்மாவும் நம் முன்னால் வாழும் சான்றுகளாக விளங்குகிறார்கள்.

(முழக்கம் தொடரும்)

கட்டுரையாளர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்

தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x