Published : 03 Sep 2017 11:40 AM
Last Updated : 03 Sep 2017 11:40 AM

விவாதம்: மாதவிடாயை ஏன் மறைக்க வேண்டும்?

சி

ல துளி ரத்தம் தன் மகளின் உயிரையே பறித்துவிடும் என்று அந்தப் பெற்றோருக்குத் தெரியாது. தனது சுடுசொல், ஒரு பிஞ்சு மாணவியின் உயிரைக் குடித்துவிடும் என்று அந்த ஆசிரியர் நினைத்திருக்க மாட்டார். இப்படிச் சிலரின் அறியாமையும் அலட்சியமும் பல குழந்தைகளைப் பலிவாங்கியபடி இருக்கின்றன. அதற்குச் சமீபத்திய சான்று, பாளையங்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவி.

ஏழாம் வகுப்பு படித்த அந்த மாணவிக்கு அன்று மாதவிடாய். எத்தனை கவனமாக இருந்தும் ஆடை நனைந்து அது நாற்காலியையும் நனைத்துவிட்டது. அதைப் பார்த்த ஆசிரியர் கோபத்தில் சத்தம்போட, மனம் உடைந்துபோனார் அந்த மாணவி. வீட்டுக்கு வந்தவர் மறுநாள் அதிகாலை யாருக்கும் தெரியாமல் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து குதித்துத் தன்னை மாய்த்துக்கொண்டார். ‘நான் செத்தே ஆக வேண்டும்’ என்று அந்த மாணவி தன் பெற்றோருக்குக் கடிதம் எழுதிவைத்திருக்கிறார். ஏன் சாக வேண்டும் அந்தச் சிறுமி? மாதவிடாயும் உதிரப் போக்கும் உயிரைப் பறிக்கும் காரணிகளா?

அம்மாவின் வலி தெரியுமா?

இதெல்லாம் பொருட்படுத்தக்கூடிய சம்பவமே இல்லை என்று பலருக்கும் தோன்றலாம். ஆனால், இந்தச் சிறுமியைப் போல் பல பெண் குழந்தைகளும் பெண்களும் ஒவ்வொரு மாதமும் செத்துச் செத்துப் பிழைக்கிறார்கள்.

“அந்தக் காலத்தில் என் அம்மாவும் பாட்டியும் எப்படிக் கட்டுக்கோப்புடன் வாழ்ந்தார்கள் தெரியுமா?” என்ற ஒப்பீட்டுடன் எழுப்பப்படும் கேள்வியைவிடக் கேவலம் வேறில்லை. அவர்களை அன்போடு அணுகிக் கேட்டிருந்தால், அவர்களும் இப்படிப் பல்லாயிரம் வேதனைக் கதைகளை பகிர்ந்திருப்பார்கள். மாதவிடாய் காலத்துத் துணியை மறைத்துவைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் கூரையில் செருகிவைத்த கிராமத்துப் பெண்கள் ஏராளம். காலையில் வயலுக்குக் கிளம்புகிற அவசரத்தில் அவற்றை உதறிப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பிலாமல் கூரையில் இருந்து அப்படியே எடுத்துப் பயன்படுத்தி, அவற்றில் பதுங்கியிருந்த விஷப் பூச்சிகள் கடித்து மாண்டுபோன பெண்களும் உண்டு.

கழனிக் காட்டில் நாள் முழுக்க வேலை செய்யும்போது, மாதவிடாய்த் துணியை மாற்ற வழியிருக்காது. காலையில் பயன்படுத்திய அந்தத் துணியையே அலசிப் பிழிந்து பயன்படுத்தும் பெண்களைப் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. மாதவிடாய்த் துணி உரசுவதால் இரண்டு தொடைகளிலும் ரத்தம் கசிய, ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாமல் கால்களை அகட்டி நடக்கிற பெண்களின் வேதனை உணர்ந்த யாரும், ‘பெண்கள் மாதவிடாய் குறித்துப் பேசலாமா?’ என்று கேட்க மாட்டார்கள்.

மாதவிடாய் நாட்களில் ‘தீட்டு’, ‘வீட்டு விலக்கு’, ‘தூரம்’ என்று சொல்லப்பட்டு வீட்டுக்கு ஒதுக்குப்புறத்திலோ ஊருக்கு ஒதுக்குப்புறத்திலோ பாதுகாப்பற்ற பகுதிகளில் தங்கவைக்கப்பட்டு, பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளான பெண்களும் நம் நாட்டில் நிறைய உண்டு. இப்படி ஒதுக்கிவைப்பது இன்று நவீனத்துவம் அடைந்திருக்கிறதே தவிர, முற்றிலும் ஒழிந்துவிடவில்லை.

மாறிவிட்ட வாழ்க்கை முறை

அன்றைய வாழ்க்கை முறை பல பெண்களுக்கு உடல் வலுவைக் கொடுத்திருந்தது. அதனால் மாதவிடாய் நேரத்து வலியை, அவர்களால் ஓரளவுக்குச் சமாளித்திருக்க முடியும். ஆனால், ஒப்பிடவே முடியாத அளவுக்கு இன்றைய நிலை மோசமாக இருக்கிறது. மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், ரசாயன வீரிய உரங்களாலும் பூச்சிக்கொல்லிகளாலும் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு, நெருக்கடியான வாழ்க்கை முறை போன்றவற்றால் இன்றைக்கு பத்து அல்லது அதற்குக் குறைவான வயதில் பல சிறுமிகள் பருவமடைகின்றனர். பல பெண்களுக்குச் சீரற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு, கருப்பையில் நீர்க்கட்டிகள் உள்ளிட்ட சிக்கல்கள் இளம் வயதிலேயே ஏற்படுகின்றன. முப்பது வயதைக் கடந்த பெரும்பாலான பெண்கள் ஒவ்வொரு மாதமும் கருப்பையோடு போராடியபடியேதான் வாழ்கிறார்கள். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டும் சமாளித்தபடியும்தான் பெண்கள் வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது மனிதத்தன்மையற்ற செயல்.

மாணவிகளின் துயரம்

மாதவிடாய் நாட்களில் பள்ளி மாணவிகள் படும்பாட்டை வார்த்தைகளில் எளிதாக அடக்கிவிட முடியாது. பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறை இல்லை. கழிப்பறை இருந்தாலும் அவற்றில் பெயரளவுக்குக்கூடத் தண்ணீர் வருவதில்லை. பயன்படுத்திய நாப்கின்களை அகற்ற மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டிகள் இருப்பதில்லை. இப்படிப் பல இல்லைகளுக்கு நடுவேதான் லட்சக்கணக்கான மாணவிகள் மாதவிடாயைக் கடந்துவர வேண்டியிருக்கிறது.

எனக்குத் தெரிந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தினமும் வீட்டில் இருந்து நான்கு பெரிய பாட்டில்களில் தண்ணீர் எடுத்துச் செல்வார். காரணம் கேட்டபோது பள்ளியில் தண்ணீர் வசதி இல்லை என்றார். அப்போது அங்கே படிக்கும் மாணவிகளின் நிலை? “என்ன செய்யறது? கிராமமா இருக்கறதால பக்கத்துல இருக்கற பசங்களோட வீட்டுக்குப் போயிட்டு வருவாங்க” என்றார். இந்த நிலையில்தான் இன்று பெரும்பாலான பள்ளிகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட பின்னணியில்தான் மாதவிடாயை நாம் அணுக வேண்டியுள்ளது.

எது அந்தரங்கம்?

ஏற்றுமதி நிறுவனங்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இப்படிப் பெண்கள் பணிபுரியும் பல இடங்களில் பெண்களுக்கான கழிப்பறைகள் குறைந்தபட்ச சுகாதாரத்துடன்கூட இருப்பதில்லை. அலுவலகங்களில் பணியாற்றுகிற பெண்களின் நிலையே இப்படியென்றால் கட்டிட வேலை செய்யும் பெண்கள், காய்கறி விற்பவர், வீடு வீடாகச் சென்று பொருட்கள் விற்பவர் போன்றோரின் நிலைமை நம் கற்பனைக்கு எட்டாதது.

பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்துக்கு உதவும் எந்த அடிப்படை ஏற்பாடுகளும் இல்லாத சமூகத்தில், “பெண்கள் மாதவிடாய் குறித்துப் பேசக் கூடாது. மாதவிடாய் மிகவும் அந்தரங்கமானது” என்பது போன்ற பிற்போக்கு கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். வளர்ச்சியின் ஒரு அங்கம்தான் மாதவிடாய். ஒருவர் வளர வளர உயரம் அதிகரிப்பது, மீசை வளர்வது போன்றவை எல்லாம் எத்தனை இயல்பானவையோ அத்தனை இயல்பான நிகழ்வுதான் மாதவிடாயும். அவற்றையெல்லாம் பெருமையாக நினைக்கிற நம்மில் பலரும், மாதவிடாய், உதிரப்போக்கு என்ற வார்த்தைகளைக் கேட்டாலே அருவருக்கிறோம்.

ஆண்களின் பங்கு அவசியம்

மாதவிடாய், மாதவிடாய் சுகாதாரம் குறித்துப் பெரும்பாலான பெற்றோருக்கே விழிப்புணர்வு இல்லாதபோது அவர்கள் எப்படித் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வார்கள்? இருபாலரும் படிக்கும் பல பள்ளிகளிலும் மாதவிடாய் சுழற்சி, இனப்பெருக்க அமைப்பு போன்ற பாடங்களும் நடத்தப்படுவதில்லை.

“மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் மாதவிடாய் குறித்த சரியான வழிகாட்டுதல் அவசியம். பாலின சமத்துவம், உடற்கூறு, பாலியல் கல்வி போன்றவை பள்ளியிலேயே கற்றுத்தரப்பட வேண்டும். குழந்தைகளுக்கு உணர்வுகளைக் கையாளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். பள்ளியில் பருவமடைகிற அல்லது மாதவிடாய் ஏற்படுகிற குழந்தைகள் மீது அந்தக் காலத்து ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் இருந்த கரிசனம் தற்போது இருப்பதில்லை.

அதிக உதிரப்போக்கு இருந்தால் ஆடை நனையத்தான் செய்யும். அதற்கு அந்தக் குழந்தைகள் என்ன செய்வார்கள்?” என்று கேட்கிறார் சென்னையைச் சேர்ந்த மேம்பாட்டு ஆலோசகரும் ஆய்வாளருமான கீதா நாராயணன்.

மாதவிடாயும் உதிரப் போக்கும் பெண்களின் உடலில் இயற்கையாக ஏற்படும் நிகழ்வுதான். அதைப் பொத்திப் பொத்தி மறைத்துவைக்கத் தேவையில்லை, அருவருக்கவும் தேவையில்லை. அடுத்தவருக்குத் தெரிந்தால் அவமானமாகிவிடுமே என்ற நினைப்பு தேவையற்றது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மாதவிடாய் குறித்தும் அந்த நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஏற்பாடுகள் குறித்தும் கட்டாயம் சொல்லித்தர வேண்டும். எந்தச் சூழலையும் எதிர்கொள்கிற மனப்பக்குவத்துடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

அப்பா, அண்ணன், கணவன், பள்ளியில் உடன் பயிலும் நண்பன், அலுவலக நண்பன் என்று அனைவரிடமும் பெண்கள் தயக்கமின்றி மாதவிடாய் குறித்துப் பேச ஆரம்பிக்க வேண்டும். அப்படிப் பேசுவது தவறு என்ற மூடநம்பிக்கையை தொடர்வதன் மூலம், பெண்ணாகப் பிறப்பதே தவறு என்று சொல்வதாகத்தான் அர்த்தம் கொள்ள முடிகிறது. மாதவிடாய் குறித்தும் அந்த நாட்களில் பெண்கள் படும் வேதனை குறித்தும் உணர்ந்த ஆண்கள் அதைக் கேலிக்குரியதாகவோ கிளர்ச்சிக்குரியதாகவோ அணுக மாட்டார்கள். ஏனென்றால், மாதவிடாய் வலிகளை சமாளிக்கவும் கடந்துவரவும் ஆண்களின் துணையும் புரிதலும் பெண்களுக்கு அவசியம்.

நீங்க என்ன சொல்றீங்க?

தோழிகளே, மாதவிடாய் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் கற்பிதங்களை எப்படிக் களைவது? குடும்பத்திலும் சமூகத்திலும் எத்தகைய மாற்றம் தேவை? இதில் உங்கள் அனுபவம் என்ன? கருத்து என்ன? எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x