Published : 10 Sep 2017 10:56 AM
Last Updated : 10 Sep 2017 10:56 AM
“ஆக்கிரமிப்பை அங்கிருந்து அகற்றிவிட்டால் என் காதில் ஒன்றை அறுத்துக்கொள்கிறேன்” என ஆவேசமாக ஒரு கவுன்சிலர் சவால்விட்டார். அதைக் கேட்டு உண்மையாகவே பயந்துபோனார் திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் சாவித்திரி. சாவித்திரியைத் தேர்ந்தெடுத்திருந்த வார்டில்தான் ஆக்கிரமிப்பு பிரச்சினை இருந்தது.
அவசரத்துக்கு உதவ ஆட்டோகூட தெருவில் நுழைய முடியாத அளவுக்கு சத்யா நகரில் வீடுகள் அமைந்திருந்தன. பலமுறை மாமன்றத்தில் முறையிட்டும், ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றும் வெற்றிபெற முடியவில்லை. சில நாட்களுக்கு முன்னால் உடல்நிலை குன்றியிருந்த ஒருவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல காலதாமதம் ஏற்பட்டதால், சம்பந்தப்பட்டவர் உயிரிழக்க நேரிட்டது. வாகனம் வந்து செல்ல முடியாத தாமதமும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புமே இதற்குக் காரணம்.
இதுகுறித்து சபையில் சாவித்திரி புகார் தெரிவித்தபோதுதான், சக கவுன்சிலர் காதை அறுத்துக்கொள்வதாகத் தெரிவித்தார். இதிலிருந்து பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டார் சாவித்திரி. ஆக்கிரமிப்பை அகற்றும் அதிரடி உத்தரவு, கண்ணிமைக்கும்நேரத்தில் இடித்துத்தள்ளும் இயந்திரங்கள், துணைக்குக் காவல்துறை போன்ற அதிகாரமிக்க நடவடிக்கைகளை நம்பாமல் நேரடியாக அந்த மக்களிடமே பேச்சுவார்த்தையைத் தொடங்கினார் சாவித்திரி.
மக்களோடு மக்களுக்காக
அதன் பிறகு அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் சில மாதங்களில், நீக்கப்பட்டு வாகனங்கள் வந்து செல்கிற வசதியோடு சாலை சீரமைக்கப்பட்டது.
சாவித்திரி என்ற பெயரைச் சரியாகத்தான் சூட்டியுள்ளார்கள் என ‘காது புகழ்’ கவுன்சிலரே பாராட்டினார். ‘உன்னால் முடியாது பெண்ணே’ என்று தளர்வுறச்செய்த சபதம்தான் தன்னைச் சிந்திக்க வைத்ததாகவும் அதிகாரத் தோரணையற்ற செயல்பாடே வெற்றிபெறச் செய்ததாகவும் தெரிவிக்கிறாரர் சாவித்திரி.
கவுன்சிலராகும்வரை சைக்கிள் ஓட்டக்கூடத் தெரியாத சாவித்திரி, மக்கள் பணிக்காக ஸ்கூட்டி ஓட்டக் கற்றுக்கொண்டு யாருடைய தயவுமின்றி வார்டுகளில் பயணிக்கத் தொடங்கினார். தனது ஒரே மகளைப் பள்ளி விடுதியில் சேர்த்துவிட்டு வீட்டு வேலைகளைக் குறைத்துக்கொண்டார்.
கவுன்சிலரை வீட்டிலே பார்க்கக் கூடாது; வீதிகளில்தான் பார்க்க வேண்டும் என்ற புதிய விதியை உருவாக்கிக்கொண்டார். அதனால்தான் 1996, 2001 ஆண்டுகளில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டிலும் 2011-ல் பொது வார்டிலும் போட்டியிட்டு மூன்று முறையும் வெற்றிபெற்றார்.
ஒரு சின்ன வேலை என்றால்கூட முறைப்படி கவுன்சிலர்களைக் கவனிப்பேன் எனக் கூறியபடி வீட்டுக்கு வந்த காண்ட்ராக்டரையும் அவர் கொண்டுவந்த அன்பளிப்பையும் பெற்றுக்கொள்ளாமல் ‘முறைக்கு மாறாக’ திருப்பி அனுப்பினார்.
மாநகராட்சி மூலம் மக்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் வருகிறபோது 20 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிவிடுவார். அதன் மூலம்தான் பெண்களுக்கான நவீனக் கழிவறைகளைக் கட்டித்தர முடிந்தது எனக் கூறுகிற சாவித்திரி, மக்களோடு சேர்ந்து போராடுகிறபோதுதான் சில அத்தியாவசிய தேவைகளைக்கூட மாநகராட்சி மூலம் தம்மால் பெற்றுக்கொடுக்க முடிந்தது என்கிறார்.
இட ஒதுக்கீடு அவசியம்
அரசியல் ஆர்வத்தின் காரணமாக அந்தப் பணியை விட்டுவிட்டு 2001, 2006 தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராகப் பத்தாண்டுகள் செயல்பட்டார் . அதிமுக கட்சி அமைப்பில் தலைமைக் கழகப் பேச்சாளராகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் பங்கேற்கும் கட்சிப் பொது நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
“சட்டமன்றம் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடுஅவசியம் தேவை. உள்ளாட்சிகளில் 50 சதவீத இடத்தை அம்மாதான் பெண்களுக்கு ஒதுக்கினார்” எனப் பெருமையோடு தெரிவிக்கிறார்.
நிதியைப் பெறுவதிலும் சிக்கல்
திண்டுக்கல் மாவட்ட ஊராட்சித் தலைவராக 2006-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதா பார்த்திபன், வேளாண்மை பட்டம் பெற்றவர். திமுக-வின் அரசியல் நிலைப்பட்டால் ஈர்க்கப்பட்டு 2001-ல் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும் பின்னர், மாவட்ட ஊராட்சித் தலைவராகவும் பத்தாண்டுகள் செயல்பட்டவர்.
கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மாவட்ட ஊராட்சிக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு மன்றப் பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முன்னுரிமை அளித்துச் செயல்படும் நிலை உள்ளது. ஆனால், தமிழகத்தில் மாவட்ட மன்றத்தின் பணிகளும் மாவட்ட ஆட்சியரின் பணிகளும் தனித்தனியாகவே உள்ளன.
மாவட்ட ஊராட்சி அமைப்புக்குச் சிறப்புநிதியாக மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கிடையில் ஆறு கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும். ஆனால், அதைப் பெற்றுக்கொடுப்பதில்கூட உரிய ஏற்பாடுகளை நிர்வாகம் கவனிப்பதில்லை. இதற்காகப் பலமுறை டெல்லி சென்றே அந்த நிதியைப் பெற்று சாலை, குடிநீர் வசதிகளைச் செய்துதர முடிந்தது என்கிறார்.
அதிகாரமிக்க மாவட்ட ஊராட்சி அமைப்புகள் பெயரளவில்தான் செயல்படும் நிலை உள்ளது. 22 அரசுத் துறைகளும் மாவட்ட நிர்வாகத்துக்குக் கீழிருந்துதான் செயல்படுகின்றன.
அந்தத் துறைகளின் செயல்பாடு பற்றிக்கூட மக்களால் தேர்வுசெய்யப்பட்ட தலைவர்களால் அறிந்துகொள்ள முடிவதில்லை” என்று சொல்கிறார் கவிதா பார்த்திபன். “எங்களது ஆட்சியில்தான் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மாநாடே நடத்தினோம்” எனப் பெருமையோடு கூறுகிறார்.
அதிகாரம் பெண்கள் கையில்
“ஊராட்சித் தலைவர்களைப் பதவியிலிருந்து நீக்கக்கூடிய அதிகாரத்தை மாவட்ட ஆட்சியரே பெற்றுள்ளார். பிரதமரை ஜனாதிபதியோ முதலமைச்சரை ஆளுநரோ டிஸ்மிஸ் செய்ய முடியாதபோது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களை ஆட்சியர் எப்படி டிஸ்மிஸ் செய்யலாம்? இந்த நடவடிக்கை ஜனநாயகப்பூர்வமானதா?” என்ற கேள்வியைத் தொடுக்கிறார் இதே மாவட்டத்தில் மூன்று முறை காமாட்சிபுரம் பஞ்சாயத்தின் தலைவராகச் செயல்பட்டுவரும் கவிதா.
மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் நடைமுறையில் சுருக்கப்பட்டுவிட்டன என்பதே கவலைக்குரியதுதான். மக்களுக்கும் மாவட்ட நிர்வாக அமைப்புகளுக்கும் இடையில் பாலமாக இருந்து செயல்படக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் பறிக்கப்படுவது ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் செயல்.
மாநில உரிமையை மத்திய அரசு பறித்தாலோ உள்ளாட்சிகளின் உரிமையை மாநில அரசு பறித்தாலோ அது ஜனநாயகத்தையே பலவீனப்படுத்தும்.
சாதி, மதம், ஆணாதிக்கம், நிர்வாகச் சீர்கேடு, நிதிநிலைமைக் குறைபாடு, அதிகாரப் பகிர்வின்மை, அரசியல் பாகுபாடு இன்னும் இதுபோன்ற பல தடைகளையும் கடந்து செல்லும் ஒரு பெண்ணால்தான் அதிகாரத்தில் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது. அதன் பின்னால் அதே பெண் அதே இடத்தில் மீண்டும் மீண்டும் வெற்றிபெறுகிறார் என்பதற்கு அவர் சார்ந்த குடும்பம், கட்சி இரண்டும் சிறு காரணமென்றாலும் பெண் என்ற ஆளுமை முக்கியக் காரணம் என்பதில் சந்தேகமில்லை!
ஆரம்பப் பாடசாலைகளில் குழந்தைகளுக்கு ஆசிரியர்களாகப் பெண்களையே நியமியுங்கள் எனத் தந்தை பெரியார் ஒருமுறை கூறினார். அவர் இப்போதிருந்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழுமையாகப் பெண்களே வரட்டும் என்ற கருத்தை முன்மொழிவார் என்றே தோன்றுகிறது!
(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT