Last Updated : 05 Sep, 2017 05:05 PM

 

Published : 05 Sep 2017 05:05 PM
Last Updated : 05 Sep 2017 05:05 PM

அகம் புறம்: விரல்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்

வீட்டில் உள்ளவர்களுக்குப் பார்த்துப் பார்த்து அனைத்தையும் செய்யும் பெண்கள் பலர், தங்கள் உடல்நலனில் அக்கறை காட்டுவதில்லை. மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், பிசிஓடி, ரத்த சோகை எனப் பெண்களை மட்டும் தாக்கும் நோய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடி இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட சில நோய்கள் குறித்துப் பெண்கள் மத்தியில் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால் பலர் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

மற்றுமோர் எச்சரிக்கை

ஆனால், தற்போது ‘த குவேர்வெய்ன்’ (de Quervain’s tenosynovitis) என்ற நோய்க்குப் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். கையின் கட்டை விரலுக்கும் மணிக்கட்டுப் பகுதிக்கு இடையிலும் இந்த நோயின் தாக்கம் இருக்கும். சாதாரணக் கைவலிதானே, சில நாட்களில் சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருப்பவர்கள் இனி கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் திரைப்பட பாடலாசிரியர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

வீட்டு வேலை செய்வோர், கணினியில் அதிக நேரம் பணிபுரிவோர், கைகளால் நிறையத் துணிகளைத் துவைப்போர் ஆகியோருக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது குறித்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முடநீக்கியல் துறைத் தலைவர் எஸ்.வீரகுமார் கூறும்போது, “கட்டை விரலின் அடிப்பகுதியில் உள்ள எலும்புகளைச் சுற்றியுள்ள தசையின் மேல் பகுதி இறுக்கமாகிவிடும். இதனால் கட்டை விரலை அசைக்கவும் ஒரு பொருளைத் தூக்கவும் மிகவும் சிரமப்படுவார்கள்” என்றார்.

நோயின் அறிகுறிகள்

இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கட்டை விரலைச் சுற்றியுள்ள பகுதியில் அதிக வலி இருக்கும். ஒவ்வொரு நாளும் வலியின் அளவு அதிகரித்துக்கொண்டே போகும்.

“நம் நாட்டில் வலது கை பழக்கம் உள்ளவர்கள் அதிகம். அதனால் இந்நோய் பெரும்பாலும் வலது கையில்தான் ஏற்படுகிறது. முதலில் கட்டை விரல் பகுதியில் வலி தோன்றும். பிறகு வீக்கம் ஏற்படும். வலி அதிகரிக்கும்போது கையை அசைக்கக்கூட முடியாத அளவுக்குச் சென்றுவிடும். ஒரு கிலோ எடையுள்ள பொருளை எடுப்பதற்கு ஐந்து கிலோ பொருளை எடுப்பதற்கான சக்தியைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்” என்கிறார் வீரகுமார்.

வலி உள்ள கட்டை விரலை இன்னொரு கையின் கட்டை விரலால் அழுத்திப் பிடிக்க வேண்டும். இப்போது வலி உள்ள கட்டை விரலை எடுக்க முயல வேண்டும். அப்படி எடுக்கும்போது வலி அதிகமானாலோ கட்டை விரலை மேல் நோக்கி அசைக்க முடியாதவாறு இருந்தாலோ ‘த குவேர்வெய்ன்’ பாதிப்பு இருக்கலாம்.

தீர்வு என்ன?

சாதாரணக் கை வலிதான் எனப் பலர் அருகில் உள்ள பொது மருத்துவரிடம் சென்று வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிடுகிறார்கள். சிலர் மருத்துவரிடம்கூடப் போகாமல் தைலம் தடவுவது, வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது போன்றவற்றைச் செய்வார்கள். ஆனால் இந்த நோய், தீவிரமான வலி மாத்திரைகள் கொடுத்தால்கூடச் சரியாகாது. சில நாள் வலி மறைந்திருந்து பிறகு மீண்டும் வலிக்கத் தொடங்கிவிடும்.

“சில மருத்துவர்கள் வலிக்கு ஊசி போடுவார்கள். ஊசி போடுவதால் வலி இருக்கும் தசைப்பகுதி மேலும் பாதிப்புக்குள்ளாகும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளதால், ஊசி போடுவதை முடநீக்கியல் மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. கட்டை விரல் பகுதியில் தொடர்ச்சியாக வலி இருந்தால் உடனடியாக எலும்பு மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஆரம்ப நிலையில் கண்டறிந்துவிட்டால் பிஸியோதெரபி மூலம் சரிசெய்ய முடியும். ஆனால், நாட்கள் கடந்துவிட்டால், அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு” என்கிறார் வீரகுமார்.

அதனால், கட்டை விரல் பகுதியில் மட்டும் வலி இருந்தால் கைக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். துணி துவைப்பது, பாத்திரங்களைக் கழுவுவது, கணினியில் நீண்ட நேரம் தட்டச்சு செய்வது போன்றவற்றை ஓரளவாவது தவிர்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x