Published : 03 Sep 2017 11:26 AM
Last Updated : 03 Sep 2017 11:26 AM
விடுமுறையில் வீட்டுக்குச் செல்வதென்றால்கூடப் பெற்றோரில் யாராவது ஒருவர் நேரில் வந்தால்தான் விடுதி மாணவிகள் அவர்களோடு அனுப்பப்படுவார்கள். அதுவரை ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி காத்திருக்க வேண்டியதுதான். அப்படிக் காத்திருந்த மாணவிகளில் நானும் ஒருவராக இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் பிணையில் செல்லும் கைதியைப்போன்ற நிலைதான் இருந்தது. இப்போதும் அது மாறிவிடவில்லை. சமூக சூழ்நிலை காரணமாகவோ என்னவோ பல விடுதிகளில் அது இப்போதும் தொடர்கிறது.
இயக்கப் பணியின் தொடக்க காலத்தில்தான் பிணைக்கைதி நிலைமையிலிருந்து நானும் விடுபட்டேன். வெளியூர் செல்லும் வாய்ப்பும் தன்னந்தனியாகச் சென்று வருகிற துணிச்சலும் அதன் பிறகே ஏற்பட்டன. அப்படிச் சென்ற முதல் வெளியூர் பயணமாக சிதம்பரம் இருந்தது. மே தினக் கூட்டத்துக்காக 1993-ல் சென்றேன். கட்டிடக் கலை, நாட்டியக் கலையில் புகழ்பெற்ற, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த கம்பீரமான தில்லை நடராஜர் கோயிலையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல சிறப்புகளையும் ஜான்சிராணி அவர்களோடு நேரில் சென்று பார்த்தபோது திகைப்பாகவே இருந்தது.
கவரிங் நகைகள் செய்வதுதான் அந்த நகரின் முதன்மைத் தொழில். ஒரே ஒரு நூற்பாலை தவிர வேறு தொழிற்சாலைகள் அப்போதும் இல்லை. அந்த நகரத்து மக்களின் வாழ்க்கை ஆலயத்தைச் சுற்றியமைந்த சிறு நடுத்தர வர்த்தகத்தோடு இணைந்ததாக இருந்தது. ஆலயத் திருநகர் என்ற பெயரோடும் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களோடும் சிதம்பரம் அழகான தோற்றப் பொலிவோடு என் மனதில் பதிந்தது.
பதவியைத் தவிர்க்க சண்டை
2006-ல் சிதம்பரம் நகராட்சி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போதைய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் ஒன்றுகூடி தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறையை, சட்டத் திருத்தத்தின் மூலம் மாநில அரசு அமலுக்குக் கொண்டுவந்திருந்தது.
ஆகவே, பெண்கள் நின்ற வார்டுகளில் பலத்த போட்டி நிலவியது. வீடே உலகம் என்றிருந்த பெளஸியா பேகத்தை வேட்பாளராக்குவதற்கு அந்தத் தெருவே கூடிநின்று வற்புறுத்தியது. உறவினர்களும் வலியுறுத்தினார்கள்.
“ஒவ்வொருவரையும் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டு ஓட்டுக்கேட்டால் போதும். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம்” என அங்கிருந்தவர்கள் தைரியம் கூறினார்கள். வெளி ஆள் யாரையாவது திடீரென்று பார்க்க நேரிட்டால்கூட பர்தாவை இழுத்து முகத்தை மறைத்துக்கொள்ளும் இயல்பைக் கொண்ட பெளஸியாவுக்கு அந்த வார்த்தைகள், மேலும் பயத்தையே தந்தன. இத்தகைய பயத்தோடும் தயக்கத்தோடும் வேட்பாளராக நின்று பெளஸியா வெற்றியும் பெற்றார்.
அடுத்த கட்டமாகத் தலைவருக்கு நிற்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தபோது, “எனக்கு என்ன தெரியுமென்று தலைவராகச் சொல்கிறீர்கள்?” என்று கணவரிடம் சண்டை போட்டார். பதவிக்காகச் சண்டை போடும் நாட்டில் பதவி வேண்டாம் என்பதற்காக பெளஸியாவின் வீட்டில் சண்டை நடந்தது. “தினமும் பேப்பர் படி. அதைச் செய்தால் போதும்.
எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம்” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு வியாபாரத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டார் அவருடைய கணவர். அங்குவந்த உறவுப் பெண்களோ, “எதுவும் தெரியாததாகக் காட்டிக்கொள்ளாதே. எல்லாம் தெரியும் என்பதைப் போல் தைரியமாக இரு. பிறகு ஒவ்வொன்றாகத் தெரிந்துகொள்வாய்” என்றார்கள்.
மதச்சார்பற்ற அணுகுமுறை
சிதம்பரம் நகர மன்றத் தலைவருக்குப் போட்டியிட்ட பெளஸியாவை திமுக, காங்கிரஸ், சி.பி.எம். ஆகிய கட்சிகள் ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச்செய்தன. பொதுவான பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட நகராட்சியில் இஸ்லாமியப் பெண்ணொருவரை வெற்றிபெறச்செய்து தலைவராக்கிய முழுப் பெருமையும் மேற்காணும் கட்சிகளையே சேரும் என்று பெளஸியா நன்றியோடு அப்போது நினைவுகூர்ந்தார்.
வீடு, குடும்பம் ஆகிய எல்லைக் கோடுகளைத் தாண்டி வெளியில் வராத, ஒன்பதாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த பெளஸியா, நகரமன்றத் தலைவியாகிவிட்டார். இதுதான் நமது இந்திய அரசியலின் மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்குக் கிடைத்த பெருமை. ஜமாத் பெரியவர்களோ, “எல்லோருக்கும் பொதுவானவராக இருந்து நல்லது செய். நல்ல பெயரை எடு” என வாழ்த்தினார்கள். தில்லை நடராஜர் ஆலயத்தின் தீட்சிதர்களோ மாலை மரியாதையோடு வரவேற்றதோடு அனைத்து விழாக்களிலும் அவரை முன்னிலைப்படுத்தியே விழா எடுத்தார்கள். பூப்பல்லக்கில் நடராஜர் நான்கு வீதியிலும் உலா வருகிறபோது நகராட்சியின் சார்பாக மேலவீதியில் வரவேற்று மரியாதை செலுத்தும் மரபை பெளஸியாவும் தொடர்ந்து கடைப்பிடித்தார்.
மதம் சார்ந்தோ பெண் என்ற முறையிலோ எந்தச் சூழலிலும் எந்தப் பிரச்சினையும் அங்கே எழவில்லை. பெண்ணடிமைத்தனக் கருத்துகளில் எல்லா மதங்களும் ஒன்றாகவே இருந்தாலும், பெண் அரசியலுக்கு வருவதையோ தலைமை வகிப்பதையோ எந்த மதமும் கைநீட்டித் தடுப்பதில்லை. ஆனால், அதற்காக எல்லா தடைகளும் அகன்றுவிடுவதும் இல்லை. இத்தகைய சூழல்களைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேறிச்செல்ல வேண்டியுள்ளது.
ஓயாத மக்கள் பணி
மீன் குஞ்சுகளுக்கு நீந்தக் கற்றுத்தர வேண்டியதில்லை. பெளஸியாவின் பதவிக் காலத்தில் அவருடைய கணவரோ உறவினரோ வேறு எந்த ஆணோ அவரை இயக்கவில்லை. சுதந்திரமான அவரது செயல்பாட்டுக்கு நிர்வாகமும் நகர மன்ற உறுப்பினர்களும் பக்கபலமாகவே நின்றார்கள்.
பெண்கள் என்பதாலோ என்னவோ அவர்கள் வெற்றிபெற்று வந்த இடங்களிலெல்லாம் குடிதண்ணீர் பிரச்சினைக்கே முன்னுரிமையும் முதலிடத்தையும் வழங்குகிறார்கள். பெளஸியாவும் அப்படித்தான். குடிநீர்க் குழாய்கள் அமைத்துக் கொடுப்பதிலும் தினசரித் தேவைக்கான குடிநீர் கிடைப்பதற்குரிய நிர்வாக ஏற்பாடுகளைக் கவனிப்பதிலும் முழுமையாக கவனம் செலுத்தினார்.
வார்டுகள்தோறும் அதிகாரிகளை அழைத்துச் சென்று மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். அவற்றில் எதை உடனடியாகச் செய்ய முடியுமோ, அதை அதிகாரிகள் மூலமாகச் செய்தும் முடித்தார். நிர்வாகமும் மக்கள் சபையும் இரட்டை மாட்டுவண்டியைப் போன்று இணைந்து சென்றால்தான் மக்கள் பணி ஆற்ற முடியும் என்பதை அனுபவத்தில் உணர்ந்துகொண்டிருந்தார். நகரசபைக் கூட்டத்தில் உறுப்பினர்களின் கேள்விகளை அச்சமின்றி எதிர்கொள்வதற்கும் அதற்குரிய பதில்களை வழங்குவதற்கும் குறுகிய காலத்திலேயே அனுபவப்பட்டிருந்தார்.
நகராட்சிப் பணிகளுக்கான ஊழியர்கள் நியமனத்தில் லஞ்சம் ஊடுருவாமல் பார்த்துக்கொண்டார். அப்போது பணி நியமனம் பெற்ற தூய்மைப்பணித் தொழிலாளர்களே, அதற்குச் சாட்சிகளாக உள்ளனர். மோட்டார் இயந்திரங்கள் பழுதுநீக்க வேண்டுமென்றாலோ புதிய இயந்திரங்கள் வாங்க வேண்டியிருந்தாலோ அதன் தரத்தையும் விலைமதிப்பீட்டையும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். கமிஷன் பரிமாற்றங்களைத் தடுப்பதற்கு இவ்வழிகள் உதவியாக இருந்தன.
பெண்களிடம் இயல்பாக இருக்கிற பொறுமை குணம், மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறது. எந்தவொரு செயலையும் நிதானமாகச் சீர்தூக்கிப் பொறுமையோடு செயல்படுத்த பெண்களால்தான் முடியும் என்கிறார் பெளஸியா.
“மேலும் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்த பிறகுதான் அரசு என்றால் என்ன, நகராட்சியின் அதிகார வரம்புகள் என்ன, மக்கள் எத்தகைய பிரச்சினைகளோடு வாழ்கிறார்கள் என்பது போன்றவற்றை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. குடும்பத்தில் எத்தனை ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் புரிந்துகொண்டு கஷ்ட நஷ்டங்களைத் தாங்கி, குடும்பத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுகிற பெண்கள் அரசியலுக்குள் வந்தால், அதன் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொண்டு மக்கள் நலனுக்காகப் பாடுபட மாட்டார்களா?” என்று அர்த்தமுள்ள கேள்வியை முன்வைக்கிறார் பெளஸியா.
அனுபவங்களைச் சிறகுகளாக்கிக்கொண்டால் அரசியல் வானில் பறக்க முடியாமல் போகுமா என்ன?
(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்
தொடர்புக்கு: balabharathi.ka@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT