Published : 03 Sep 2017 11:27 AM
Last Updated : 03 Sep 2017 11:27 AM
பா
கிஸ்தானில் செயல்பட்டுவருகிறது ‘சேஹத் கஹானி’ (ஆரோக்கியத்தின் கதை) என்ற அமைப்பு. இந்த அமைப்பு, பணிபுரியாமல் வீட்டில் இருக்கும் பெண் மருத்துவர்களை ‘வீடியோ கான்ஃபரன்சிங்’ வழியாகக் கிராமப்புற பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வைக்கிறது. கடந்த சர்வதேச மகளிர் தினத்தன்று சாரா குர்ரம், இஃப்பத் ஸஃபர் என இரண்டு பெண் மருத்துவர்களால் இந்தத் தொலைசுகாதார (Telehealth) அமைப்பு தொடங்கப்பட்டது. பணிவாழ்க்கையைத் தொடர முடியாமல் வீட்டில் இருக்கும் பெண் மருத்துவர்களையும் மருத்துவ வசதியை நேரடியாகப் பெற முடியாத கிராமப்புறப் பெண்களையும் பின்தங்கிய சமூகப் பெண்களையும் இந்த அமைப்பு இணைக்கிறது.
குடும்பமா, வேலையா?
பாகிஸ்தானில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,77,000 பேர் மருத்துப் படிப்பை நிறைவுசெய்கிறார்கள். இதில் 49 சதவீதம் (86,396) பெண் மருத்துவர்கள். ஆனால், இந்தப் பெண்களில் கிட்டத்தட்ட 23 சதவீதத்தினர் மருத்துவப் படிப்பை முடித்த பிறகு பணியாற்றுவதில்லை என்கிறது பாகிஸ்தான் மருத்துவ - பல் மருத்துவக் கூட்டமைப்பு. திருமணம், குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான பெண்கள் பணிவாழ்க்கையிலிருந்து விலகிவிடுகின்றனர்.
பெண் மருத்துவர்களின் மனித ஆற்றல் சமூகத்துக்குப் பயன்படாமல் இப்படி வீணாவதைப் பற்றி யோசித்த மருத்துவர்கள் அஷேர் ஹஸன், சாரா குர்ரம், இஃப்பத் ஸஃபர் ஆகிய மூவரும் இணைந்து ‘doctHers’ என்ற அமைப்பை 2015-ம் ஆண்டு தொடங்கினர். இந்த அமைப்பின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலிருந்தே பெண் மருத்துவர்கள் பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, அந்த அமைப்பிலிருந்து விலகிய மருத்துவர்கள் சாரா குர்ரமும் இஃப்பத் ஸஃபரும் இணைந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘சேஹத் கஹானி’யை உருவாக்கினார்கள்.
“பாகிஸ்தானில் மருத்துவம் படித்த மருமகள் வேண்டுமென்று பலரும் விரும்புகிறார்கள். ஆனால், அதில் பெரும்பாலானவர்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் மருமகளை, மனைவியை மருத்துவமனைக்குப் பணியாற்ற அனுப்புவதில்லை. குழந்தை பிறந்த பிறகு அதையே காரணம் காட்டி, அவர்களின் மருத்துவப் பணிவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றனர். இதனால், பாகிஸ்தானில் பெண் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இந்தப் பற்றாக்குறையை எங்கள் அமைப்பின் மூலம் தீர்க்க முயன்றுவருகிறோம்.
அதற்கு நாங்கள் பயன்படுத்திய தொலைசுகாதார முறை வெற்றி தந்திருக்கிறது. பெண் மருத்துவர்கள் வீட்டிலிருந்தே பணிவாழ்க்கையைத் தொடர்கிறார்கள். கிராமப்புறப் பெண்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கிறது” என்று சேஹத் கஹானியின் யூடியூப் சேனலில் விளக்குகிறார் இதன் இணை நிறுவனர் சாரா குர்ரம்.
லட்சக்கணக்கானோருக்கு மருத்துவம்
சேஹத் கஹானியின் இந்தத் தொலைசுகாதார முறையில் கராச்சி, சிந்து, பஞ்சாப் (பாகிஸ்தான்) உள்ளிட்ட பகுதிகளில் பதினான்கு இணையவழி சுகாதார மையங்கள் செயல்படுகின்றன. ‘மெய்நிகர் சுகாதார மையங்கள்’ என்று அழைக்கப்படும் இந்த மையங்களில், மருத்துவர்கள் ‘வீடியோ கான்ஃபரன்சிங்’ மூலம் நோயாளிகளிடம் பேசி, சிகிச்சை அளிக்கின்றனர். இதுவரை 40,000 பேர் இந்த மருத்துவ முறையால் நேரடியாகப் பயன் பெற்றிருக்கின்றனர்.
மேலும் 2,50,000 பேர் மறைமுகமாகப் பயன்பெற்றிருக்கின்றனர். இந்த மையங்களால் கிராமப்புறப் பெண்களுக்குக் கிடைக்கும் மருத்துவ வசதி மேம்பட்டிருக்கிறது. இந்த மருத்துவர்கள், உள்ளூர் சுகாதார ஊழியர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். அதனால் இளம் தாய்மார்களும் வளரிளம் பெண்களும் ‘சேஹத் கஹானி’யின் மையங்களுக்குப் பெருமளவில் செல்கின்றனர்.
2020-ம் ஆண்டுக்குள் 50 இணையவழி சுகாதார மையங்களை அமைக்க வேண்டும், வீட்டிலிருந்தே பணியாற்றும் 10,000 பெண் மருத்துவர்களை இணைக்க வேண்டும் ஆகிய உயர்ந்த இலக்குகளோடு ‘சேஹத் கஹானி’ செயல்பட்டுவருகிறது. இந்த இலக்கை எட்டுவதன் மூலம் 81 லட்சம் பேருக்கு மருத்துவ உதவியைக் வழங்க இருக்கிறது ‘சேஹத் கஹானி’.
மேலும் விவரங்களுக்கு: http://sehatkahani.com/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT