Last Updated : 03 Sep, 2017 11:22 AM

 

Published : 03 Sep 2017 11:22 AM
Last Updated : 03 Sep 2017 11:22 AM

நாட்டு நடப்பு: பாலியல் அடிமையா மனைவி?

தி

ருமண உறவு என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதமாகக் கருதப்படும் நம் நாட்டில், பெண்கள் மீது ஏவப்படும் வன்முறைகளில் பெரும்பாலானவை திருமணத்தின் பெயராலேயே நடக்கின்றன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு, பெண்களின் அடிப்படை உரிமைகளை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. கணவன், மனைவியைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவது கிரிமினல் குற்றம் ஆகாது என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, மனைவியைப் பாலியல் வல்லுறவு செய்வது குற்றமல்ல எனக் கூறியிருப்பது, மனைவி என்கிற பெயரில் ஒரு பெண்ணை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கும் ஆண்களைத் தூண்டிவிடுவதுபோல் ஆகாதா என்ற விவாதமும் எழுந்திருக்கிறது. தவிர, வெளிநாட்டுப் பண்பாட்டைப் பார்த்துத் திருமண உறவை மாற்ற முயல வேண்டாம் என்ற மத்திய அரசின் அறிக்கைக்கு, பெண்ணியச் செயல்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

ஐ.நா. சபை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்று, இந்தியப் பெண்களில் 75 சதவீதத்தினர் ஏதோ ஒரு சூழ்நிலையில் கணவர்களால் கட்டாய பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறது. சிக்கல் நிறைந்த நம் குடும்ப அமைப்பில், தங்களுக்கு நேரும் குடும்ப வன்முறைகளைப் பெண்களில் பெரும்பாலானோர் வெளியே சொல்வதில்லை. குடும்ப கவுரவம், குழந்தைகளின் எதிர்காலம், பொருளாதாரத் தேவை உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் பல கொடுமைகளையும் சகித்துக்கொண்டு வாழ வேண்டியிருக்கிறது. குடும்ப வன்முறைகளின் உச்சகட்டம், பாலியல் வல்லுறவு.

தங்களுக்கு நேர்வது பாலியல் வல்லுறவு என்னும் கொடுமை என்ற தெளிவுகூடப் பெரும்பாலான பெண்களுக்கு இல்லாத நம் நாட்டில், குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் போன்றவை பெண்களைப் பாதுகாக்கும் கேடயமாக இருக்கின்றன. இந்நிலையில் மத்திய அரசின் இந்தச் செயல், பெண்களின் பாதுகாப்பை அசைத்துப் பார்க்கிறது. திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்கினால், அதை ஆண்களுக்கு எதிராகப் பெண்கள் பயன்படுத்தக்கூடும் என்கிற குரல்களும் கேட்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x