Published : 11 Dec 2016 12:48 PM
Last Updated : 11 Dec 2016 12:48 PM
ஜீதமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘டார்லிங் டார்லிங்’ தொடரில் கோவை பாஷை பேசும் ‘ருக்கு’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நந்தினி.
“சின்னத்திரையில் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தைக் கொடுத்தது ‘சரவணன் மீனாட்சி’ மைனா கதாபாத்திரம். அதில் மதுரைக்காரப் பெண்ணாகக் கொஞ்சம் அதட்டலோடு காரசாரமாகப் பேசியிருப்பேன். அதுக்கு நேரெதிராக மரியாதையும் வெகுளித்தனமும் கலந்து, கோவை பாஷை பேசுகிற பெண்ணாக ‘டார்லிங் டார்லிங்’ தொடரில் நடித்துவருகிறேன். எதிரெதிர் வீடுகளில் வசிக்கும் இரு குடும்பங்களில் நடக்கும் குழப்பங்களையும், அந்தக் குழப்பத்தினால் ஏற்படும் கலவரங்களையும் நகைச்சுவையோடு சொல்வதுதான் இந்தத் தொடரின் சிறப்பு. எல்லோருக்குமே ரொம்பப் பிடிக்கும். சென்னை பாஷை பேசி நடிக்கணும்கிறதுதான் என்னோட ரொம்ப நாள் ஆசை. மதுரையிலிருந்து இப்போ கோவை வந்துட்டேன். அடுத்து சென்னைதான்’’ என்கிறார் நந்தினி.
மறக்க முடியாத ஆண்டு
கலைஞர் தொலைக்காட்சியில் ‘தென்பாண்டிச் சிங்கம்’ தொடரில் நடிப்பு, புதுயுகம் தொலைக்காட்சியில் ‘டாக்டர் ஆன் கால்ஸ்’ நிகழ்ச்சித் தொகுப்பாளினி என்று அசத்திவருகிறார் கிருத்திகா ராஜா.
“ஒரே நேரத்தில் தொகுப்பாளினி, நடிகை என்று ஓடிக்கிட்டிருக்கேன். அதுவும் தொடரில் தூய தமிழில் பேசணும். தொகுப்பாளினியா தமிழ், ஆங்கிலம் கலந்து பேசணும். இந்த அனுபவமே வித்தியாசமா இருக்கு. இப்படி ஒரு சந்தோஷமான சின்னத்திரைப் பயணத்தைக் கொடுத்த இந்த ஆண்டு, இன்னும் சந்தோஷமான திருமண வாழ்க்கையையும் கொடுத்திருக்கு. ஏழு வருஷமா காதலிச்சிக்கிட்டிருந்த ராஜாவும் நானும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பயணங்கள்தான் எங்களோட பொழுதுபோக்கு” என்கிறார் கிருத்திகா ராஜா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT