Published : 17 Dec 2016 04:48 PM
Last Updated : 17 Dec 2016 04:48 PM
இன்று காலம் ஓரளவு மாறிவிட்டது. திருமணம் முடிந்த பிறகே கணவனை ஏறெடுத்துப் பார்க்கும் நிலை இன்று இல்லை. பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் ஏற்பாட்டுத் திருமணங்களில்கூட மணமக்கள் மனம்விட்டுப் பேசுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் சில மாதங்களாவது நேரம் இருக்கிறது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடைபெறுவதற்குள் இருக்கும் இந்த நேரத்தில் ஆண், பெண் இருவருமே ஒருவரையொருவர் எந்தளவுக்குப் புரிந்துகொள்கின்றனர் என்பது கேள்விக்குறிதான்.
அத்துடன், காதல் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களைவிட ஏற்பாட்டுத் திருமணங்களில் இருக்கும் சிக்கல்கள் இன்றைய சூழலில் அதிகரித்திருக்கின்றன. இந்தச் சிக்கல்களைத் தாண்டி எப்படித் தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தேன் என்பது பற்றி நஸ்ரீன் ஃபஸல் என்ற இளம்பெண், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் பகிர்ந்திருந்தார். அவருடைய அனுபவத்தை ஃபேஸ்புக்கில் இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பகிர்ந்திருந்தனர். பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் ‘லைக்’செய்திருக்கின்றனர்.
நஸ்ரீன் ஃபஸல் ஒர் இளம் எழுத்தாளர். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்திருக்கிறார். கடந்த நான்கு மாதங்களுக்குமுன் இவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. தற்போது கணவர் அமீனுடன் சவுதி அரேபியாவில் வசித்துவருகிறார். தன்னுடைய ஏற்பாட்டுத் திருமணம் வெற்றிகரமாக அமைந்ததற்கு நஸ்ரீன் கூறியிருக்கும் காரணங்கள் பலரையும் ஈர்த்திருக்கின்றன.
என் கணவரை முதல்முறை சந்தித்தபிறகு, என்னைப் பற்றிய அறிமுகத்தை இரண்டு பக்கங்களுக்கு அவருக்கு எழுதி அனுப்பினேன். ஒரு பக்கத்தில், நான் யார் என்பதைத் தெரிவித்திருந்தேன். இன்னொரு பக்கத்தில் என்னுடைய வாழ்க்கைத் துணையிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்குப் பதிலாக, அவர் தன்னைப் பற்றிய மூன்று குறிப்புகளையும், எனக்கு நேரடியான மூன்று கேள்விகளையும் அனுப்பியிருந்தார்.
ஒருவரையொருவர் புரிந்துகொள்ளத் தொடங்கிய இந்த முதல் வாரத்தில் நாங்கள் 80 மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டோம்! ஆமாம், எண்பது மின்னஞ்சல்கள். இந்த மின்னஞ்சல்களில் அற்பத்தனமான எந்த விஷயங்களையும் நாங்கள் பேசவில்லை. முழுக்க முழுக்க எங்களுடைய வாழ்க்கையின் முன்னுரிமைகள், எதிர்காலம், வாழ்க்கைத் துணையிடம் இருக்கும் எதிர்பார்ப்புகள் பற்றித் தொடர்ந்து விவாதித்தோம். பெரும்பாலான கேள்விகளை நான்தான் முன்வைத்தேன்.
‘பெண்கள் வேலைக்குச் செல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’, ‘முறைகேடு’ Abuse பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’, ‘எப்போது குழந்தைகள் வேண்டுமென்று நினைத்திருக்கிறீர்கள்?’… இப்படிப் பல கேள்விகளைக் கேட்டேன். அவர் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதிலளித்தார். இப்படி இருவரும் திருமணத்தை உறுதிப்படுத்த இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டோம். இந்த முறையான அறிமுகம்தான் எங்கள் உறவின் அடித்தளம்.
நம்முடையது ஒரு வேடிக்கையான கலாசாரம். ஓர் உணவகத்தில் உணவைத் தேர்வு செய்யப் பல மணி நேரம் எடுத்துக்கொள்வோம். ஆனால், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போதுமட்டும், ஓர் ஆணும் பெண்ணும் சில மணிநேரங்களில் (சில சமயங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக) அதைத் தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இதில் எந்த நியாயமுமில்லை என்று நீள்கிறது நஸ்ரீனின் விவரம்.
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் கட்டத்திலிருக்கும் பெண்கள் நஸ்ரீன் சொல்லியிருக்கும் விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உணர்வுகள், ஆன்மிகம், பணி வாழ்க்கை, நிதி நிலைமை, உடல் சார்ந்த எதிர்பார்ப்புகள் போன்ற விஷயங்களைத் திருமணத்துக்குமுன் பேசிவிடுவது நல்லது. கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டு, பேச வேண்டிய விஷயங்களை நேரடியாகப் பேசித் தெளிவு பெற்றபின் திருமணத்தை உறுதிசெய்வதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்.
பெற்றோர் முடிவுசெய்துவிட்டார்கள், அவர்கள் நமக்கு நல்லதுதான் செய்வார்கள் என்ற வழக்கமான வரையறைக்குள் சிக்கிக்கொள்ளாமல் உங்கள் பார்வையிலிருந்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்கள். வாழ்க்கை குறித்த தெளிவுடன், ஒத்துப்போகும் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும்போது, அது மகிழ்ச்சியானதாகவும் வெற்றிகரமானதாகவும் இருக்கிறது என்ற உண்மையை நஸ்ரீன் தன் அனுபவத்தின் மூலம் உறுதிபடுத்தியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT